சமாதானம், ஸ்திரத்தன்மை மற்றும் நிலையான அபிவிருத்தி ஆகியவற்றின் மேம்படுத்தப்பட்ட ஒத்துழைப்பு வாயிலாக ஆபிரிக்கா, ஆசியா,அவுஸ்திரேலியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளிலுள்ள மக்களை ஒன்றிணைத்தல் எனும் தலைப்பின் கீழ், இந்து சமுத்திர விளிம்பு சங்கமானது (IORA) அதன் சிரேஷ்ட உத்தியோகத்தர்கள் குழுவின் 20 ஆவது அமர்வையும், அமைச்சர்கள் மன்றத்தின் 18ஆவது அமர்வையும் 2018 ஒக்டோபர் 31 முதல் நவம்பர் 2 வரை தென்னாபிரிக்காவின் டேர்பன் நகரில் நடாத்தியது.
அமைச்சர்கள் மன்றத்திற்கான நாடுகளின் அறிக்கையில், இலங்கைத் தூதுக்குழுவின் தலைவரான வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் பொருளாதார விவகாரங்கள் (பல்தரப்பு) பிரிவின் பணிப்பாளர் நாயகம் சரோஜா சிறிசேன அவர்கள் பிராந்திய ஒத்துழைப்பு மற்றும் சமுத்திரங்களின் நிலையான பயன்பாட்டில் இலங்கையின் முக்கியத்துவத்தினை சிறப்பித்துக் கூறினார். பிராந்தியத்திலுள்ள மக்கள் ஒன்றாக வளர்ச்சியடைவதற்கான அனுபவ ரீதியான பெறுபேறுகளை உணர்ந்து கொள்வதற்காக ஒத்துழைப்பு ஏற்பாடுகளை ஒன்றாக மேற்கொள்வதற்கு இலங்கை அழைப்பு விடுத்தது. உள்ளக பிராந்திய வர்த்தகம் மற்றும் முதலீட்டினை அதிகரிப்பதற்கான தேவைப்பாடு குறித்தும் இலங்கை மேலும் வலியுறுத்தியது. அத்துடன், பொருளாதார, மூலோபாய மற்றும் சுற்றாடல் சார் விடயப்பரப்புக்களில் 21ஆம் நூற்றாண்டில் பூமியை வடிவமைப்பதற்கு இந்து சமுத்திரம் தயாராக இருப்பதாகவும், அதில் இலங்கை தனது வகிபாகத்தினை மேற்கொள்வதற்கு தயாராகவிருப்பதாகவும் மேலும் குறிப்பிட்டது.
கடல்வழி காப்பு மற்றும் பாதுகாப்பிற்கான தொழிற்பாட்டுக் குழுவின் குறிப்பு விதிகளை வடிவமைப்பதற்கான அடிப்படை பட்டறை தொடர்பான அறிக்கை இந்து சமுத்திர விளிம்பு சங்கத்தின் சிரேஷ்ட உத்தியோகத்தர்களின் குழுவிற்கு சமர்ப்பிக்கப்பட்டது. கடல்வழி காப்பு மற்றும் பாதுகாப்பிற்கான தலைமை ஆதரவுத் தூண் என்ற வகையில் இலங்கையின் முயற்சிகள் மற்றும் செயற்பாடுகளையும், 2019ஆம் ஆண்டில் தொழிற்பாட்டுக் குழுவின் முதலாவது கூட்டத்தொடரை நடத்துகின்றமையையும் இந்து சமுத்திர விளிம்பு சங்கத்தின் அமைச்சர்கள் வரவேற்றனர்.
தென்னாபிரிக்காவின் சர்வதேச உறவுகள் மற்றும் ஒத்துழைப்புக்கான அமைச்சர் லின்டிவே சிசுலு அவர்களினால் அமைச்சர்கள் மட்ட சந்திப்பு தலைமை தாங்கப்பட்டது. இந்து சமுத்திர விளிம்பு சங்கத்தின் 21 உறுப்பு நாடுகளுக்கும் மேலதிகமாக, சீனா, எகிப்து, பிரான்ஸ், ஜேர்மனி,ஜப்பான், ஐக்கிய இராச்சியம் மற்றும் ஐக்கிய அமெரிக்கா ஆகிய 7 கலந்துரையாடல் பாங்காண்மை நாடுகளும் இந்த அமர்வில் கலந்து கொண்டன.
அமைச்சர்கள் மட்ட சந்திப்பானது தென்னாபிரிக்காவின் பழம்பெரும் தலைவரான நெல்சன் மண்டேலா அவர்களின் பிறப்பின் நூற்றாண்டுடன் இணைந்ததாக இடம்பெற்றமையினால், இந்து சமுத்திர விளிம்பு சங்கத்தின் அமைச்சர்களினால் விஷேட ஞாபகார்ந்த பிரகடனமொன்று ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இலங்கைத் தூதுக்குழுவில் பிரிடோரியாவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிராலயத்தின் ஆலோசகர் திருமதி. பிரியாங்கனி ஹேவாரத்ன அவர்களும் இடம்பெற்றிருந்தார்.
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு
கொழும்பு
05 நவம்பர் 2018