வெளிவிவகார செயலாளரும், இலங்கை தூதுக்குழுவின் தலைவருமான திரு. ரவிநாத பி. ஆரியசிங்க அவர்களால் 74 வது ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் நிகழ்த்தப்பட்ட உரை- 2019 செப்டம்பர் 30

வெளிவிவகார செயலாளரும், இலங்கை தூதுக்குழுவின் தலைவருமான திரு. ரவிநாத பி. ஆரியசிங்க அவர்களால் 74 வது ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் நிகழ்த்தப்பட்ட உரை- 2019 செப்டம்பர் 30

UNGA-30-Sept-Pic-2

 

 

தலைவர் அவர்களே,

செயலாளர் நாயகம் அவர்களே,

மேன்மை தங்கியோர்களே,

மதிப்பிற்குரிய பிரதிநிதிகளே,

கனவான்கள் மற்றும் சீமாட்டிகளே,

 

இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 74 வது அமர்வில் பங்கேற்பது உண்மையிலேயே ஒரு கௌரவம் ஆகும்.இந்த அமர்வில் கலந்து கொள்ள முடியாமல் போனதையிட்டு இலங்கை ஜனாதிபதி அதிமேதகு மைத்ரிபால சிறிசேன அவர்கள் மிகவும் வருத்தம் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 74 வது அமர்வின் தலைவராக மாண்புமிகு பேராசிரியர் திஜ்ஜனி முஹம்மத்-பண்டே அவர்கள் தேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட்டமைக்காக அன்பான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். சந்தேகத்திற்கு இடமின்றி அவரது நீண்டகால அனுபவம் இந்த கௌரவ அமர்வின் பணிகளை வெற்றிகரமாக நிறைவு செய்வதற்கு வழிநடத்தும். கடந்த அமர்வை வெற்றிகரமாக வழநடத்திய வெளிச்செல்லும் தலைவர் மாண்புமிகு திருமதி. மரியா பெர்னாண்டா எஸ்பினோசா கார்சஸ் அவர்களுக்கும் எனது நன்றிகள் உரித்தாகட்டும்.

ஐக்கிய நாடுகள் சபையின் குறிக்கோள்களை அடைவதற்காக தலைமைத்துவம் தாங்கி, அயராத முயற்சிகளில் ஈடுபடும் செயலாளர் நாயகம் அன்டோனியோ கட்டெரெஸ் அவர்களுக்கு இலங்கையின் பாராட்டுக்களை தெரிவிக்க விரும்புகின்றேன்.

மாநாட்டின் கருப்பொருள்

தலைவர் அவர்களே,

தீவிரமான வறுமையை ஒழிப்பதன் மூலமும், தரமான கல்விக்கான வழிகளை உறுதி செய்வதன் மூலமும், காலநிலை மாற்றத்திற்கு பதிலளிப்பதன் மூலமும், உட்சேர்வதனை ஊக்குவிப்பதன் மூலமும், அமைதியானதும், செழிப்பு மிக்கதுமான உலகத்தை உருவாக்க நாங்கள் முயற்சிக்கின்றமையால், இந்த ஆண்டிற்கான பொது விவாதத்தின் கருப்பொருள் சரியான நேரத்தில், மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும். 2030 அபிவிருத்தி நிகழ்ச்சி நிரலை அமுல்படுத்துவதற்கான முதல் சுழற்சி மீளாய்வை நாங்கள் நிறைவு செய்துள்ள வேளை, நிலையான அபிவிருத்தி இலக்குகளை அடைவதில் நாங்கள் கணிசமான முன்னேற்றம் அடைந்துள்ளோம் என்பது தெளிவாகிறது. ஆயினும்கூட, காலநிலை மாற்றம் தொடர்பான அச்சுறுத்தல் இந்த அடைவுகளை மறுதலித்து, வளர்ச்சிக்கான எமது பாதையைத் தடுக்கும் வகையிலுள்ளதால், பாதையின் முடிவானது நீண்ட தூரத்தில் உள்ளது,

காலநிலை தொடர்பான உலகளாவிய முன்முயற்சிகளுக்கு இலங்கை தனது வலுவான உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்துகின்றது. நாங்கள் ஒரு காலநிலை அவசரகால விளிம்பில் இருக்கிறோம் என்ற, கடந்த வாரம் இந்த இடத்தில் நடைபெற்ற காலநிலை நடவடிக்கை உச்சி மாநாட்டின் தெளிவான செய்தியை இலங்கை அங்கீகரிக்கிறது. குறித்த அவசரகால நிலைமையை தடுப்பதற்காக, எமது இணைந்த அரசியல் விருப்பத்தை வலுப்படுத்துவதும், உலகளாவிய நடவடிக்கையை துரிதப்படுத்வதும் கட்டாயமானதாகும்.

தலைவர் அவர்களே,

உணவுப் பாதுகாப்பில் நேரடியான தாக்கங்கள் உட்பட, காலநிலை மாற்றத்தைக் கொண்டுவந்த பல சவால்கள், கட்டாய மற்றும் திட்டமிடப்படாத இடப்பெயர்ச்சிக்கும் வழிவகுத்தது. காலநிலை மாற்றத்தால் மோசமடையும் சமத்துவமின்மைக்கு உந்துதலளிக்கும் காரணிகள், தமது வழக்கமான வாழ்விடங்களை விட்டு வெளியேறும்படி கட்டாயப்படுத்தும் வகையில், மக்கள் பெருமளவில் இடம்பெயர்வதை விளைவிக்கும் ஒரு உறுதியான எதிர்மறையான தாக்கத்தை தனிநபர்கள் மற்றும் சமுதாயங்கள் மீது ஏற்படுத்துகின்றன.

பாதுகாப்பான, ஒழுங்கான, வழக்கமான மற்றும் பொறுப்பான முறையில் ஒரு தன்னார்வக் கட்டமைவை நிர்வகிப்பதற்கான இடம்பெயர்வு தொடர்பான உலகலாவிய நெருக்கம் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதால், அதன் செயற்பாட்டை உறுதிசெய்வதற்கான தருணம் இதுவாகும்.

மனித கௌரவத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்தி, காலநிலை மாற்றம் உலகளாவிய வறுமை நிலையை மோசமாக்கியுள்ளதுடன், 2030 வளர்ச்சி நிகழ்ச்சி நிரலின் இலக்குகளை அடைவதற்கான மிகப்பெரிய அச்சுறுத்தல்களில் ஒன்றாகவும் விளங்குகின்றது. வறுமை ஒழிப்பு தொடர்பான சர்வதேச முயற்சிகளுக்கு இலங்கை உறுதிப்பாடுடையதாக இருப்பதுடன், 72/233 தீர்மானத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்ட 'வறுமை ஒழிப்புக்கான மூன்றாவது ஐக்கிய நாடுகள் தசாப்தம் 2018 - 2027' என்ற பிரகடனத்தை வரவேற்கிறது. வறுமையை ஒழிப்பது பல தசாப்தங்களாக இலங்கையின் வளர்ச்சி உத்திகளின் மையத்தில் உள்ளது.

தலைவர் அவர்களே,

சமூக முன்னேற்றம் மற்றும் பொருளாதார வலுவூட்டலுக்கு தரமான கல்வி திறவுகோலாக உள்ளது. வறுமையை ஒழிப்பதற்கும் முன்னேற்றத்தை அடைவதற்குமான ஒரு வழிமுறையாக, தரமான கல்வியை இலங்கை பெரிதும் கருதுகின்றது. புத்தாயிரமாண்டின் அபிவிருத்தி இலக்குகள் நிலைபேறான அபிவிருத்தி இலக்குகள் ஆகியவற்றை அறிமுகப்படுத்துவதற்கு பல தசாப்தங்களுக்கு முன்னர், 1945 ஆம் ஆண்டு முதல் ஆரம்ப நிலை மற்றும் இரண்டாம் நிலை மட்டங்களில் உலகளாவிய மற்றும் இலவசக் கல்வியை வழங்கும் நீண்டகால கொள்கை எங்களிடம் உள்ளது. அனைத்து தரப்பு மக்களுக்கும் தரமான கல்விக்கு சமமான அணுகல் இருப்பதை இந்தக் கொள்கை உறுதி செய்வதுடன், பலன்களையும் வழங்குகின்றது. இன்று, இலங்கையின் கல்வியறிவு விகிதம் 92% ஆக உள்ளதுடன், இது உலகின் மிக உயர்ந்த விகிதத்தில் ஒன்றாகும்.

பன்முகத்தன்மைக்கான சவால்

தலைவர் அவர்களே,

எதிர்மறையான போக்குகளைத் திருப்புவதற்கான இந்த முயற்சிகளில் நாம் விடாமுயற்சியுடன் இருப்பதால், உலகளாவிய சவால்களை தெரிவிப்பதிலான எமது திறனானது, சமீபத்திய காலங்களில் பன்முகத்தன்மைக்கு அதிகரித்து வரும் அச்சுறுத்தலால் சமரசம் செய்யப்பட்டுள்ளது.

அடுத்த ஆண்டு ஐக்கிய நாடுகள் தனது 75 வது ஆண்டு நிறைவை நெருங்குவதனால், உறுப்பு நாடுகளுடனான ஈடுபாடு உள்ளிட்ட அதன் வெற்றிகளையும் தோல்விகளையும் மதிப்பிடுவதற்கான சிறந்த வாய்ப்பு இதுவாகும். ஏழு தசாப்தங்களுக்கும் மேலான நம்பிக்கை மற்றும் சமத்துவத்தின் அடிப்படையிலான உறுப்பு நாடுகளுக்கும் ஐ.நா.வுக்கும் இடையிலான பங்காண்மையானது சமரசம் செய்யப்படக்கூடாது என்பதுடன், தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல் நிகழ்ச்சி நிரல்களுடன் கூடிய எவருக்கும் பொறுப்புக் கூறாத செயற்பாட்டளர்களால் கடத்தப்படுவதற்கும் அனுமதிக்கப்படக்கூடாது. உலகளாவிய அரசியலின் நிலப்பரப்பு மாற்றத்துடன், குறிப்பாக அரசு சாராத செயற்பாட்டாளர்களின் தோற்றத்துடன், இறையாண்மை மிக்க உறுப்பு நாடுகளால் உருவாக்கப்பட்ட மற்றும் இயக்கப்படும் ஒரு அமைப்பாக, உள்நாட்டு விடயங்கள் தொடர்பில், உறுப்பு நாடுகளால் எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கு முதன்மையும் மரியாதையும் வழங்கப்பட வேண்டியது அவசியம்.

இந்த சூழலில், ஐ.நா பொதுச் சபையின் புத்துயிர் பெறுதல் செயன்முறையின் மூலம் அதன் பணியை வலுப்படுத்துவதற்கான எமது தேடலானது, ஐக்கிய நாடுகள் சபையின் முக்கியமான மற்றும் கொள்கை உருவாக்கும் அமைப்பாக இது விளங்குகின்றது என்பதை உறுதிசெய்வதற்கு மிகவும் முக்கியமானதாகும். எனவே, சொந்த நலன்களைக் கொண்ட நிறுவனங்களால் தவறாக வழிநடத்தப்படுவதைத் தவிர்க்க வேண்டியது ஐ.நா. கொள்கை அமுல்படுத்துபவர்களது கடப்பாடாகும். ஐ.நா.வின் பணி எப்போதும் உறுப்பு நாடுகளால் இயக்கப்பட வேண்டும் ஆதலால், அது சரியான ஆலோசனை செயன்முறை இல்லாமல் தீர்மானங்களை மேற்கொள்வதிலிருந்து விலக வேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால், இந்த கௌரவ அமைப்பை அது இழிவுபடுத்துவதோடு, அது பிரதிநிதித்துவப்படுத்தும் மதிப்புகளை மறுப்பது மட்டுமல்லாமல், உறுப்பு நாடுகளின் நம்பிக்கையை உடைத்து, ஐ.நா.வுடனான பங்காண்மையையும் பாதிப்படையச் செய்யும்.

தலைவர் அவர்களே,

நிராயுதபாணியாக்குவதற்கான இலங்கையின் அர்ப்பணிப்பு உறுதியானது. உலகளாவிய ஆயுதக் கட்டுப்பாடு, நிராயுதபாணியாக்கம் மற்றும் அணுவாயுத தவிர்ப்பு ஒப்பந்தங்களுக்கு அதிகரித்து வரும் சவால்களுடன், இலங்கை நிராயுதபாணியாக்கம் தொடர்பான மாநாட்டின் முக்கிய பங்கை தொடர்ந்து அங்கீகரித்து வருவதுடன், அதன் ஆணையின் கீழ் கணிசமான பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குமாறு வலியுறுத்துகின்றது. நிராயுதபாணியாக்கம் தொடர்பான மாநாட்டிற்கான இலங்கையின் தலைமையின் கீழ் 2018 பெப்ரவரி மாதத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட (நிராயுதபாணியாக்கம் தொடர்பான மாநாடு) CD / 2119 என்ற தீர்மானமானது, பேச்சுவார்த்தைகளை விரைவாக மீண்டும் தொடங்குவதில் கவனம் செலுத்தும் வெவ்வேறு கண்ணோட்டங்களை நோக்கிய ஒரு மிதமான பங்களிப்பாக இருந்தது. இந்த செயன்முறையின் தொடர்ச்சியில் நாங்கள் மதிப்பைக் காண்கின்றோம்.

மேலும், சமீபத்திய ஆண்டுகளில், ஒட்டாவா சாசனம் உட்பட பல ஆயுதக் குறைப்பு ஒப்பந்தங்களுக்கு இலங்கை ஒப்புக்கொண்டது. சில வழக்கமான ஆயுதங்கள் தொடர்பான சாசனங்கள் மற்றும் கொத்தணிக் குண்டுகள் தொடர்பான சாசனம் ஆகியவற்றுக்கும் இலங்கை தலைமை தாங்கியுள்ளது.

இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்த 50 வது ஆண்டு நிறைவை அடுத்த ஆண்டு குறிக்கும் என்பதால், 2020 அணு ஆயுதங்களை பெருக்காமலிருத்தல் தொடர்பான ஒப்பந்தம் தொடர்பான மறுஆய்வு மாநாடு, தமது கடமைகளை நிறைவேற்றுவதற்கான வாய்ப்பையும் உறுப்பு நாடுகளுக்கு வழங்கும்.

உலகப் பாதுகாப்பு மற்றும் அமைதிக்கான எமது ஈடுபாட்டை வெளிக்காட்டும் முகமாக, 1960 முதல், மத்திய ஆபிரிக்க குடியரசு, கொங்கோ, கோட் டி ஐவரி, ஹையிட்டி, லெபனான், லைபீரியா, மாலி, தென் சூடான், திமோர் மற்றும் மேற்கு சஹாரா போன்ற நாடுகளில் பணியாற்றி, ஐ.நா. அமைதிகாக்கும் முயற்சிகளில் இலங்கை பங்களிப்பு செய்து வருகின்றது. மிகவும் பாதுகாப்பான மற்றும் அமைதியான உலகத்திற்கான எமது பங்களிப்பை மேம்படுத்த நாங்கள் எதிர்பார்க்கின்றோம் என்பதுடன், ஐ.நா. விற்கு இலங்கை வழங்கி வரும் நீண்டகால அமைதி காக்கும் பங்களிப்பில் தடைகள் ஏற்படுத்தப்படக்கூடாது.

பயங்கரவாதக் குழுக்களுடனான குறைந்த மற்றும் அதி தீவிர மோதல்களில் இலங்கையின் சமீபத்திய அனுபவத்தைப் பொறுத்தவரை, அமைதி காக்கும் மற்றும் மனிதாபிமான உதவிகளை வழங்கும் அனைத்து அம்சங்களிலும் விரிவான தொழில்முறை அனுபவங்களைக் கொண்டுள்ள இலங்கை அனுப்பிய துருப்புக்களுடன் பொருந்தும் விதமான தரமானவையாக சில நாடுகள் இருக்க முடியும். அவர்களின் பங்களிப்புக்கு நன்றியைத் தெரிவிக்க நான் இந்த வாய்ப்பை பயன்படுத்துவதுடன், குறிப்பாக 2005 இல் ஹைட்டியில் இறுதி உயிர்த் தியாகம் செய்த கோர்பொரல் எம். விஜேசிங்க மற்றும் இந்த ஆண்டின் ஆரம்பத்தில் மாலியில் இறுதி உயிர்த் தியாகம் செய்த கெப்டன் எச்.டபிள்யூ.டி. ஜயவிக்ரம மற்றும் கோர்பொரல் எஸ்.எஸ். விஜேகுமார ஆகிய மூன்று வீரர்களையும் நினைவுகூர விரும்புகிறேன்.

தலைவர் அவர்களே,

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் குடியேற்றங்கள் தொடர்ந்தும் விரிவுபடுத்தப்பட்டு, வீடுகள் இடிக்கப்படும் கிழக்கு ஜெருசலேம் உட்பட ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீன பிரதேசத்தில் மோசமடைந்து வரும் நிலைமை குறித்து இலங்கை கவலையடைந்துள்ளது.

தமது பிரதேசத்தில் உள்ள இயற்கை வளங்களுக்கும், அரசுக்கான ஆள்புலத்துக்குமான ஒரு நியாயமான மற்றும் தவிர்க்கமுடியாத உரிமை பலஸ்தீனிய மக்களுக்கு உண்டு என்ற இலங்கையின் நிலையான மற்றும் கொள்கை ரீதியான நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்தும் அதே வேளை, பலஸ்தீனிய மற்றும் இஸ்ரேலிய மக்களின் நியாயமான மற்றும் முக்கியமான பாதுகாப்பு சார் கரிசனைகளை நாங்கள் மேலும் அங்கீகரிக்கிறோம். இந்த சூழலில், பலஸ்தீனிய மக்களின் அரசுக்கான தவிர்க்கமுடியாத உரிமைகள் மற்றும் 1967 எல்லைகளின் அடிப்படையில் இரு அரச தீர்வை அடைவது ஆகியன தொடர்பான ஐ.நா. பொதுச் சபைத் தீர்மானங்களை விரைவாக அமுல்படுத்துவதன் முக்கியத்துவத்தை இலங்கை மீண்டும் வலியுறுத்துகின்றது.

அபிவிருத்தி மற்றும் சமாதானம்

தலைவர் அவர்களே,

சமாதானம் இல்லாமல் எந்த வளர்ச்சியும் இருக்க முடியாது. சமாதானம் என்பது ஸ்திரத்தன்மை, இணைந்து செல்லல் மற்றும் சமூக - பொருளாதார வளர்ச்சிக்கு ஒரு ஊக்கியாக உள்ளது. 'பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டம்' ஒரு சர்வதேச சலசலப்பு மிக்க சொற்றொடராக மாறுவதற்கு முன்பே, ஏறத்தாள 30 ஆண்டுகளாக, எனது நாடு பிரிவினைவாத பயங்கரவாதத்தால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாகும். 2009 ல் இலங்கையில் பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டவுடன், கிட்டத்தட்ட ஒரு தசாப்த காலமாக முன்னோடியில்லாததொரு 'சமாதான நிலை' யை அனுபவித்தோம்.

எவ்வாறாயினும், 250 க்கும் மேற்பட்ட எமது உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பிரஜைகளின் உயிரைப் பறித்து, நூற்றுக்கணக்கானவர்களை காயமடையச் செய்த, ஏப்ரல் 21 - ஈஸ்டர் ஞாயிறு தினமன்று இலங்கையில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதலால் இந்த அமைதி சிதைவடைந்தது. இது, ஈராக் மற்றும் சிரியாவிலான இஸ்லாமிய அரசினால் (ஐ.எஸ்.ஐ.எஸ்) ஈர்க்கப்பட்ட மற்றும் விசுவாசமுடையவர்களாக உரிமை கோரப்பட்ட அடிப்படைவாதத் தீவிரவாத பயங்கரவாதிகளின் செயலாகும்.

இது இயல்பாக்கம், நல்லிணக்கம் மற்றும் மேம்பாட்டு செயன்முறையை ஆர்வத்துடன் பாதுகாத்து, நாட்டில் பிரிவினைவாத பயங்கரவாதிகளுடனான மோதலின் முடிவில் இருந்து மீண்டும் கட்டியெழுப்பப்பட்ட இலங்கையிலுள்ள பன்மைத்துவ சமுதாயத்தை சவாலுக்கு உட்படுத்தியது. நாட்டின் சமூகக் கட்டமைப்பை சீரழிக்க இந்த பயங்கரவாதிகள் முயற்சித்த போதிலும், எமது சமூகங்களுக்கும் சட்ட அமுலாக்க அதிகாரிகளுக்கும் இடையிலான விரிதிறன் மற்றும் நம்பிக்கை ஆகியன, வரவிருக்கும் தாக்குதல்கள் குறித்து பிரஜைகள் தாமாக எச்சரிப்பதையும், குற்றவாளிகளைக் கைது செய்வதில் உதவுவதையும் உறுதி செய்தது.

மரணங்களை ஏற்படுத்தும் விஷமான தீவிரமயமாக்கல், தீவிரவாதம் மற்றும் பயங்கரவாதம் ஆகியவற்றுக்கு எதிரான தடையாற்றலை எந்த நாடும் கொண்டிருக்கவில்லை என்பதை இந்த சம்பவம் எமக்கு மேலும் நினைவூட்டியது. இந்த உலகளாவிய அச்சுறுத்தல்களை எதிர்த்துப் போராடுவதற்கான எமது தீர்மானத்தை அது மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளதுடன், அடிப்படை தோற்றுவாய் காரணங்களை நிவர்த்தி செய்ய அனைத்து நாடுகளும் ஒத்துழைப்புடன் செயற்படுமாறு தூண்டுகிறது.

ஈஸ்டர் ஞாயிறு தின தாக்குதல்களுக்கு தடையின்றி கண்டனங்களை வெளிட்டு, இலங்கை அரசாங்கத்துக்கு பல வழிகளிலும் ஆதரவுகளை வழங்கிய ஐ.நா. செயலாளர் நாயகம் மற்றும் சர்வதேச சமூகத்திலுள்ள எமது நண்பர்களுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.

பயங்கரவாதம் மற்றும் மனித உரிமைகளைப் பாதுகாத்தல்

தலைவர் அவர்களே,

ஈஸ்டர் ஞாயிறு தின குண்டுவெடிப்பின் நிகழ்வுகள், 'பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவது' என்பது 'மனித உரிமைகளைப் பாதுகாப்பதுடன்' கைகோர்த்துச் செல்ல வேண்டும் என்பதையும் எமக்குக் கற்பித்தது: ஒன்று மற்றொன்றுக்காக சமரசம் செய்யப்பட முடியாது. இதேபோன்ற சூழ்நிலைகளுக்கு இரட்டைத் தரங்களைப் பயன்படுத்துவதுடன், பெரும்பாலும் இந்த பிரச்சினைகளை அரசியல்மயமாக்கி, அரசுகள் ஒன்றில் அல்லது மற்றொன்றை நோக்கி தீவிரமாக செல்கின்றன ஆதலால், இந்த மிக நுணுக்கமான சமநிலை பெரும்பாலும் கைகளுக்கு எட்டாததாக உள்ளது.

ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமையன்று இடம்பெற்ற வன்முறைத் தீவிரவாதத்தால் முன்வைக்கப்பட்ட சவால்களிலிருந்து மீண்டு வருவதற்கான பணியை ஒரு தேசமாக நாம் கண்டுகொண்டோம். பிரஜைகள் ஒப்பீட்டளவில் குறுகிய காலத்திற்குள் பாதுகாக்கப்பட்டதுடன், சட்டம் மற்றும் ஒழுங்கு ஆகியன மீள நிலைநிறுத்தப்பட்டன, மக்கள், சமூகங்கள் மற்றும் ஒட்டுமொத்த சமுதாயமும் மீண்டும் பாதுகாப்பாக உணர்வதனை உறுதிப்படுத்துவதற்காக எமது நிறுவனங்கள் ஒவ்வொன்றும் தமது வகிபாகங்களை உறுதிப்படுத்திக் கொண்டன.

எனவே, ஈஸ்டர் தாக்குதலுக்கு பிந்தைய காலம், பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடும் போது, மனித உரிமைத் தரங்களை கடைப்பிடிப்பதற்கான இலங்கையின் தீர்மானத்திற்கானதொரு 'லிட்மஸ் பரிசோதனை' என்பதை நிரூபித்துள்ளதுடன், சமீபத்திய ஆண்டுகளில் பலப்படுத்தப்பட்ட ஜனநாயக நிறுவனங்களின் பலங்களையும் குறைபாடுகளையும் கண்டறிந்துள்ளது. இந்த சூழலில், தற்போது பாராளுமன்றத்தால் பரிசீலிக்கப்பட்டு வரும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் வரைவு குறித்து ஆய்வு செய்து முன்மொழிவதற்காக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் திலக் மாரப்பன அவர்களின் தலைமையிலான அமைச்சரவைக் குழுவொன்று அமைச்சரவையால் நிறுவப்பட்டுள்ளது. எமது சர்வதேச கடப்பாடுகளுக்கு உணர்திறன் மிக்கதாக, பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவது தொடர்பான பயங்கரவாதத்துக்கான நிதியுதவி, எல்லைப் பாதுகாப்பு, பயங்கரவாத போராளிகளைத் திரும்பப் பெறுதல் மற்றும் வன்முறையை எதிர்கொள்வது என்பவற்றுடன் சார்ந்த சமீபத்திய பாதுகாப்புச் சபையின் தீர்மானங்களுடன் இயைபானதாக எமது உள்நாட்டு சட்டங்களை செயற்படுத்தும் முயற்சியில் இலங்கை தனது பங்குதாரர்களுடன் ஆலோசித்து வருகின்றது.

வன்முறை தீவிரவாதத்திற்கு வழிவகுக்கும் தீவிரவாத சித்தாந்தங்களை எதிர்ப்பதற்கு சட்டமன்ற நடவடிக்கைகள் மற்றும் சட்ட அமுலாக்க வழிமுறைகளை உருவாக்குவது உட்பட, இணையம் மற்றும் சமூக ஊடகத் தளங்களை பயங்கரவாதிகள் பயன்படுத்துவதையும் துஷ்பிரயோகம் செய்வதையும் தடுப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த சூழலில், இளைஞர்களின் விமர்சன சிந்தனைத் திறனை வளர்த்துக் கொள்ளல், சமூகப் பிணைப்புகளை வலுப்படுத்தல், குடியியல் கடமை உணர்வைத் தூண்டுதல் மற்றும் பயங்கரவாதத்திற்கு உகந்த தீவிரவாத சித்தாந்தங்களின் விளைவுகள் மற்றும் தாக்கங்களைத் தணிப்பதற்காக சமூக நெகிழ்ச்சியை உருவாக்குதல் ஆகிய சட்ட அமுலாக்க அதிகாரிகளின் கண்களுக்கு அப்பாற்பட்ட விடயங்கள் அவசியமானதாகும். இது சம்பந்தமாக, வன்முறைத் தீவிரவாதத்தைத் தடுப்பதற்கு, தீவிரவாதத்தின் உள்நாட்டு செயற்பாட்டாளர்களுக்கு எதிரான சமூகத்தின் வகிபாகம் மற்றும் விரிதிறன் ஆகியன அவசியமாகும்.

நாம் ஆட்சியில் உறுதியாக இருக்க வேண்டும் என்பதனை கடந்த ஐந்து மாதங்களுக்கும் மேலான மீட்புக்கள் கோரின. இந்த சவால்களிலிருந்து நாம் உண்மையிலேயே மீண்டெழுந்து வர வேண்டுமானால், அதற்கு ஒரு 'முமையான அரசாங்க' அணுகுமுறையுடன் இணைந்த 'முழுமையான சமூக' அணுகுமுறைக்கு நகர்தல் அவசியம்.

மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்கம்

தலைவர் அவர்களே,

இலங்கை அதன் உள்நாட்டு ஆயுதப் பிரிவினைவாத மோதலின் முடிவில் இருந்து இரண்டாவது தசாப்தத்தில் அடியெடுத்து வைத்துள்ளமையினால், எமது நாட்டிற்கு நிரந்தர அமைதியை வழங்கும் ஒரு விரிவான செயன்முறையின் மூலம் நமது மக்களின் மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கும் பாதுகாப்பதற்கும் நாங்கள் உறுதியாக இருக்கின்றோம்.

சமீபத்திய நிகழ்வுகள் எமது நீதித்துறையின் சுதந்திரத்தையும், பொதுச் சேவை உட்பட எமது ஜனநாயக நிறுவனங்களின் விரிதிறனையும் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளன. இந்த நிகழ்வுகள் ஜனநாயகம் மற்றும் சட்டத்தின் ஆட்சி ஆகியன மீதான எமது பொதுமக்களின் நம்பிக்கையையும், பல சவால்கள் இருந்தபோதிலும் நல்லிணக்கம் மற்றும் நீடித்த சமாதானத்தை நோக்கி நாடு அதன் போக்கில் முன்னேற்றமடைந்துள்ளது என்பதனையும் உறுதிப்படுத்துகின்றன.

இந்நிலையில், மோதலிலிருந்து எழும் பல அம்சங்களை நிவர்த்தி செய்வதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்பதை தெரிவிப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். காணாமல் போனவர்கள் மற்றும் இழப்பீடுகளுக்கான அலுவலகங்கள் இப்போது முழுமையாக செயற்படுத்தப்படுகின்றன. உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை நிறுவுவது குறித்தும் அமைச்சரவை கலந்துரையாடி வருகின்றது. மனித உரிமைகளுக்கான உயர் ஸ்தானிகர் அலுவலகம் மற்றும் மனித உரிமைகள் பொறிமுறைகள் உட்பட ஐ.நா.வுடன் இலங்கை ஆக்கபூர்வமான மற்றும் தொடர்ச்சியான ஈடுபாட்டைக் கொண்டுள்ளதுடன், 2015 ஆம் ஆண்டு விடுக்கப்பட்ட நிலையான அழைப்பின் பேரில், இலங்கை 10 சிறப்பு நடைமுறை ஆணையாளர்களையும் மற்றும் பணிக்குழுக்களையும் வரவேற்றுள்ளது.

சுயாதீன நிறுவனங்களும் இந்த விடயத்தில் முக்கியமாதொரு வகிபாகத்தை கொண்டுள்ளன என்பதுடன், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவானது தேசிய மனித உரிமைகள் நிறுவனங்களின் உலகளாவிய கூட்டணியால் 2018 மே மாதத்தில் 'ஏ' அந்தஸ்துடன் மீண்டும் அங்கீகாரம் பெற்றமையை தெரிவித்துக்கொள்வது ஊக்குவிப்படையச் செய்கின்றது.

தலைவர் அவர்களே,

இவை 30 ஆண்டுகால மோதலால் பாதிக்கப்பட்டுள்ள ஒரு நாடு முன்னெடுக்க வேண்டிய எளிய வழிமுறைகள் அல்ல என்பதை நீங்கள் ஒப்புக்கொள்வீர்கள்.

அமைதியான, நியாயமான, நல்லிணக்கமான சமுதாயத்தை ஊக்குவிப்பது என்பது ஒரு குறிக்கோள் மட்டுமல்ல, அபிவிருத்திக்கான ஒரு நிலையான மற்றும் அனைத்தையும் உள்ளடக்கிய அணுகுமுறைக்கானதொரு முன்நிபந்தனையுமாகும். ஒவ்வொரு நாட்டிற்கும் அதன் தனித்துவமான பிந்தைய மோதல் நிலைமை உள்ளது. மற்ற அனுபவங்களிலிருந்து நாம் கற்றுக்கொள்ள முடியும் என்றாலும், நல்லிணக்கத்திற்கான எமது சொந்தப் பாதையை நிர்ணயிப்பதில், நாட்டின் தேசிய நலனையும், அனைத்து இலங்கையர்களின் நல்வாழ்வையும் பாதுகாக்க அரசியலமைப்பின் விதிகளால் வழிநடத்தப்படும் புதிய மற்றும் நடைமுறை ரீதியான தீர்வுகளைக் காண நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.

முடிவுரை

முடிவுரையில், விதிகளின் அடிப்படையிலான உலகளாவிய ஒழுங்கொன்றிற்கான இலங்கையின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன். பன்முகத்தன்மை மற்றும் ஒத்துழைப்பின் உணர்வை நாங்கள் மதிக்கிறோம். மனிதநேயம் ஏராளமான சவால்களை எதிர்கொண்டாலும் கூட, அனைவரினதும் நலனுக்காகவும், எமது வருங்கால சந்ததியினருக்காகவும், ஒரு கூட்டிணைந்த, ஆக்கபூர்வமான மற்றும் கூட்டுறவு ரீதியான முறையில், இவற்றை எதிர்கொள்ளும் திறனுக்குள் நாங்கள் இருக்கிறோம் என்று நான் நம்புகின்றேன்.

தங்களுக்கு எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன்.

 

Photo-2-3

 

வெளியுறவு செயலாளர் திரு. ரவிநாத பி. ஆரியசிங்க அவர்களால் நிகழ்த்தப்பட்ட உரையின் வீடியோவை  இங்கு  பதிவிறக்கம் செய்யலாம்:   https://drive.google.com/file/d/1HMojQRDR92b5qLkl-T2RqM8nZgHZiMwO/view?usp=sharing

Please follow and like us:

Close