இலங்கைக்கான தனது உத்தியோகபூர்வ விஜயத்தை 2019 ஜூலை 18 - 26 முதல் ஆரம்பித்துள்ள, சுதந்திரமாக ஒன்றுகூடுவதற்கும் அமைதியாக ஒருங்குசேர்வதற்குமான உரிமைகளுக்கான ஐ.நா.வின் விஷேட அறிக்கையாளர் திரு. க்ளெமென்ட் நைலெட்சோசி வோல் அவர்கள், வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் திலக் மாரப்பன அவர்களை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் வியாழக்கிழமை (ஜூலை 18) சந்தித்தார்.
சட்டத்தின் ஆட்சி மற்றும் ஜனநாயகத்தை நிலைநிறுத்துவதற்கானதும், மனித உரிமைகளின் மேம்பாடு மற்றும் பாதுகாப்பு குறித்த ஐ.நா. உள்ளிட்ட சர்வதேச சமூகத்துடன் ஈடுபடுவதுமான புதிய பாதையில் பயணிக்கும் தற்போதைய அரசாங்கத்தின் கீழ் ஒன்றுகூடுவதற்கான மற்றும் அமைதியாக ஒருங்குசேர்வதற்கான சுதந்திரம் பொதுமக்களுக்கு உத்தரவாதமளிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் மாரப்பன சுட்டிக்காட்டினார். அவசரகால விதிகள் நடைமுறையில் காணப்படினும் கூட, ஒன்றுகூடுவதற்கும் அமைதியாக ஒருங்குசேர்வதற்குமான சுதந்திரமானது மட்டுப்படுத்தப்படவில்லை என்றும் ஈஸ்டர் ஞாயிறு தின தாக்குதல்களுக்குப் பின்னர் நாட்டில் பல எதிர்ப்புக்கள் / தொழிற்சங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
அண்மையில் ஏப்ரல் மாதத்தில் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதல்களுக்கு விஷேட அறிக்கையாளர் தனது இரங்கலைத் தெரிவித்ததோடு, சம்பவங்களுக்குப் பின்னர் மீட்சி பெறவும், சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்தவும் முடிந்தமையையிட்டு அவர் நாட்டிற்கு தனது பாராட்டுக்களைத் தெரிவித்தார்.
வெளிவிவகார செயலாளர் ரவிநாத ஆரியசிங்க அவர்களின் தலைமையின் கீழான சம்பந்தப்பட்ட அரச அதிகாரிகளின் பங்குதாரர்களின் சந்திப்பிலும் விஷேட அறிக்கையாளர் மற்றும் அவரது குழுவினர் கலந்து கொண்டனர். வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு, பாதுகாப்பு அமைச்சு, இலங்கை பொலிஸ், கௌரவ சட்டமா அதிபர் திணைக்களம், தொழிலாளர் திணைக்களம், தேசிய ஒருங்கிணைப்பு, அரச கரும மொழிகள், சமூக மேம்பாடு மற்றும் இந்து மத விவகாரங்கள் அமைச்சு, நிதி அமைச்சு, முதலீட்டு சபை (BOI) மற்றும் இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனம் (ஐ.சி.டி.ஏ) ஆகியன உள்ளடங்கலான அரச முகவர்ளின் பிரதிநிதிகள் இந்த சந்திப்பில் பங்கேற்றனர்.
பரிசோதனை நேரங்கள் முழுவதிலும் கூட ஐ.நா. மற்றும் சர்வதேச சமூகத்துடன் இலங்கை தொடர்ந்தும் ஈடுபட்டு வந்ததாக வெளிவிவகார செயலாளர் சுட்டிக்காட்டினார். ஒன்றுகூடுவதற்கான மற்றும் அமைதியாக ஒருங்குசேர்வதற்கான சுதந்திரம் தொடர்பாக மேற்கொள்ளப்படும் அளவீடுகள் மற்றும் எதிர்கொள்ளும் சவால்கள் ஆகிய இரண்டிலும் ஒரு சமமான முன்னோக்கைப் பெற்றுக்கொள்வதற்கு உதவுவதாக அமையும் சம்பந்தப்பட்ட அனைத்து பங்குதாரர்களுடனும் விஷேட அறிக்கையாளர் ஈடுபடுவதன் முக்கியத்துவத்தையும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
விஷேட அறிக்கையாளர் கொழும்பு மற்றும் நாட்டின் வடக்கு, கிழக்கு மற்றும் தென் மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் விஜயம் மெற்கொள்ளவுள்ளார். விஷேட அறிக்கையாளர் தனது விஜயத்தின் போது, அரச அதிகாரிகள், சிவில் சமூகம் மற்றும் தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு ஆகியோரையும் சந்திக்கவுள்ளார். நாட்டின் பிற பங்குதாரர்களுடன் இணைந்து அவர் ஐக்கிய நாடுகள் சபை அமைப்பு மற்றும் பிற சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகளையும் சந்திப்பார். விஜயத்தின் முடிவில், 26 ஜூலை 2019 அன்று அரசாங்க பங்குதாரர்களுக்கான ஒரு விளக்கவுரை இடம்பெறும். அதன்பின்னர், ஜூலை 26 அன்று ஒரு பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெறுவதுடன், அதில் விஷேட அறிக்கையாளரின் ஆரம்ப கண்டறிதல்கள் ஊடகங்களுடன் பகிரப்படும். விஷேட அறிக்கையாளர் தனது விஜயத்தைத் தொடர்ந்து, நாட்டின் விஜயம் தொடர்பான தனது அறிக்கையை 2020 ஜூன் மாதம் நடைபெறவுள்ள மனித உரிமைகள் பேரவையின் 44வது அமர்வில் சமர்ப்பிப்பார்.
2015ஆம் ஆண்டில் அனைத்து விடயங்களுக்குமான ஐ.நா. வின் விஷேட அதிகாரமுடையோருக்கும் மேற்கொள்ளப்பட்டிருந்த அழைப்புக்களின் பிரதிபலிப்பாக, அரசாங்கத்தால் சிறப்பு அறிக்கையாளருக்கு வழங்கப்பட்ட அழைப்புக்கிணங்க, இந்த விஜயம் இடம்பெறுகின்றது. அப்போதிருந்து, இலங்கைக்கு 08 விஷேட அதிகாரமுடையோர் வருகை தந்துள்ளதுடன், இந்த வருடம் சித்திரவதையை தடுப்பதற்கான உப குழு 2019 ஏப்ரல் 2 - 12 வரையான காலப்பகுதிக்கு இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தது. இந்த விஜயத்திற்கு மேலதிகமாக, இலங்கைக்கு இந்த வருடம் மேலும் இரண்டு ஐ.நா. வின் விஷேட அதிகாரமுடையோர் வருகை தரவுள்ளனர், அதாவது ஆகஸ்ட் 15 - 24 வரையான காலப்பகுதியில் மத அல்லது நம்பிக்கை சுதந்திரம் குறித்த விஷேட அறிக்கையாளரும், இந்த வருடத்தின் அக்டோபர் 28 முதல் நவம்பர் 8 வரையான காலப்பகுதியில் பாலியல் நோக்குநிலை மற்றும் பாலின அடையாளம் குறித்த சுயாதீன நிபுணரும் விஜயம் மேற்கொள்ளவுள்ளனர்.