பெல்ஜியத்தின் ஆன்ட்வெர்ப் நகரில் இலங்கையின் கௌரவத் தூதுவராக 25 வருட சேவையை நிறைவு செய்த மொனிக் டி டெக்கர் டெப்ரெஸை கௌரவிக்கும் நிகழ்வை பிரஸ்ஸல்ஸில் உள்ள இலங்கைத் தூதரகம் 2022 நவம்பர் 22 அன்று நடாத்தியது.
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரியினால் வழங்கப்பட்ட பாராட்டுக் கடிதத்தை மொனிக் டி டெக்கர் டெப்ரெஸிடம் பெல்ஜியத்துக்கான இலங்கைத் தூதுவர் கிரேஸ் ஆசிர்வாதம் கையளித்தார். தூதுவர் ஆசிர்வாதம் அவர்கள் கருத்துத் தெரிவிக்கையில், கௌரவத் தூதுவர் மொனிக் அவர்களின் இலங்கைக்கான 25 வருட அர்ப்பணிப்பான சேவையை வாழ்த்தியதுடன், எதிர்காலத்திலும் இவ்வாறான ஒத்துழைப்பை தொடர்ந்தும் பெறுவோம் என நம்பிக்கை தெரிவித்தார்.
இலங்கைக்கும் பெல்ஜியத்துக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதில் அவர் ஆற்றிய சிறந்த பங்களிப்பிற்காக 2005ஆம் ஆண்டு இலங்கை அரசாங்கம் மொனிக் டி டெக்கர் டெப்ரெஸுக்கு 'ஸ்ரீலங்கா ரஞ்சனா' என்ற தேசியப் பட்டத்தை வழங்கியது.
இந்தப் பாராட்டு நிகழ்வில் பெல்ஜியத்தின் முன்னாள் பிரதமர் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் முதல் நிரந்தர சபைத் தலைவர் ஹெர்மன் வான் ரோம்பூய், முன்னாள் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் மார்க் ஐஸ்கென்ஸ், பெல்ஜியம் - இலங்கை நாடாளுமன்ற நட்புறவு சங்கத்தின் தலைவி செனட்டர் அலெசியா கிளேஸ், பெல்ஜிய வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் உபசரணைத் தலைவரான ஆண்ட்வெர்ப் மாகாணத்தின் இராணுவத் தளபதி லெப்டினன்ட் கேர்னல் ரூடி ரைக்போஷ், ஆண்ட்வெர்ப்பில் உள்ள வணிக சங்கங்களின் அதிகாரிகள், கௌரவத் தூதுவர்கள், பயண எழுத்தாளர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
இலங்கைத் தூதரகம்
பிரஸ்ஸல்ஸ்
2022 டிசம்பர் 01