4ஆவது இலங்கை – தாய்லாந்து இருதரப்பு அரசியல் ஆலோசனைக் கூட்டமானது 2018 பெப்ரவரி 27 – 28ஆந் திகதிகளில் கொழும்பில் உயர் உத்தியோகத்தர்கள் மட்டத்தில் நடைபெற்றது.
இலங்கைக்கான குழுவானது வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் திரு. பிரசாத் காரியவசம் அவர்களினாலும், தாய்லாந்திற்கான குழுவானது தாய்லாந்து வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் நிரந்தர செயலாளர் திருமதி. புசாயா மதெலின் அவர்களினாலும் தலைமை தாங்கப்பட்டன.
இருதரப்பு அரசியல் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை மேலும் ஒருங்கிணைத்து, முன்னெடுத்துச் செல்வதற்கு இலங்கையும் தாய்லாந்தும் மீள உறுதிபூண்டு கொண்டன.
பரஸ்பர ஒருங்கிணைப்பு மற்றும் விவசாயம், மீன்பிடி, விஞ்ஞானம், தொழினுட்பம், வர்த்தகம், முதலீடு, கலாச்சாரம், சுற்றுலா சார்ந்த துறைகளில் முன்னெடுத்துச் செல்லப்படும் திட்டங்கள் தொடர்பான பரந்த விடயங்கள் மீளாய்வு செய்யப்பட்டு, கலந்துரையாடப்பட்டன.
அத்துடன், இலங்கையில் தாய்லாந்தின் அரச மழை உற்பத்தி தொழினுட்பத்தை பயன்படுத்துவதன் சாத்தியப்பாடு குறித்தும், 4ஆவது தொழினுட்பம் மற்றும் பொருளாதாரத்திற்கான இணைந்த ஆணைக்குழுவையும், இலங்கைக்கும் தாய்லாந்திற்குமிடையிலான 3ஆவது விவசாய செயற்பாட்டுக் குழுவையும் ஒன்றுகூட்டுதல் தொடர்பாகவும் கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.
இணைந்த நலன்கள் மற்றும் பரஸ்பர முக்கிய விடயங்களை மேம்படுத்துவதற்காக பிராந்திய மற்றும் பல்தரப்பு மன்றங்களில் தொடர்ச்சியாக இணைந்து பணியாற்றுவதன் முக்கியத்துவம் குறித்து இரு தரப்பினரும் வலியுறுத்தினர்.
மேலும், தாய்லாந்து வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் நிரந்தர செயலாளர் திருமதி. புசாயா மதெலின் அவர்கள் 2018 பெப்ரவரி 28ஆந் திகதி காலை வேளையில் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் திலக் மாரப்பன அவர்களுக்கு அழைப்பு விடுத்தார்.
2012 மே மாதம் 30ஆந் திகதி தாய்லாந்து வெளிநாட்டலுவல்கள் அமைச்சிற்கும், இலங்கை வெளிநாட்டலுவல்கள் அமைச்சிற்குமிடையில் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றே அரசியல் ஆலோசனைகளின் வாயிலாக இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்திக் கொள்வதற்கு வழியமைத்தது. இலங்கைக்கும், தாய்லாந்திற்குமிடையிலான முதலாவது அரசியல் ஆலோசனைக் கூட்டம் 2012 ஓகஸ்ட் மாதத்தில் கொழும்பில் நடைபெற்றதுடன், இரண்டாவது, மூன்றாவது கூட்டங்கள் 2012 மற்றும் 2014ஆம் ஆண்டுகளில் தாய்லாந்தில் நடைபெற்றன. இரு வெளிநாட்டலுவல்கள் அமைச்சுக்களினதும், ஏனைய வரிசை முகவர்களினதும் சிரேஷ்ட உத்தியோகத்தர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
—————————-