அமைச்சின் கொன்சியூலர் பயணத்தின் ஒரு பகுதியாக, தொலைதூர பகுதிகளிலுள்ள பொது மக்களுக்கு பயனளிக்கும் வகையில், வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் திலக் மாரப்பன அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், அமைச்சு ஒருங்கிணைந்த கொன்சியூலர் நடமாடும் சேவைகள் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை 2019 ஆகஸ்ட் 9 மற்றும் 10 ஆகிய திகதிகளில் முறையே குருநாகல் மாவட்ட செயலகம் மற்றும் தம்புள்ளை பிரதேச செயலகம் ஆகியவற்றில் ஏற்பாடு செய்தது.
குருநாகல் மற்றும் தம்புள்ளையில் நடைபெற்ற ஒருங்கிணைந்த நடமாடும் கொன்சியூலர் சேவைகளின் போது, பல்வேறு கொன்சியூலர் பிரச்சினைகள் குறித்து அமைச்சின் உதவியை நாடிய வருகையாளர்களுடன் அமைச்சர் மாரப்பன கலந்துரையாடியதுடன், அவர்களின் குறைகளை தீர்க்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கினார்.
இந்த நடமாடும் சேவைகளின் போது, வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம், பதிவாளர் நாயகத்தின் திணைக்களம் மற்றும் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் ஆகியவற்றின் சேவைகளை குருநாகல் மற்றும் தம்புள்ளையிலுள்ள பொதுமக்களும் பெற்றுக் கொள்ளும் வண்ணம் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு ஏற்பாடு செய்திருந்தது.
இந்த ஒருங்கிணைந்த கொன்சியூலர் நடமாடும் சேவைகள் மூலம், குருநாகல் மாவட்டத்தின் 30 பிரதேச செயலகங்கள், மாத்தளை மாவட்டத்தின் 11 பிரதேச செயலகங்கள் மற்றும் அருகிலுள்ள பகுதிகளைச் சேர்ந்த பொது மக்கள் அமைச்சின் உதவியைப் பெற்றுக்கொண்டனர்.
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு,
கொழும்பு
2019 ஆகஸ்ட் 23