சுவிஸ் கூட்டமைப்பின் நீதி மற்றும் பொலிஸ் கூட்டுத் திணைக்களத்தின் தலைவரான, பெடரல் கவுன்சிலர் சிமோனட்டா சொமருகா இலங்கைக்கான மூன்று நாள் விஜயமொன்றினை மேற்கொண்டார். அதன்போது ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்ஹ ஆகியோரை அவர் சந்தித்தார்.
இலங்கை அரசாங்கம் மற்றும் சுவிஸ் கூட்டமைப்பு ஆகியவற்றுக்கிடையில் புலம்பெயர்வு கூட்டாண்மை தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திடுவதே இந்த விஜயத்தின் பிரதான நோக்கமாக இருந்தது.
இலங்கை அரசு சார்பில் உள்ளக அலுவல்கள் மற்றும் வயம்ப அபிவிருத்தி அமைச்சர் கௌரவ எஸ்.பி. நாவின்ன மற்றும் சுவிஸ் கூட்டாட்சி மன்றம் சார்பில் பெடரல் கவுன்சிலர் சிமோனட்டா சொமருகா ஆகியோரால் கைச்சாத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம், இரு நாடுகளுக்கும் பயன்தருகின்ற புலம்பெயர்வு தொடர்பான நிலையான மற்றும் தொடர்ந்தேர்ச்சியான உரையாடல்களை ஸ்தாபிப்பதனையும் புலம்பெயர் விடயங்கள் தொடர்பான பொது பிரதிபலிப்பு செயல்முறையினையும் சாத்தியமாக்குகின்றது. குறிப்பாக, புலம்பெயர்வு ஓட்டத்தை முகாமை செய்தல், ஒழுங்கற்ற புலம்பெயர்வை தடுத்தல், குடிமக்கள், நாடற்ற மக்கள், மூன்றாம் நாட்டுக் குடிமக்களை மீள்அனுமதித்தல், மீள்உதவி மற்றும் மறுவாழ்வு, புலம் பெயர் ஆட்சி விவகாரங்களில் திறன் விருத்தி, குடிபெயர்பவர்களை கடத்தும் செயற்பாட்டை தடுத்தல், ஆட்கடத்தலுக்கெதிராக போராடுதல், வீசா மற்றும் கன்சியூலர் சம்பந்தப்பட்ட நிர்வாக விவகாரங்கள், தொழிற்பயிற்சி, அனைத்து மட்டங்களிலும் முழுமையான அளவில் ஈடுபடுவதனூடாக நிலையான அபிவிருத்தியை அடைந்து கொள்வதற்காக பாதுகாப்பான ஒழுங்கான புலம்பெயர்வை மேம்படுத்தல், வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்த இலங்கையர்களின் முதலீடுகளுக்கான கட்டமைப்பை வலுப்படுத்துதல், ஒருங்கிணைப்பு, சட்ட மற்றும் நல்லிணக்கத்திற்கான விதிகளை மேம்படுத்தக்கூடிய திட்டங்கள் ஆகிய துறைகளில் சாத்தியமாக்குகின்றது.
இரு நாடுகளுக்குமிடையிலான கலந்துரையாடல்கள் 06 ஆகஸ்ட் அன்று வெளிநாட்டலுவல்கள் அமைச்சில் இடம்பெற்றன. இலங்கைக் குழுவினை பதில் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் வசந்த சேனாநாயக அவர்கள் வழிநடாத்தினார். இக்கலந்துரையாடல்கள் ஜனநாயக நிறுவனங்களை பலப்படுத்துவதற்கு இலங்கை அரசால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள், உயர் நல்லிணக்கம், பொருளாதார அபிவிருத்தியை அடைந்து கொள்ளல் மற்றும் சர்வதேச சமூகத்துடனான முன்னேற்றகரமான ஈடுபாடு ஆகிய விடயங்களை மையப்படுத்தியிருந்தன. கலந்துரையாடலில் வெளியுறவுச் செயலாளர் பிரசாட் காரியவசம், மற்றும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சு உள்ளடங்களாக பல்வேறு அமைச்சுகளின் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.
கவுன்சிலர் சொமருகா அவரது இலங்கை விஜயத்தின்போது கிழக்கு, மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட சுவிஸ் நிகழ்ச்சித்திட்டங்களையும் தரிசித்தார்.