நோர்வேயின் அபிவிருத்தி ஒத்துழைப்பிற்கான இராஜாங்க செயலாளரின் இலங்கைக்கான விஜயம்

நோர்வேயின் அபிவிருத்தி ஒத்துழைப்பிற்கான இராஜாங்க செயலாளரின் இலங்கைக்கான விஜயம்

StateMinister-Norway

நோர்வேயின் அபிவிருத்தி ஒத்துழைப்பிற்கான இராஜாங்க செயலாளர் திரு. ஜென்ஸ் ஃப்ரோலிச் ஹோல்ட் அவர்கள் இலங்கைக்கான தனது மூன்று நாள் விஜயத்தை 2018 ஜூன் 23ஆந் திகதி பூர்த்தி செய்தார்.

இவ் விஜயத்தின் போது இராஜாங்க செயலாளர் ஹோல்ட் அவர்கள் மீன்பிடி மற்றும் நீரியல் வளங்கள் அபிவிருத்தி மற்றும் கிராமிய பொருளாதார அமைச்சர் விஜித விஜயமுனி சொய்சா, நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் மங்கள் சமரவீர, நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம், எதிர்க்கட்சித் தலைவர் ஆர். சம்பந்தன், வெளிநாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் வசந்த சேனாநாயக்க மற்றும் வெளிநாட்டு அலுவல்கள் செயலாளர் பிரசாத் காரியவசம் ஆகியோருடன் சந்திப்புக்களில் ஈடுபட்டார்.

இந்த கலந்துரையாடல்களின் போது, சமுத்திரங்களின் நிலையான பயன்பாடு மற்றும் கடல்சார் கழிவுகளின் முகாமைத்துவம், மீன்பிடித் துறையில் முன்னெடுக்கப்பட்டு வரும் ஒத்துழைப்பு, கடல்சார் இடநிலை திட்டமிடல், சமாதானத்தை கட்டியெழுப்புதல் மற்றும் நல்லிணக்கம் தொடர்பான செயற்பாடுகள் மற்றும் இரண்டு நாடுகளுக்குமிடையிலான இருவழி சுற்றுலாத்துறை விருத்தி உள்ளடங்கலான பொருளாதார அபிவிருத்தி ஆகியவை தொடர்பான பகிரப்பட்ட நலன்கள் மற்றும் பொதுவான சவால்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டன.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் நோர்வேயின் பிரதமர் ஏர்னா சோல்பேர்க் ஆகியோருக்கு இடையில் 2016 ஆகஸ்ட்டில் இடம்பெற்ற இருதரப்பு கலந்துரையாடல்களில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒத்துழைப்பிற்கான விடயப்பரப்புக்கள் தொடர்பிலேயே இராஜாங்க செயலாளர் ஹோல்ட் அவர்களின் இலங்கைக்கான விஜயம் அமைந்திருந்தது.

உலகின் மிகவும் மேம்பட்ட ஆய்வுக் கப்பல்களில் ஒன்றான (என்.ஓ.ஆர்.ஏ.டி. க்கு சொந்தமானதும், நோர்வேயின் கடல்சார் ஆய்வுக்கான நிறுவகம் மற்றும் பேர்கன் பல்கலைக்கழகத்துடன் இணைந்து செயற்படுவதுமான) நோர்வேயின் கடல்சார் ஆய்வுக் கப்பலான டொக்டர் பிரிட்ஜொப் நன்செனின் வருகைக்கு ஒருங்கமைவாக இந்த விஜயம் இடம்பெற்றிருந்தது. இந்த கப்பல் இலங்கையைச் சூழ 26 நாட்கள் ஆய்வு ஒன்றை மேற்கொண்டு, கடல்சார் வளங்களை கண்டறிந்து கொள்வதற்கு உதவிகளை புரியவுள்ளது. குறித்த ஆய்வுக் கப்பலை பயன்படுத்தி தேசிய மீன்பிடிக் கொள்கை செயல்வரைவை அபிவிருத்தி செய்வதற்கான தொழினுட்ப உதவி உள்ளடங்கலாக, இலங்கையின் மீன் வளங்கள் மற்றும் கடல்சார் சுற்றுச்சூழல் திட்டம் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்வதற்கு உதவுதலானது, மீன்பிடித் துறையிலான இலங்கை – நோர்வே ஒத்துழைப்புக்களின் முக்கியமான விடயக்கூறுகளாகும்.

இலங்கையுடனான நோர்வேயின் அபிவிருத்தி ஒத்துழைப்புக்கள், காலநிலை மாற்றத்துடன் தொடர்பான ஐக்கிய நாடுகளின் நிலையான அபிவிருத்தி இலக்குகள், சமுத்திரத்தை பாதுகாத்தல், சமாதானம் மற்றும் நீதி, பால்நிலை சமத்துவம் மற்றும் இயலக்கூடியதும், சுத்தமானதுமான வலு ஆகியற்றுடன் தொடர்பான முக்கிய விடயங்களில் மேலும் கவனம் செலுத்துகின்றது.

இந்த விஜயத்தின் போது, இராஜாங்க செயலாளர் அவர்கள், கொழும்பிலுள்ள நோர்வே தூதரகம் மற்றும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு ஆகியவற்றுடன் இணைந்து மீன்பிடி அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ‘எஸ்.டி.ஜி. 14 – நீருக்கு அடியிலான வாழ்க்கை’ எனும் தலைப்பிலான கருத்தரங்கில் ஜூன் 21ஆந் திகதி உரையாற்றினார்.

திரு. ஹோல்ட் அவர்கள் மேலும் யாழ்ப்பாணத்திற்கு விஜயமொன்றை மேற்கொண்டு, அங்கிருக்கும் உள்ளூர் மீனவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தாரை குருநகரில் வைத்து சந்தித்ததுடன், உள்ளூர் சமூகத்தினர் மற்றும் கடல்சார் சுற்றாடல் பாதுகாப்பு அதிகாரசபையுடன் இணைந்து கடற்கரையை சுத்தம் செய்வதிலும் பங்குபற்றினார். அவர் மேலும், பலாலி விவசாய உற்பத்திகளை விற்பனை செய்யும் கூட்டுறவுச் சங்கத்துடன் இணைந்த மரக்கறி மற்றும் பழங்களை பொதியிடும் நிலையத்தையும் திறந்து வைத்தார்.

சமுத்திரம் சார்ந்த தொழில்துறைகளை மேம்படுத்தல் மற்றும் நீலப் பொருளாதாரத் துறையில் பங்குடைமைகளை கட்டியெழுப்புதல் ஆகியவற்றின் நோக்கில், இராஜாங்க அமைச்சர் ஹோல்ட் அவர்கள் இரண்டு நாடுகளினதும் கடல்வழிப் போக்குவரத்து, கடல் மற்றும் மீன்வளர்ப்புத் துறைகளிலிருந்து பங்குபற்றிய நபர்களுக்கான நீலப் பொருளாதாரம் மீதான வர்த்தக மாநாடு ஒன்றினை ஜூன் 23ஆந் திகதி சனிக்கிழமை திறந்து வைத்தார்.

நோர்வேயானது 1970 களின் ஆரம்பத்திலிருந்து இலங்கையின் நீடித்த அபிவிருத்திப் பங்காளராக உள்ளதுடன், அதன் அபிவிருத்தி உதவிகள் இலங்கையின் சமூக மற்றும் மனித அபிவிருத்திக்கு குறிப்பிடத்தக்கவகையில் பங்களிப்புச் செய்துள்ளன.

 

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு
கொழும்பு
 
2018 ஜூன் 24
StateMinister-Norway2
Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close