வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு தனது ஒருங்கிணைந்த நடமாடும் கொன்சியூலர் சேவைகளை அனுராதபுரம் மற்றும் புத்தளம் மாவட்டங்களில் முறையே ஆகஸ்ட் 17 மற்றும் 19 ஆகிய திகதிகளில் நடாத்தவுள்ளது.
இந்த நடமாடும் கொன்சியூலர் சேவைகள் கொழும்பு மற்றும் தொடர்புடைய மாவட்டங்களைச் சேர்ந்த பங்காண்மை அமைப்புக்களுடன் ஒருங்கிணைந்து வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சினால் நடாத்தப்படும்.
கௌரவ வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சரின் வழிகாட்டல் மற்றும் அறிவுறுத்தல்களின் கீழ் நடாத்தப்படும் இந்த நடமாடும் சேவைகளின் வாயிலாக, அனுராதபுரம் மற்றும் புத்தளம் மாவட்டங்களில் வதியும் பொதுமக்கள் ஆவணங்களை அத்தாட்சிப்படுத்துதல், வெளிநாட்டில் கைவிடப்பட்ட மற்றும் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையர்களின் குடும்பங்களுக்கான உதவிகள், வெளிநாடுகளில் நிகழும் பிறப்பு மற்றும் இறப்புக்களை பதிவு செய்தல் மற்றும் இழப்பீடு சார்ந்த பிரச்சினைகள் தொடர்பான உதவி போன்றன உள்ளடங்கலான பல்வேறு கொன்சியூலர் சேவைகளை பெற்றுக்கொள்ள முடியும். மேலும், இந்த நடமாடும் சேவையின் போது, வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தூதரகங்களின் தொடர்பு கொள்ளும் தகவல்களையும், வெளிநாட்டில் வதியும் மற்றும் வெளிநாட்டிற்கு பயணம் செய்யும் இலங்கையர்களுக்கு அந்த தூதரகங்கள் வழங்கும் சேவைகள் தொடர்பான தகவல்களையும் பொதுமக்கள் பெற்றுக்கொள்ள முடியும்.