வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் திலக் மாரப்பன அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், ஒருங்கிணைந்த நடமாடும் கொன்சியூலர் சேவையானது நுவரெலியா மாவட்ட செயலகத்தின் உதவியுடன் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சினால் இந்த ஆண்டில் எட்டாவது தடவையாக 2019 செப்டம்பர் 14 ஆந் திகதி சனிக்கிழமை மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. இதற்கு முன்னர் அமைச்சு ஒருங்கிணைந்த நடமாடும் கொன்சியூலர் சேவைகளை திருகோணமலை, கண்டி, குருநாகல், தம்புள்ளை, அனுராதபுரம், புத்தளம் மற்றும் மன்னார் ஆகிய இடங்களில் நடாத்தியுள்ளது.
நடமாடும் சேவைகளின் போது, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் மற்றும் அமைச்சின் கொன்சியூலர் விவகாரங்களுக்கான பணிப்பாளர் நாயகம் திரு. யு.எல். முகம்மத் ஜவுஹர் ஆகியோர் பொது மக்களின் குறைகளைக் கேட்டறிந்து, அவற்றுக்கான தீர்வுகளை வழங்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கினர். வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு, குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம், பதிவாளர் நாயகத் திணைக்களம் மற்றும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் ஆகியன அமைச்சின் கொன்சியூலர் அலுவல்கள் பிரிவின் அதிகாரிகளுடன் இணைந்து இந்த ஒருங்கிணைந்த நடமாடும் கொன்சியூலர் சேவையில் பங்குபற்றியிருந்தன.
இந்த மாவட்டங்கள் மற்றும் அதன் அண்மித்த பகுதிகளைச் சேர்ந்த மக்களுக்கு வழங்கப்பட்ட சேவைகளில், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் கல்வி போன்ற தேவைகளுக்காக ஆவணங்களை சான்றுறுதிப்படுத்தல், வெளிநாடுகளில் கைவிடப்பட்ட மற்றும் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் இலங்கையர்களின் குடும்பங்களுக்கு உதவிகளை வழங்குதல், வெளிநாடுகளில் நிகழ்ந்த பிறப்புக்கள், திருமணங்கள் மற்றும் இறப்புக்களை பதிவு செய்தல், இழப்பீடுகளுடன் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் தொடர்பான உதவி மற்றும் வெளிநாடுகளில் இருந்து பொலிஸ் தடைநீக்கச் சான்றிதழ்களைப் பெறுவதற்கான உதவி ஆகியன உள்ளடங்குகின்றன.
இந்த வருடத்தில், 'ரட வெனுவென் எக்கட சித்திமு' தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் அம்பாறை, மட்டக்களப்பு, முல்லைதீவு, மொனராகலை, திவுலபிட்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய இடங்களில் நடைபெற்ற நடமாடும் சேவைகளிலும் அமைச்சு பங்குபற்றியது. இந்த நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் திவுலபிட்டியில் நடைபெற்ற நடமாடும் சேவையில் வெளிவிவகார செயலாளர் திரு. ரவிநாத ஆர்யசிங்க கலந்து கொண்டதுடன், அமைச்சின் கூடத்திற்கு விஜயம் செய்து, ஜனாதிபதியின் தலைமையில் நடைபெற்ற முன்னேற்ற ஆய்வுக் கூட்டத்திலும் பங்கு பற்றினார்.
'ராஜ்ய சேவய கமட கென யன ஜனதா சேவய' என்ற தேசியத் திட்டத்தின் கீழ் மாத்தளையிலும், 'எண்டர்பிரைஸ் ஸ்ரீ லங்கா' திட்டத்தின் கீழ் அனுராதபுரம் மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பிரதேசங்களிலும் இந்த வருடத்தில் அமைச்சினால் நடமாடும் சேவைகள் நடாத்தப்பட்டன.