பிரேசில் மற்றும் தென் அமெரிக்காவில் உள்ள இலங்கை ஏற்றுமதியாளர்களுக்கு வாய்ப்புகக்ள் அதிகம்: இலங்கைத் தூதுவர்

பிரேசில் மற்றும் தென் அமெரிக்காவில் உள்ள இலங்கை ஏற்றுமதியாளர்களுக்கு வாய்ப்புகக்ள் அதிகம்: இலங்கைத் தூதுவர்

 

பிரேசிலிய சந்தையில் இலங்கை ஏற்றுமதியாளர்களுக்கு வர்த்தக வாய்ப்புக்கள் குறித்து கற்பிக்கும் நோக்கில், இலங்கை வர்த்தக சம்மேளனம் மற்றும் பிரேசிலில் உள்ள சாவோ பாலோ வர்த்தக சம்மேளனம் ஆகியவற்றுடன் இணைந்து 'பிரேசிலுடன் வர்த்தகம் செய்தல்' எனும் வெபினாரொன்றை 2021 நவம்பர் 04 ஆந் திகதி பிரேசிலில் உள்ள இலங்கைத் தூதரகம் ஏற்பாடு செய்திருந்தது.

 

பிரேசிலில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் அனுசரணையில் இலங்கை வர்த்தக சம்மேளனம் மற்றும் சாவோ பாலோ வர்த்தக சம்மேளனம் ஆகியவற்றுக்கு இடையில் 2021 செப்டெம்பர் 14 ஆந் திகதி மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் வெற்றிகரமான விளைவே இந்த முயற்சியாகும்.இரு நாடுகளுக்கிடையிலான வர்த்தக அளவை அதிகரிப்பதன் முக்கியத்துவத்தையும் பிரேசிலில் இருந்து இலங்கைக்கு அதிக சுற்றுலாப் பயணிகளையும் வெளிநாட்டு நேரடி முதலீடுகளையும் ஈர்ப்பதன் முக்கியத்துவத்தை தனது வரவேற்பு உரையில் இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி மஞ்சுள டி சில்வா எடுத்துரைத்தார்.

 

பிரதான உரையை ஆற்றிய தூதுவர் சுமித் தசநாயக்க, இலங்கையின் ஏற்றுமதியாளர்கள் தமது பிரேசில் மற்றும் தென் அமெரிக்க சகாக்களுடன் வர்த்தக ஈடுபாடுகளில் ஈடுபடுவதன் முக்கியத்துவத்தை கோடிட்டுக் காட்டினார். சில தெற்காசிய மற்றும் தூர கிழக்கு ஆசிய நாடுகளின் ஏற்றுமதி அளவு பிரேசிலுக்கான 100 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மேல் உள்ள அதேவேளை, பிரேசிலுக்கான இலங்கையின் ஏற்றுமதி 2020 இல் 42 மில்லியன் அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளதாக தூதுவர் மேலும் சுட்டிக்காட்டினார். தென் அமெரிக்கப் பிராந்தியத்திற்கான ஏற்றுமதியை அதிகரிப்பதற்குத் தேவையான அறிவு, திறன்கள் மற்றும் நிபுணத்துவம் ஆகியவற்றை இலங்கை நிறுவனங்கள் பெற்றிருந்தாலும், பரந்த வாய்ப்புக்களை இலங்கையர்கள் பயன்படுத்திக் கொள்ளாதது ஆச்சரியமாக உள்ளதாக தூதுவர் மேலும் தெரிவித்தார்.

 

பிரேசில் மற்றும் தென் அமெரிக்க நிறுவனங்களுடன் கூட்டு முயற்சிகள், வர்த்தக ஒத்துழைப்புக்கள் மற்றும் கூட்டாண்மைகளை ஆரம்பிப்பதற்கான வாய்ப்புக்களை ஆராயுமாறும் இலங்கை தொழில் முயற்சியாளர்களை தூதுவர் சுமித் தசநாயக்க வலியுறுத்தினார்.

 

சாவோ பாலோ வர்த்தக சம்மேளனத்தின் வெளிவிவகாரங்களுக்கான விஷேட ஆலோசகர், மொரிசியோ மன்ஃப்ரே தனது விளக்கக்காட்சியில் பிரேசிலிய சந்தையின் முக்கிய பகுதிகள் உட்பட, பிரேசிலில் இலங்கைக்கான சந்தை வாய்ப்புக்கள், சந்தை சார்ந்த தடைகள் மற்றும் ஏனைய தடைகள், சவால்கள், தேவையான தரநிலைகள், சான்றிதழ்கள், சம்பந்தப்பட்ட அதிகாரசபைகள் பற்றிய தகவல்கள், வெற்றிகரமான வணிக ஈடுபாட்டிற்கான உத்திகள், வணிகக் கலாச்சாரம், சந்தை ஊடுருவலுக்கு சிறந்த பொருத்தமான வழிகள் பற்றிய பரிந்துரைகளை வழங்கினார். சர்வதேச வணிகம் மற்றும் சட்டத்தில் 30 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்டவரான விஷேட ஆலோசகர் மன்ஃப்ரே, தற்போது பிரேசிலின் வெளிநாட்டு அமைச்சின் கீழ் பிரேசிலிய ஏற்றுமதி அபிவிருத்தி முகவரமைப்பில் வெளிநாட்டில் ஒரு பிரதிநிதி அதிகாரியாகச் செயற்படுகின்றார்.

 

இலங்கையில் இருந்து 75 இலங்கை நிறுவனங்கள் இணைய வழியாக இணைந்திருந்ததுடன், கேள்வி மற்றும் பதில் அமர்வில், பங்கேற்பாளர்களால் எழுப்பப்பட்ட குறிப்பிட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கப்பட்டது.

 

 

இலங்கைத் தூதரகம்,

பிரேசில்

 

2021 நவம்பர் 08

 

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close