வெளிநாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் வசந்த சேனநாயக்க அவர்கள் இலங்கைக்கும் கியூபாவிற்கும் இடையில் இராஜதந்திர உறவுகள் ஸ்தாபிக்கப்பட்ட அறுபதாம் ஆண்டு நிறைவையொட்டி ஜூன் 25 முதல் 29 வரை கியூபா குடியரசிற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டார்.
இராஜாங்க அமைச்சர் வெளிநாட்டு அலுவல்கள் முதல் துணை அமைச்சர் மார்சலினோ மெடீனா கோன்சலஸுடன் பரஸ்பர நலன் தொடர்பான விடயங்கள் மீதான ஒத்துழைப்பை மேலும் விரிவாக்கிக் கொள்வதுடன் தொடர்பான இருதரப்பு கலந்துரையாடல்களில் ஈடுபட்டார். பரஸ்பர மரியாதை மற்றும் புரிதலால் ஆதரிக்கப்பட்ட இருதரப்பு துறையில் பல ஆண்டுகளாக ஒரு குறிப்பிடத்தக்க தரமான பாய்ச்சல் இருப்பதாக இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டனர்.
லக்ஷ்மன் கதிர்காமர் சர்வதேச உறவுகள் நிறுவகம் மற்றும் கியூபா வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் சர்வதேச உறவுகளுக்கான ரவுல் ரோ கார்சியா இன்ஸ்டிடியூட் ஆகியவற்றுக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டது. புரிந்துணர்வு ஒப்பந்தம் இரு நிறுவனங்களுக்கிடையில் கல்வி மற்றும் கல்விசார் ஒத்துழைப்பு மற்றும் ஆராய்ச்சி முயற்சிகளை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 81 ஆண்டுகளில் கியூபாவை தாக்கிய மிகவும் வலிமையான சூறாவளியான இந்த ஆண்டு ஜனவரி 27 அன்று கியூபாவைத் தாக்கிய சூறாவளியால் ஏற்பட்ட பரவலான சேதங்களுக்காக, கியூபா அரசாங்கத்துடனும் மக்களுடனுமான ஒற்றுமையின் அடையாளமாக, ரெக்லாவில் பாதிக்கப்பட்ட பகுதிகளிலும், ஹவானாவில் உள்ள 10 டி ஆக்டூப்ரே நகராட்சிகளிலும் புனரமைப்புப் பணிகளுக்காக கியூபா அரசுக்கு 50,000 அமெரிக்க டொலர் நன்கொடை கியூபா அரசிடம் வழங்கப்பட்டது. ஒற்றுமை மற்றும் நட்பின் வலுவான பிணைப்புகளுக்கான ஒரு சான்றாக இந்த நன்கொடை கியூப அரசாங்கத்தால் அன்புடன் வரவேற்கப்பட்டது.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள தேங்காய் தோட்டங்களில் மீண்டும் நடுகை செய்வதற்கான கலந்துரையாடலின் போது டுவர்ப் எக்ஸ் உயரமான கலப்பின வகையைச் சேர்ந்த 200 தேங்காய் நாற்றுகள் நன்கொடையாக வழங்கப்பட்டன.
இரண்டு நாடுகளுக்குமிடையிலான வாணிப மற்றும் வர்த்தக பிணைப்புக்களை மேம்படுத்துவதுடன் தொடர்பான விடயங்களை கலந்துரையாடுவதற்காக, இந்த விஜயத்தின் போது இராஜாங்க அமைச்சர் சேனநாயக்க அவர்கள் வெளியுறவு மற்றும் வெளிநாட்டு முதலீட்டு முதல் துணை அமைச்சர் அன்டோனியோ கேரிகார்ட் கொரோனாவை சந்தித்தார். அன்றைய சிலோன் என்றழைக்கப்பட்ட இலங்கைக்கு சே குவேரா விஜயம் மேற்கொண்ட போது, 1959 ஆகஸ்ட் 08ஆந் திகதி சே குவேராவுக்கும் ஆர்.ஜி. சேனாநாயக்கவுக்கும் இடையில் கையெழுத்திடப்பட்ட முதல் வர்த்தக மற்றும் கொடுப்பனவு ஒப்பந்தத்தை இராஜாங்க அமைச்சர் சேனநாயக்க நினைவு கூர்ந்தார்.
இலங்கை தொழில்முனைவோருடன் ஹவானா வணிக சபையில் நடந்த ஒரு ஊடாடும் வட்ட மேசை கலந்துரையாடலில் புதிய தயாரிப்புகளுக்கான கியூப சந்தையில் உள்ள திறன்களை ஆராய்ந்து அடையாளம் காண்பதன் முக்கியத்துவத்தை இராஜாங்க அமைச்சர் கோடிட்டுக் காட்டினார். ஹவானாவில் 2019 நவம்பர் முதல் வாரத்தில் நடைபெறுவதற்கு திட்டமிடப்பட்டுள்ள கியூபாவின் மிகப்பெரிய பன்முகத் தளமான FIHAV வர்த்தக கண்காட்சியில் இலங்கை பங்கேற்கவுள்ளது.
தனது பயணத்தில் கியூபாவின் தேசிய சட்டமன்றத்திற்கு விஜயம் செய்தபோது இராஜாங்க அமைச்சர் சேனநாயக்க மக்கள் சக்தி தேசிய சட்டமன்றத்தின் சர்வதேச உறவுகள் ஆணையத்தின் தலைவர் யோலண்டா ஃபெரர் கோமஸை சந்தித்தார். இலங்கை - கியூபா நாடாளுமன்ற நட்புக் குழுவின் சூழலில் நாடாளுமன்ற பரிமாற்றங்களை வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தை இரு தரப்பினரும் வலியுறுத்தினர்.
தேசிய சட்டமன்ற வருகைக்கு முன்னர் கியூபாவின் தேசிய வீரர் ஜோஸ் மார்டியின் நினைவுச்சின்னத்தில் இராஜாங்க அமைச்சர் ஒரு மலர் மாலையை அணிவித்தார்.
பெப்ரவரி 1959 இல் கியூப புரட்சிக்குப் பின்னர் உடனடியாக கியூப அரசாங்கத்தின் நியாயத்தன்மையை அங்கீகரித்த முதல் ஆசிய நாடு இலங்கை (அப்போதைய சிலோன்) ஆகும். கியூபா இன்ஸ்டிடியூட் ஆப் பீப்பிள் (ஐ.சி.ஏ.பி) ஏற்பாடு செய்திருந்த நினைவு நிகழ்ச்சியில் இராஜாங்க அமைச்சர் சேனநாயக்க இரு நாடுகளுக்கும் இடையிலான வரலாற்று உறவுகள் குறித்து பேசியதுடன், தூரம் மற்றும் மொழியால் வேறுபட்டிருந்தாலும், பொதுவான பிணைப்பை இரு நாடுகளும் கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார். கியூபாவில் படித்த மாணவர்கள் முதல் 80 களின் முற்பகுதியில் இலங்கைக்கு முதன்முதலில் விஜயம் செய்த கியூபா மருத்துவர்களால் சிகிச்சை பெற்றவர்கள் வரையான பல விடயங்கள் சார்ந்த கியூபாவின் நட்பு மற்றும் தாராள மனப்பான்மையால் தொட்ட இலங்கை வாழ்க்கையை இராஜாங்க அமைச்சர் நினைவு கூர்ந்தார். ஐ.சி.ஏ.பி நிகழ்வின் ஒருபுறம் வெளியுறவுத்துறை பிரதி அமைச்சர் அனயன்சி ரோட்ரிக்ஸ் மற்றும் ஐ.சி.ஏ.பி. யின் தலைவர் பெர்ணான்டோ கொன்சாலெஸ் ஆகியோருடனும் கலந்துரையாடல்களில் ஈடுபட்டார்.
இராஜாங்க அமைச்சர் சேனநாயக்க ஹவானாவில் உள்ள மரபணு பொறியியல் மற்றும் உயிரியல் தொழில்நுட்ப மையத்திற்கான சுற்றுப்பயணத்தையும் மேற்கொண்டிருந்ததுடன், அங்கு இலங்கையின் சுகாதாரத் துறைக்கு குறிப்பாக ஆர் மற்றும் டி துறைக்கான உதவிகளை பெற்றுக்கொள்வதை மையமாகக் கொண்ட கலந்துரையாடல்களிலும் ஈடுபட்டார். பல்வேறு நோய்களுக்கு சிகிச்சையளிப்பதற்கான தொழில்நுட்ப பரிமாற்றம் மூலம் இலங்கையின் சுகாதார அமைச்சிற்கு உதவுவவதற்கான மிகுந்த ஆர்வத்தை அதன் பணிப்பாளர் நாயகம் ஜெனரல் லூயிஸ் ஹெரெரா மார்டினெஸ் காட்டினார்.
ஜூன் 28 அன்று சாண்டா கிளாராவைப் பார்வையிட்ட இராஜாங்க அமைச்சர் இரு நாடுகளுக்கிடையில் நிலவும் ஆழமான வேரூன்றிய மற்றும் நித்திய உறவுகளைக் குறிக்க சே மெமோரியலில் ஒரு மரத்தை நட்டார். ஆகஸ்ட் 1959 இல், சே குவேரா அப்போதைய சிலோனாகிய இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட போது, ஹொரணையில் உள்ள யஹலகலே தோட்டத்தில் அவரால் ஒரு மஹோகனி மரக்கன்று நடப்பட்டது.
கிரான் ஹோட்டலில் மன்சானா கெம்பின்ஸ்கியில் மவுண்ட் லவினியா ஹோட்டலின் தலைமை சமையற்கலை நிபுனர் பப்ளிஸ் சில்வாவுடன் இணைந்து இலங்கைத் தூதரகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இலங்கை உணவுத் திருவிழா 28 ஆம் திகதி மாலை இராஜாங்க அமைச்சர் சேனநாயக்கவினால் திறந்து வைக்கப்பட்டது.
கியூபாவுக்கான இலங்கையின் தூதுவர் ஏ.எல். ரத்னபால மற்றும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் பணிப்பாளர் நாயகம் ஷானிகா திசானாயக்க ஆகியோர் இந்த உத்தியோகபூர்வ விஜயம் மற்றும் கலந்துரையாடல்களின் போது இணைந்தரிருந்தனர்.