இலங்கை இறப்பர் தொழிற்துறையில் திறன் மேம்பாட்டிற்கான பிரெஞ்சு ஒத்துழைப்பு

இலங்கை இறப்பர் தொழிற்துறையில் திறன் மேம்பாட்டிற்கான பிரெஞ்சு ஒத்துழைப்பு

இலங்கையில் சிறிய இறப்பர் உடைமையாளர்களின் திறனைக் கட்டியெழுப்புவதற்காக, இலங்கையின் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சு இறப்பர் தொழிற்துறையில் பிரெஞ்சு நிபுணரான கே.எஸ்.ஏ.பி.ஏ. உடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டது.

இலங்கை பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சுக்கும் கே.எஸ்.ஏ.பி.ஏ. க்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம், தூதரகத்தின் பொறுப்பாளர்கள் மற்றும் தூதரகப் பணியாளர்கள், பிரான்ஸ் நிதி அமைச்சின் நேரடி நிதி, பொருளாதார துணைத் தலைவர் எலிஸ் பெங்கோ மற்றும் கே.எஸ்.ஏ.பி.ஏ. அரிடென் கோவோவின் திட்ட முகாமையாளர் ஆகியோரின் முன்னிலையில், கே.எஸ்.ஏ.பி.ஏ. முகாமைத்துவப் பணிப்பாளர் ரபேல் ஹரா அவர்களால் பாரிஸில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் வைத்து 2023 ஜனவரி 05ஆந் திகதி கைச்சாத்திடப்பட்டது. பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சின் செயலாளர் ஜனக தர்மகீர்த்தி இலங்கையின் சார்பாக 2022 டிசம்பர் 16ஆந் திகதி புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டார்.

இலங்கையின் மொனராகலை மாவட்டத்தில் இறப்பர் உற்பத்தியை பிரதானமாக இலக்காகக் கொண்ட விவசாய சமூகங்களை இலக்காகக் கொண்டு திறன் மேம்படுத்தல் செயற்பாடுகளை நடைமுறைப்படுத்துவதற்காக 'இறப்பர் பெறுமதிச் சங்கிலி மற்றும் உட்பொதிக்கப்பட்ட சிறு உரிமையாளர்களின் மீள்திறன் செயற்திட்டம்' ஐ வடிவமைத்தல் மற்றும் செயற்படுத்தலை உறுதி செய்வதே இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் நோக்கமாகும்.

படல்கும்புர மற்றும் மெதகம பிரதேசங்களில் விஷேட கவனம் செலுத்தி மொனராகலை இறப்பர் அபிவிருத்தி திட்டப் பிராந்தியத்தில் உள்ள சுமார் 6,000 இறப்பர் சிறு உடைமையாளர்களின் ஆற்றலை இத்திட்டத்தின் மூலம் வலுப்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. கிராமப்புற சிறிய ரப்பர் விவசாயிகளின் அறிவு, செயற்றிறன், வாழ்வாதாரம், சமூகக் கண்ணோட்டம் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புக்கள் ஆகியன தொடர்பில் மேம்படுத்துவதற்காக டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் மற்றும் தொழில்நுட்பப் பயிற்சியைப் பயன்படுத்துவதை இந்தத் திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்தத் திட்டத்திற்கு முக்கியமாக பிரெஞ்சுப் பொருளாதாரம், நிதி மற்றும் மீட்பு அமைச்சின் எப்.ஏ.எஸ்.இ.பி. மானியத்தால் நிதியளிக்கப்படும். மேலதிக நிதியை பிரான்சின் மிச்செலின் குழுமம் வெளிநாட்டு மானியமாக வழங்கும். இந்தத் திட்டம், சம்பந்தப்பட்ட நிபுணத்துவத்தைக் கொண்ட பிரெஞ்சுப் பொதுப் பொறுப்பு நிறுவனமான கே.எஸ்.ஏ.பி.ஏ. ஆல் வடிவமைக்கப்பட்டு செயற்படுத்தப்படும். மிச்செலின் குழுமத்தின் துணை நிறுவனமான இலங்கையில் உள்ள மெஸ்ஸர்ஸ் கேம்சோ லோட்ஸ்டார் இத்திட்டத்தின் செயற்பாட்டு நடவடிக்கைகளுக்கு பங்களிக்கும்.

இலங்கைத் தூதரகம்,

பாரிஸ்

2023 ஜனவரி 10

Please follow and like us:

Close