'நாட்டிற்காக ஒன்றிணைவோம்' என்ற தலைப்பின் கீழான நிகழ்வின் பாகமாக, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு தனது நடமாடும் கொன்சியூலர் சேவைகளை 2019 ஏப்ரல் 10 - 11ஆந் திகதி வரை மட்டக்களப்பு மாவட்டத்தில் நடாத்தியது.
இந்த நடமாடும் சேவைகள் காத்தான்குடி மற்றும் செங்கலடி பிரதேச செயலகப் பிரிவுகளின் முன்றலில் முறையே 2019 ஏப்ரல் 10ஆந் திகதி புதன்கிழமை மற்றும் 11ஆந் திகதி வியாழக்கிழமை ஆகிய தினங்களில் நடைபெற்றன.
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட சேவைகளில், வெளிநாட்டில் இடம்பெற்ற பிறப்பு மற்றும் இறப்புக்களை பதிவு செய்தல், வெளிநாட்டு வேலைவாய்ப்புடன் தொடர்பான உதவிகள், வெளிநாட்டில் இடம்பெற்ற புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் ஏனையோரின் மரணங்கள், நட்டஈடு மற்றும் புலம்பெயர் தொழிலாளர்களை நாட்டிற்கு மீள அழைத்து வருவதுடன் தொடர்பான விடயங்கள் மற்றும் ஆவணங்களை அத்தாட்சிப்படுத்துதல் போன்றவற்றுடன் தொடர்பான விடயங்கள் உள்ளடக்கப்பட்டிருந்தன.
இந்த நடமாடும் சேவை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் பொருளாதார இராஜதந்திரம் மற்றும் பொது இராஜதந்திர நிகழ்ச்சிகளுடன் தொடர்பான செயற்பாடுகளையும் உள்ளடக்கியிருந்தது. இந்த நிகழ்ச்சியின் வாயிலாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்த நடமாடும் சேவையில் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மற்றும் போக்குவரத்து திணைக்களம் ஆகியனவும் பங்குபற்றியிருந்தன.
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் கொன்சியூலர் விவகாரப் பிரிவு, மற்றும் யாழ்ப்பாணம் மற்றும் மாத்தறையில் அமைந்துள்ள பிராந்திய கொன்சியூலர் அலுவலகங்கள், மற்றும் வெளிநாட்டிலுள்ள இலங்கைத் தூதரகங்களினால் வழங்கப்படும் சேவைகள் தொடர்பாக அரச உத்தியோகத்தர்களுக்கும், பொதுமக்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் இரண்டு விழிப்புணர்வு நிகழ்வுகள் மட்டக்களப்பு மாவட்ட செயலாளர், காத்தான்குடி மற்றும் செங்கலடி பிரதேச செயலாளர்களின் ஒத்துழைப்புடன் முன்னெடுக்கப்பட்டன.
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு
கொழும்பு
12 ஏப்ரல் 2019