காலஞ்சென்ற லக்ஷ்மன் கதிர்காமர் அவர்களை கௌரவிக்கும் முகமாக இன்று (ஜூன் 21) ஜெனீவாவில் உள்ள உலக புலமைச்சொத்து அமைப்பில் ஓவியமொன்றை திரைநீக்கம் செய்து வைக்கையில், எதிர்கால சந்ததியினரும், உலக புலமைச்சொத்து அமைப்பின் ஊழியர்களும், 'பணிகளை ஆற்றியுள்ளவரும், எம் அனைவருக்கும் உதாரணமாகவிருந்து பணிகளை ஆற்றவுள்ளவருமான' இலங்கையின் காலஞ்சென்ற வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சரின் மரபுகளை உடனடியாக தெரிந்து கொள்வதற்கு இந்த ஓவியம் வழிவகுக்கும் என தான் எதிர்பார்ப்பதாக ஐக்கிய இராச்சியத்தின் சர்வதேச வாணிபத்திற்கான இராஜாங்க செயலாளர் கௌரவ லியம் பொக்ஸ் அவர்கள் தெரிவித்தார். காலஞ்சென்ற கதிர்காமர் அவர்களின் வாழ்க்கையை நினைவுகூரும் முகமாக சர்வதேச அமைப்புக்களின் சிரேஷ்ட உத்தியோகத்தர்கள் மற்றும் இராஜதந்திரிகளை உள்ளடக்கிய விருந்தினர்களின் ஒன்றுகூடலில் உரையாற்றும்போது அவர் இந்த கருத்துக்களை குறிப்பிட்டார்.
இலங்கையின் புகழ்பெற்ற ஓவியரான திரு. ஸ்டேன்லி கிரிந்த அவர்களின் தலைசிறந்த படைப்புக்களில் ஒன்றான 'புலமைச்சொத்து மற்றும் சங்கீதத்தில் பதிப்புரிமை' என்ற வரலாற்று கவிப்பொருள்படும் 'குத்தில த வீனா ப்லேயர்' என சித்தரிக்கப்படும் இந்த ஓவியம் காலஞ்சென்ற அமைச்சரின் துணைவியான திருமதி. சுகந்தி கதிர்காமரினால் உலக புலமைச்சொத்து அமைப்பிற்கு பரிசளிக்கப்பட்டது. உலக புலமைச்சொத்து அமைப்பின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி பிரான்சிஸ் கர்ரி அவர்களின் தலைமையில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பிரித்தானியாவின் சர்வதேச வாணிபத்திற்கான இராஜாங்க செயலாளர் இந்த நிகழ்வு குறித்து மேலும் குறிப்பிடுகையில், காலஞ்சென்ற கதிர்காமர் அவர்களை 'ஒரு மா மனிதர்' என வர்ணித்து, அவரது அயராத உழைப்பினையும், பூகோள புரிந்துணர்வு மற்றும் ஒத்துழைப்பினை வலுப்படுத்துவதற்கான அவரது தலைசிறந்த பங்களிப்பினையும் பாராட்டினார்.
பணிப்பாளர் நாயகம் கர்ரி அவர்கள் உலக புலமைச்சொத்து அமைப்பில் காலஞ்சென்ற கதிர்காமர் அவர்களுடனான தனது நெருக்கமான பிணைப்புக்களை நினைவு கூர்ந்ததுடன், ஆக்கபூர்வமான சிந்தனை வாயிலாக புலமைச்சொத்து தொடர்பில் நிபுணத்துவத்தை அடைந்து கொள்வதற்கு தனக்கு கதிர்காமர் அவர்கள் உதவியதாக கருத்துத் தெரிவித்தார். 1976 தொடக்கம் 1988 வரையான காலப்பகுதியில், காலஞ்சென்ற அமைச்சர் அவர்கள் ஆசிய மற்றும் பசுபிக் பணியகத்தின் முதலாவது பணிப்பாளர் நாயகமாக பணியாற்றியதுடன், இந்த பிராந்தியத்திலுள்ள அதிகமான அபிவிருத்தியடைந்து வரும் நாடுகள் சமூக - பொருளாதார அபிவிருத்திக்காக புலமைச்சொத்தின் நன்மைகளை எய்திக் கொள்வதனை இயலுமாக்குவதற்காக புலமைச்சொத்து தொடர்பிலான திறன் கட்டியெழுப்புகையை உள்ளடக்கி, அதன் வாயிலாக அபிவிருத்தி ஒத்துழைப்பை அடைந்து கொள்வதற்கு முன்னோடியாக செயற்பட்டு, அதனை மேம்படுத்தினார்.
ஜெனீவாவிலுள்ள ஐக்கிய நாடுகள் தாபனத்திற்கான இலங்கையின் நிரந்தர பிரதிநிதி அஸீஸ் அவர்கள் காலஞ்சென்ற அமைச்சரினால் தொழில்வாண்மைத் தூண்டுகை மற்றும் திறன் பேணிவளர்ப்பு வாயிலாக விட்டுச்செல்லப்பட்டுள்ள செழிப்பானதும், வெகுமதியானதுமான மரபுகள் தொடர்பில் குறிப்பிட்டார். காலஞ்சென்ற அமைச்சர் 'சமாதானம் மிக்கதும், ஒப்புரவானதுமன இலங்கை' தொடர்பில் கனவு கண்டார் என அவர் குறிப்பிட்டார்.
இந்த நிகழ்வு இலங்கை மற்றும் ஐக்கிய இராச்சியத்தின் நிரந்தர தூதரகங்கள் மற்றும் உலக புலமைச்சொத்து அமைப்பினால் ஒருங்கிணைக்கப்பட்டது.
(Photographs Credit: WIPO. Emmanuel Berrod)