உயர் ஸ்தானிகர் கனநாதன் தனது நற்சான்றிதழ்களைக் கையளித்தார்

உயர் ஸ்தானிகர் கனநாதன் தனது நற்சான்றிதழ்களைக் கையளித்தார்

 

கென்யாவிற்கான உயர் ஸ்தானிகராக நியமனம் செய்யும் நற்சான்றிதழ் கடிதத்தை உயர் ஸ்தானிகர் வேலுப்பிள்ளை கனநாதன் கென்யக் குடியரசின் ஜனாதிபதி உஹூரு முய்கைய் கென்யாட்டா அவர்களிடம் 2020 டிசம்பர் 02 ஆந் திகதி நைரோபியில் உள்ள அரச மாளிகையில் வைத்து கையளித்தார்.

உத்தியோகபூர்வ விழாவைத் தொடர்ந்து, ஜனாதிபதி புதிய உயர் ஸ்தானிகரை ஒரு தனிப்பட்ட சந்திப்பிற்கு அழைத்ததுடன், அந்த சந்திப்பின் போது, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, அரசாங்கம் மற்றும் இலங்கை மக்களின் வாழ்த்துக்களை உயர்ஸ்தானிகர் கனநாதன் ஜனாதிபதி கென்யாட்டாவுக்குத் தெரிவித்தார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுடன் தான் கொண்டிருந்த நல்லுறவு மற்றும் நெருங்கிய உறவுகளை நினைவு கூர்ந்த ஜனாதிபதி கென்யாட்டா, பிணைப்பை ஆழப்படுத்துவதற்காகவும், கென்யாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை முன்னேற்றுவதற்காகவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களுடன் நெருக்கமாகப் பணியாற்றுவதற்காக எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் தலைமையிலான தற்போதைய அரசாங்கம் ஆபிரிக்காவுடன், குறிப்பாக கிழக்கு மற்றும் தென்னாபிரிக்காவுக்கான பொதுவான சந்தையின் செயல் உறுப்பினராக இருக்கும் கென்யாவுடனான உறவை மேம்படுத்துவதற்கு பெரும் முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது என உயர் ஸ்தானிகர் விளக்கினார். இலங்கையின் அணுகுமுறையைப் பாராட்டிய கென்ய ஜனாதிபதி, ஆபிரிக்கா மற்றும் ஆசியாவிலான பிராந்திய பொருளாதார வாய்ப்புக்கள், குறித்த நாட்டு மக்களின் செழிப்புக்காக இரு தரப்பினராலும் பூர்த்தி செய்யப்பட வேண்டும் என்றும், ஆபிரிக்காவுடனான உறவை புதிய உயரங்களுக்கு விரிவுபடுத்துவதற்கான தனது முயற்சிகளை இலங்கை தொடர வேண்டும் என்றும் தெரிவித்தார்.

இலங்கை மற்றும் கென்யா ஆகியவை உலகளாவிய பிரச்சினைகள் குறித்த பொதுவான கருத்துக்களைப் பகிர்ந்துகொள்வதோடு, பலதரப்பு மன்றங்களில் ஒருவருக்கொருவர் தமது ஆதரவுகளை வழங்குவதாகவும், இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பு மற்றும் நல்ல விருப்பத்தை வலுப்படுத்துவதற்கு பரிந்துரைத்துள்ளதாகவும் ஜனாதிபதி கென்யாட்டா தெரிவித்தார்.

இந்த சந்திப்பின் போது, கென்யாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான 50 ஆண்டுகால இராஜதந்திர உறவுகளை அவர்கள் புகழ்ந்துரைத்ததோடு, இருதரப்பு உறவுகளில் அடைந்த முன்னேற்றத்தையும் பாராட்டினார். இருதரப்பு உறவுகளை ஒத்துழைப்பின் பல புதிய துறைகளில், குறிப்பாக வர்த்தகம், முதலீடு மற்றும் ஏனைய பொருளாதார நடவடிக்கைகளில் அதன் உண்மையான திறனை அடைவதற்கு விரிவாக்க வேண்டியதன் அவசியம் குறித்த கருத்துகளை ஜனாதிபதியும் உயர் ஸ்தானிகரும் பகிர்ந்து கொண்டனர். இது தொடர்பாக, இரு நாடுகளுக்கிடையில் தற்போதுள்ள உறவுகளை விரிவுபடுத்துவதற்கும் ஆழப்படுத்துவதற்குமானதொரு ஆணையை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் கென்ய உயர் ஸ்தானிகர் என்ற முறையில் தன்னிடம் ஒப்படைத்துள்ளதாக உயர்ஸ்தானிகர் கனநாதன் தெரிவித்ததுடன், பகிரப்பட்ட நன்மைக்காக அந்த நோக்கத்தை உணரத் தேவையான அனைத்து ஒத்துழைப்பையும் தனது அரசாங்கம் வழங்கும் என ஜனாதிபதி கென்யாட்டா பதிலளித்தார். கென்யாவில் உள்ள இலங்கை உயர் ஸ்தானிகராலயமானது, இப்பிராந்தியத்தில் உள்ள ஏனைய எட்டு ஆபிரிக்க நாடுகளுக்கும் ஒரே நேரத்தில் அங்கீகாரம் பெற்றதாகும்.

உயர் ஸ்தானிகர் கனநாதன் உகாண்டாவிற்கான இலங்கையின் கௌரவத் தூதுவராக இருந்ததுடன், இதற்கு முன்னர் உகாண்டாவிற்கான இலங்கையின் முதலாவது உயர் ஸ்தானிகர் என்ற பதவியையும் வகித்திருந்தார். ஆபிரிக்கப் பிராந்தியத்திலான அவரது பரந்த அறிவையும் அனுபவத்தையும் கருத்தில் கொண்டு, 2020 ஜனவரியில் ஆபிரிக்காவுக்கான இலங்கைப் பிரதமரின் சிறப்புப் பிரதிநிதியாக உயர் ஸ்தானிகர் கனநாதன் நியமிக்கப்பட்டார். 36 ஆண்டுகளுக்கும் மேலாக ஆபிரிக்காவில் நன்கு அறியப்பட்ட தொழில்வாண்மையாளராக உயர் ஸ்தானிகர் கனநாதன் திகழ்ந்து வருகின்றார். இவர் புனித தோமஸ் கல்லூரியின் பழைய மாணவராவார்.

இலங்கை உயர் ஸ்தானிகராலயம்

நைரோபி

 

2020 டிசம்பர் 04

 

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close