கொழும்பில் நடைபெற்ற இலங்கை - பின்லாந்து இருதரப்பு ஆலோசனைகள்

கொழும்பில் நடைபெற்ற இலங்கை – பின்லாந்து இருதரப்பு ஆலோசனைகள்

Image 01 (3)

சிரேஷ்ட உத்தியோகத்தர்கள் மட்டத்திலான இலங்கை - பின்லாந்து இருதரப்பு ஆலோசனைகளின் முதலாவது அமர்வு 2018 ஒக்டோபர் 01ஆந் திகதி கொழும்பிலுள்ள வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் வெற்றிகரமாக நிறைவுபெற்றது.

இலங்கை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் மேலதிக செயலாளர் (இருதரப்பு விவகாரங்கள்) சுமித் நாகந்தல அவர்களினால் இலங்கைக்கான தூதுக்குழு தலைமை தாங்கப்பட்டதுடன், பின்லாந்து வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் அமெரிக்கா மற்றும் ஆசியாவிற்கான பணிப்பாளர் நாயகமான தூதுவர் கிம்மோ லாஹ்டேவெர்டா அவர்களினால் பின்லாந்திற்கான தூதுக்குழு தலைமை தாங்கப்பட்டது. பின்லாந்தின் தெற்காசியாவிற்கான நகரும் தூதுவரும், அதே நேரம் இலங்கைக்கு சான்றழிக்கப்பட்டுள்ளவருமான ஹரி கமரைனன் அவர்களையும் இந்த தூதுக்குழு உள்ளடக்கியிருந்தது. சுறுசுறுப்புடன் பங்களிப்புச் செய்யும் பல்வேறு வரிசை அமைச்சுக்கள் மற்றும் இலங்கையை பிரதிநிதித்துவம் செய்யும் முகவர்களுடனான பல்வேறு கலந்துரையாடல்களில் இரண்டு வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சுக்களினதும் சிரேஷ்ட உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.

இருதரப்பு வர்த்தகம் மற்றும் முதலீடுகள் தொடர்பில் அதிகமாக கவனம் செலுத்தப்பட்டதுடன், 2017 ஒக்டோபர் மாதத்தில் பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்க அவர்களின் பின்லாந்து நாட்டிற்கான விஜயத்தின் போது இரண்டு நாடுகளினாலும் அடையாளங்காணப்பட்ட, தொழிற்பயிற்சி, சுகாதாரம், புதுப்பிக்கக்கூடிய வலு, தகவல் தொடர்பாடல் தொழினுட்பம் மற்றும் டிஜிட்டல் மயமாக்கம் ஆகியன உள்ளடங்கலாக இருப்பிலுள்ள விடயங்களிலான ஒத்துழைப்பு தொடர்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள செயற்பாடுகள் அவதானிக்கப்பட்டன.

நிபுணத்துவம் மற்றும் இணைந்த ஒத்துழைப்பு நிகழ்ச்சிகளை பரிமாற்றிக் கொள்வதன் வாயிலாக பரஸ்பர நன்மைகளுக்கான ஒத்துழைப்பை மேம்படுத்திக் கொள்வதனை இலக்காகக் கொண்ட ஏனைய விடயங்கள் தொடர்பான கலந்துரையாடல்கள், மின்னியல்-ஆட்சி, விமர்சன ரீதியான தொடர்பாடல்கள், சைபர் பாதுகாப்பு, காலநிலை மாற்றம் மற்றும் கட்டுப்படுத்துகை, வனவளம், பாதுகாப்பு, சுற்றுலாத்துறை மற்றும் ஸ்மார்ட் நகரங்களின் அபிவிருத்தி ஆகியவற்றை உள்ளடக்கியிருந்தன.

பின்லாந்து பொருளாதார அலுவல்கள் மற்றும் தொழில் அமைச்சின் செயலாளர் பெட்ரி பெல்டோனென் அவர்களின் இலங்கை விஜயத்தின் போது தொழில்சார் கல்வி மற்றும் பயிற்சி, சுகாதாரம் மற்றும் டிஜிடல் மயமாக்கல்  தொடர்பில் இரண்டு நாடுகளுக்கும் இடையில் 2018 ஜூன் மாதத்தில் புரிந்துணர்வு உடன்படிக்கைகளை நிறைவேற்றுவது தொடர்பான நடைமுறைகள் மற்றும் நிலையான விடயங்கள் தொடர்பிலும் இந்த கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது.

ஜனநாயக நிறுவகங்களை வலுவூட்டல், நல்லிணக்கத்தை மேம்படுத்தல் மற்றும் பொருளாதார அபிவிருத்தியை அடைதல் தொடர்பில் இலங்கை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை பின்லாந்து தூதுக்குழு அங்கீகரித்தது. சர்வதேச சமூகத்துடனான இலங்கையின் முனைப்பான மற்றும் முன்னேற்றகரமான ஈடுபாட்டையும் பெருமிதத்துடன் குறிப்பிட்டது. இரண்டு நாடுகளும் பரஸ்பர பிரச்சினைகள் பற்றிய பல்தரப்பு மாநாடுகளில் பங்குபற்றுவதனை வலுவூட்டுதல் தொடர்பிலான தமது அர்ப்ணிப்பை உறுதிசெய்தன.

இலங்கை - பின்லாந்து இருதரப்பு ஆலோசனைகளின் இரண்டாவது அமர்வு 2020ஆம் ஆண்டில் பின்லாந்தின் ஹெல்சின்கியில் நடைபெறும்.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு

கொழும்பு

 

03 ஒக்டோபர் 2018

Image 02 (2)
Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close