வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் திலக் மாரப்பன மற்றும் நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் மங்கள சமரவீர ஆகியோரினால் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் மாத்தறை பிராந்திய கொன்சியூலர் அலுவலகம் வைபவ ரீதியாக இன்று (15) திறந்து வைக்கப்பட்டது. இந்த அங்குரார்ப்பண நிகழ்வில் தென் மாகாண சபையின் பல்வேறு உறுப்பினர்கள், மாத்தறை மாவட்ட அரச நிறுவனங்களின் உறுப்பினர்கள் மற்றும் மாத்தறை மாவட்ட செயலாளர் மற்றும் தென் மாகாணத்தின் பிரதேச செயலாளர்கள் உள்ளடங்கலாக பல்வேறு சிரேஷ்ட அரச உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.
சம்பிரதாயபூர்வமான அங்குரார்ப்பண நிகழ்வைத் தொடர்ந்து, புதிய அலுவலகத்தின் முதலாவது கொன்சியூலர் சேவையாக, ஈ-டி.ஏ.எஸ். முறைமையை பயன்படுத்தி மாத்தறை பிராந்திய கொன்சியூலர் அலுவலகத்தினால் சான்றுறுதிப்படுத்தப்பட்ட ஆவணங்கள் அவற்றின் உரிமையாளர்களிடம் இரண்டு அமைச்சர்களினாலும் கையளிக்கப்பட்டன.
இந்த நிகழ்வில் உரையாற்றுகையில், கொழும்பிற்கு பிரயாணம் மேற்கொள்ளாமல் தங்களது சொந்த மாவட்டங்களிலேயே கொன்சியூலர் சேவைகளை பெற்றுக்கொள்வதனை இயலுமாக்கும் வகையில், புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் குடும்ப உறுப்பினர்கள் கணிசமாக வாழும் இடங்களில் இன்னும் அதிகமான பிராந்திய கொன்சியூலர் அலுவலகங்களை எதிர்காலத்தில் திறப்பதற்கான நடவடிக்கைகளை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு மேற்கொள்ளும் என வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் திலக் மாரப்பன தெரிவித்தார். முதலாவது பிராந்திய கொன்சியூலர் அலுவலகத்தை யாழ்ப்பாணத்தில் திறந்ததன் வாயிலாக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் சேவைகளை மக்களுக்கு வழங்கியமைக்காக தனக்கு முன்னால் பதவி வகித்த அமைச்சர் மங்கள சமரவீரவிற்கு அவர் தனது பாராட்டுக்களை தெரிவித்தார்.
இந்த பிராந்திய கொன்சியூலர் அலுவலகத்தின் வாயிலாக, வெளிநாடுகளில் பயன்படுத்திக் கொள்வதற்காக பிறப்பு, திருமண, மரணச் சான்றிதழ்கள் மற்றும் ஏனைய சட்ட ஆவணங்களை சான்றுறுதிப்படுத்தல், வெளிநாடுகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு உதவுதல், புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் குடும்ப உறுப்பினர்கள் நிவாரணம் மற்றும் நட்டஈடுகளை பெற்றுக்கொள்வதற்கு வசதியளித்தல் மற்றும் வெளிநாட்டில் இருக்கும் மனித எச்சங்களை நாட்டிற்கு மீள கொண்டுவருதல் போன்ற பல்வேறு வகையான கொன்சியூலர் சேவைகளை பொதுமக்களால் பெற்றுக்கொள்ள முடியும்.
அமைச்சின் இரண்டாவது பிராந்திய கொன்சியூலர் அலுவலகத்தினை திறப்பதற்காக மாத்தறை மாவட்டத்தை தெரிவு செய்தமைக்காக அமைச்சர் சமரவீர தனது நன்றிகளை அமைச்சர் மாரப்பனவிற்கு தெரிவித்தார்.
நிகழ்வின் ஆரம்பத்தில் பதில் வெளிநாட்டு அலுவல்கள் செயலாளர் அஹமட் ஏ. ஜவாத் அவர்கள் நிகழ்விற்கு வருகை தந்திருந்த அமைச்சர்கள், அரச நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்களை வரவேற்று, அவர்களின் ஆதரவிற்காக தனது நன்றிகளை தெரிவித்தார். வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் பொது நிர்வாகப் பிரிவின் பணிப்பாளர் நாயகம் அருண பெர்ணான்டோவினால் நன்றியுரை நிகழ்த்தப்பட்டது.
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு
கொழும்பு
15 பெப்ரவரி 2019