4வது பிம்ஸ்டெக் (BIMSTEC) உச்சிமாநாட்டிற்கான இலங்கைத் தூதுக்குழுவிற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமை தாங்கவுள்ளார் - பிம்ஸ்டெக்கிற்கான தலைமைத்துவத்தை இலங்கை பெற்றுக்கொள்ளவுள்ளது

4வது பிம்ஸ்டெக் (BIMSTEC) உச்சிமாநாட்டிற்கான இலங்கைத் தூதுக்குழுவிற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமை தாங்கவுள்ளார் – பிம்ஸ்டெக்கிற்கான தலைமைத்துவத்தை இலங்கை பெற்றுக்கொள்ளவுள்ளது

2018 ஆகஸ்ட் 30 - 31ஆந் திகதி கத்மண்டுவில் நடைபெறவுள்ள 4வது வங்காள விரிகுடாவின் பல்துறை தொழிநுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு உச்சிமாநாட்டிற்கான (பிம்ஸ்டெக்) இலங்கைத் தூதுக்குழுவிற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் தலைமை தாங்கவுள்ளார். இந்த உச்சிமாநாட்டின் இறுதியில், பிம்ஸ்டெக்கிற்கான தலைமைத்துவமானது தற்போதைய தலைமையான நேபாளமிடமிருந்து இலங்கைக்கு கையளிக்கப்படவுள்ளது.

இந்த உச்சிமாநாடு பங்குபற்றும் அரசாங்கங்கள் மற்றும் நாடுகளின் தலைவர்களுக்கான பிரத்தியேக அமர்வை உள்ளடக்கியிருப்பதோடு பதினாறாவது பிம்ஸ்டெக் அமைச்சர்கள் சந்திப்பு மற்றும் பிம்ஸ்டெக் சிரேஷ்ட உத்தியோகத்தர்கள் சந்திப்பின் பத்தொன்பதாம் அமர்வு ஆகியனவும் இதன் தொடர்ச்சியாக இடம்பெறவுள்ளன.

இலங்கை மற்றும் மியன்மாரின் ஜனாதிபதிகள், இந்தியா, பங்காளதேஷ், நேபாளம் மற்றும் தாய்லாந்தின் பிரதமர்கள் மற்றும் பூட்டான் அரசாங்கத்தின் தலைமை ஆலோசகர் ஆகியோர் முறையே இந்த உச்சிமாநாட்டிற்கான தமது தூதுக்குவினருனக்கு தலைமை தாங்கவுள்ளனர். இந்த தலைவர்கள் உச்சிமாநாட்டின் நிறைவில், 4வது பிம்ஸ்டெக் உச்சிமாநாட்டின் “சமாதானம், செழுமை மற்றும் நிலையான வங்காள விரிகுடாவை நோக்கி” என்ற பிரகடனத்தை ஆகஸ்ட் 31ஆந் திகதி ஏற்றுக்கொள்ளவுள்ளனர்.

மேலும், இந்த உச்சிமாநாட்டின் போது தலைவர்கள் “பிம்ஸ்டெக் கட்ட உள்ளிணைப்புக்கான புரிந்துணர்வு உடன்படிக்கை”யிலும் கைச்சாத்திடவுள்ளனர்.

தொடர்ச்சியான சந்திப்புக்களின் போது, வளர்ச்சி மற்றும் பொருளாதார செழுமையை பிம்ஸ்டெக் பிராந்தியத்தில் மேம்படுத்தும் நோக்கில், ஏற்கனவே ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள முக்கிய துறைகள் சார்ந்த பல விடயங்கள் மீளாய்வு செய்யப்படவுள்ளன. பிம்ஸ்டெக்கின் முன்னுரிமைப்படுத்தப்பட்டுள்ள துறைகள், வர்த்தகம் மற்றும் முதலீடு, தொழினுட்பம்,சக்தி, போக்குவரத்து மற்றும் தொடர்பாடல், சுற்றுலாத்துறை, மீன்பிடி, விவசாயம், கலாச்சார ஒத்துழைப்பு, சுற்றாடல் மற்றும் அனர்த்த முகாமைத்துவம், பொது சுகாதாரம், மக்கள் - மக்களுக்கிடையிலான தொடர்பு, வறுமை ஒழிப்பு, பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் நாடுகடந்த குற்றங்கள் மற்றும் காலநிலை மாற்றம் ஆகியவற்றை உள்ளடக்கியிருக்கின்றன.

1997இல் தாபிக்கப்பட்ட வங்காள விரிகுடாவின் பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பானது (பிம்ஸ்டெக்) வங்காள விரிகுடா பிராந்தியத்திலுள்ள தென் மற்றும் தென்கிழக்காசிய நாடுகளை இணைக்கின்றது. வங்காள விரிகுடா பிராந்தியம் சராசரி 6.5 சதவிகித மொத்த உள்நாட்டு உற்பத்தியைக் கொண்டிருப்பதோடு மொத்த உலக சனத்தொகையின் 21 சதவிகிதத்தை கொண்டதாக காணப்படுகின்றது.

தொழினுட்பத் துறையில் முன்னனி நாடாக இலங்கை அமைவதுடன், இலங்கையில் பிம்ஸ்டெக் தொழினுட்ப பரிமாற்ற வசதியை நிறுவும் செயற்பாடுகள் கவனத்திற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவ்வசதி நுன், சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகங்களை குறிக்கோளாகக் கொண்டு ஒத்துழைப்பு மற்றும் பங்காண்மை ஆகியவற்றினூடாக உறுப்பு நாடுகளின் தொழினுட்ப தளத்தை விரிவாக்கம் செய்வதற்கு முனைகிறது.

3வது பிம்ஸ்டெக் உச்சிமாநாடு 2014ஆம் ஆண்டில் மியன்மாரின் நய் பி டவ்வில் நடைபெற்றதுடன், பிம்ஸ்டெக் தலைவர்கள் சந்திப்பு மற்றும் பிரிக்ஸ் மற்றும் பிம்ஸ்டெக் எல்லை உச்சிமாநாடு ஆகியன 2016ஆம் ஆண்டில் இந்தியாவின் கோவாவில் இடம்பெற்றன.

இந்த உச்சிமாநாட்டுடன் சம்பந்தமான சந்திப்புக்களில் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் வசந்த சேனாநாயக்க மற்றும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சினதும் கத்மண்டுவிலுள்ள இலங்கை தூதரகத்தினதும் உத்தியோகத்தர்கள் ஆகியோரும் கலந்துகொள்ளவுள்ளனர்.

தனது விஜயத்தின் போது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் நேபாள ஜனாதிபதி பிந்தியா தேவி பண்டாரி மற்றும் நேபாள பிரதமர் கட்கா பிரசாத் ஓலி ஆகியோரை செப்டெம்பர் மாதம் 01ஆம் திகதி சந்திக்கவுள்ளார். நேபாள ஜனாதிபதியினால் வழங்கப்படவுள்ள கௌரவ விருந்துபசாரத்திலும் ஜனாதிபதி கலந்து கொள்ளவுள்ளார்.

ஜனாதிபதி சிறிசேன அவர்கள் செப்டெம்பர் மாதம் 01ஆம் திகதி லும்பினிக்கு விஜயம் செய்யவுள்ளதுடன், செப்டெம்பர் மாதம் 02ஆம் திகதி கத்மண்டுவிலுள்ள சார்க் செயலகத்திற்கு விஜயம் செய்து, அங்கு மரக்கன்று நடும் நிகழ்விலும் பங்குபற்றவுள்ளார்.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு
கொழும்பு

 

28 ஆகஸ்ட் 2018

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close