வெளிநாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் வசந்த சேனநாயக்க அவர்கள் எத்தியோப்பிய பயணமொன்றை 2018 செப்டம்பர் 13 முதல் செப்டம்பர் 17 வரை மேற்கொண்டார். இலங்கையானது எத்தியோப்பாவுடன் இராஜதந்திர உறவுகளை 1972 ஆம் ஆண்டு தாபித்ததுடன் இலங்கையின் நிரந்தர தூதரகமானது இலங்கை மற்றும் எத்தியோப்பியா வெளிநாட்டு அமைச்சர்களின் இணை ஒத்துமைப்புடன் அடிஸ் அபாபாவில் (Addis Ababa) 2017 பெப்ரவரியில் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது.
இராஜாங்க அமைச்சர் வசந்த சேனநாயக்க அவர்களை கௌரவிக்கும் முகமாக எத்தியோப்பிய வெளிநாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் காலையுணவு விருந்துபசாரம் ஒன்றை ஏற்பாடு செய்ததுடன் அதில் எத்தியோப்பிய வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் சிரேஸ்ட உத்தியோகத்தர்கள் பங்கேற்றனர். அங்கு இடம்பெற்ற கலந்துரையாடலானது இலங்கை மற்றும் எத்தியோப்பியாவுக்கு இடையில் இரு தரப்பு உறவுகளை மேம்படுத்தல் மற்றும் ஒத்துழைப்பு சார்ந்த விடயங்களை பல்வகைப்படுத்தல் ஆகியவற்றின் அடிப்படையில் அமைந்திருந்தது. இரண்டு நாடுகளுக்கு இடையில் வர்த்தக தூதுக்குழுக்களை பரிமாற்றம் செய்தல் பற்றிய விடயமும் கலந்துரையாடப்பட்டதுடன் இராஜாங்க அமைச்சர் சேனநாயக்க இலங்கைக்கான வர்த்தக தூதுக்குழுவொன்றை வழிநடத்தும்படி அவரது எத்தியோப்பிய சகாவுக்கு அழைப்பொன்றையும் விடுத்தார்.
இராஜாங்க அமைச்சர் சேனநாயக்க அவர்கள் மரியாதை நிமித்தம் எத்தியோப்பிய சனாதிபதி Mulatu Teshome வையும் பார்வையிட்டார்
விஜயத்தின் போது, ஆபிரிக்கயூனியன் தலைமையகத்திற்கு விஜயம் செய்த இராஜாங்க அமைச்சர் சேனநாயக்க சமாதானம் மற்றும் பாதுகாப்புக்கான ஆணையாளரும், ஆபிரிக்க யூனியன் ஆணைக்குழுவின் பதில் தலைவருமான கலாநிதி Smail Chergui அவர்களுடன் கலந்துரையாடல் ஒன்றையும் மேற்கொண்டார். இந்த கலந்துரையாடலானது ஆபிரிக்கா மற்றும் ஆசிய கண்டம் ஆகியவற்றுக்கு இடையில் உறவுகளை மேம்படுத்தல் தொடர்பில் கவனம் செலுத்தியது. இலங்கையானது ஆபிரிக்க-சாரா நாடென்ற அடிப்படையில் ஆபிரிக்க யூனியனின் அங்கீகார அந்தஸ்தை 2014 ஏப்பிரல் மாதத்தில் பெற்றதுடன் இலங்கையின் Addis Ababa விற்கான முதல் நிரந்தர தூதுவர் ஆபிரிக்க யூனியன் ஆணையாளருக்கு அவரது தகைமை சான்றிதழ்களை 2016 டிசம்பர் மாதம் இலங்கையின் நிரந்தர பிரதிநிதி என்ற வகையில் சமர்ப்பித்தார்.
மேலும், இராஜாங்க அமைச்சர் எத்தியோப்பிய முதலீட்டு ஆணைக்குழு மற்றும் எத்தியோப்பிய வர்த்தக சம்மேளனம் ஆகியவற்றின் சிரேஸ்ட உத்தியோகத்தர்களுடன் கூட்டங்களை மேற்கொண்டதுடன் இரு தரப்பு பொருளாதார உறவுகளை மேம்படுத்தும் வகையில் இலங்கை மற்றும் எத்தியோப்பியா ஆகிய நாடுகளில் காணப்படும் வர்த்தக மற்றும் முதலீட்டு வாய்ப்புக்கள் பற்றிய தகவல்களை பறிமாற்றிக்கொண்டார். இராஜாங்க அமைச்சர் சேனநாயக்க Addis Ababa அமைந்துள்ள யுனஸ்கோ அலுவலகத்திற்கும் விஜயத்தை மேற்கொண்டார்.
எத்தியோப்பியாவுக்கான இலங்கை தூதுவர் மற்றும் ஆபிரிக்க யூனியன் ஆணைக்குழுவின் நிரந்தர பிரதிநிதியுமான சுமித் தசநாயக்க அவர்களும் இராஜாங்க அமைச்சருடன் கூட்டங்களில் பங்கேற்றார்.