இலங்கை மற்றும் துர்க்மெனிஸ்தானுக்கிடையிலான வெளிவிவகார அலுவலக ஆலோசனைகள்  ஆரம்பம்

இலங்கை மற்றும் துர்க்மெனிஸ்தானுக்கிடையிலான வெளிவிவகார அலுவலக ஆலோசனைகள்  ஆரம்பம்

 இலங்கைக்கும் துர்க்மெனிஸ்தானுக்கும் இடையிலான வெளிவிவகார அலுவலக ஆலோசனைகளின் ஆரம்ப அமர்வு, 2024, மே 30 அன்று நடைபெற்றது. இந்த மெய்நிகர் நிகழ்வில் இரு நாடுகளின் பிரதிநிதிகளும் பல்வேறு தளங்களில் உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் பயனுள்ள கலந்துரையாடல்களில் ஈடுபட்டுள்ளனர்.

ஒத்துழைப்பதற்கான வழிகளை ஆராய்வதில், முக்கிய சிறப்பம்சங்களாக அரசியல் மற்றும் இராஜதந்திர துறைகள், பாராளுமன்ற ஈடுபாடுகள், பொருளாதார துறைகள், எரிசக்தி, போக்குவரத்து, கல்வி மற்றும் கலாச்சாரம் ஆகியவை அமைந்தன. இரு தரப்பினரும் பரஸ்பர நன்மைக்கான சாத்தியத்தை ஒப்புக்கொண்டதுடன், அதிகரித்த ஒத்துழைப்பை வளர்ப்பதற்கு உயர்மட்ட வருகையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினர்.

இவ்வுரையாடலில், குறிப்பாக எண்ணெய் மற்றும் எரிவாயு, நெசவு மற்றும் ஆடையுற்பத்தி, விவசாயம், உணவு பதப்படுத்துதல், மருந்து மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகளில் சாத்தியமான முதலீட்டு வாய்ப்புகள் மற்றும் ஒத்துழைப்புக்கான பகுதிகள் குறித்து ஆராயப்பட்டது. மேலதிகமாக, வணிக தொடர்புகளை எளிதாக்க துர்க்மென்-இலங்கை வர்த்தக மன்றத்தை ஏற்பாடு செய்வதற்கான சாத்தியம் முன்மொழியப்பட்டது. துறைமுக அதிகாரிகள் மற்றும் வர்த்தக சபைகளுக்கு இடையேயான ஒத்துழைப்பை ஆராய்வதற்காக சமீபத்தில் நடைபெற்ற நிகழ்நிலை சந்திப்புகளை இரு தரப்பும் பாராட்டின. நிலுவையில் உள்ள ஒப்பந்தங்களை முழுமைப்படுத்தவும், சட்ட கட்டமைப்பை வலுப்படுத்தவும் இரு நாடுகளின் சட்டக் குழுக்களிடையே நிகழ்நிலை சந்திப்புகளை நடத்த இணக்கம் தெரிவிக்கப்பட்டது.

கலாச்சாரம், கலை, விளையாட்டு, சுற்றுலா மற்றும் கல்வி போன்ற ஒத்துழைப்புக்கான பிற துறைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

இலங்கைத் தூதுக்குழுவுக்கு வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் தென்கிழக்கு மற்றும் மத்திய ஆசியப் பிரிவிற்கான பணிப்பாளர் நாயகம் சசிகலா பிரேமவர்தனவும், துர்க்மெனிஸ்தான் தரப்புக்கு துர்க்மெனிஸ்தானின் வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் ஆசிய பசுபிக் திணைக்களத்தின் பணிப்பாளர் கர்பண்டர்டி சபராவ்வும் தலைமை தாங்கினர். பிரதிநிதிகள் குழுவில் பொருளாதார, வர்த்தகத் துறைகள் மற்றும் வெளியுறவு அமைச்சு உட்பட்ட, பல துறைகளின் பிரதிநிதிகள் உள்ளடங்கியிருந்தனர்.

இலங்கைக்கும் துர்க்மெனிஸ்தானுக்கும் இடையிலான வெளியுறவு அலுவலக ஆலோசனைகளின் அடுத்த சுற்று 2025, ஜனவரி மாதம் கூட்டப்படுவதற்கான முன்மொழிவுடன், இவ்வாலோசனைகள் அமர்வு நிறைவுற்றது.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு

கொழும்பு 

2024 மே 31

Please follow and like us:

Close