பெண்கள் மீதான 4 வது உலக மாநாட்டின் 25வது ஆண்டுவிழாவில் நடைபெற்ற உயர்மட்டக் கூட்டத்தில் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் வெளிநாட்டு அமைச்சர் கௌரவ தினேஷ் குணவர்தன அவர்களின் உரை - 01 அக்டோபர் 2020

பெண்கள் மீதான 4 வது உலக மாநாட்டின் 25வது ஆண்டுவிழாவில் நடைபெற்ற உயர்மட்டக் கூட்டத்தில் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் வெளிநாட்டு அமைச்சர் கௌரவ தினேஷ் குணவர்தன அவர்களின் உரை – 01 அக்டோபர் 2020

 

தலைப்பு: 'பாலின சமத்துவத்தை உணர்ந்து கொள்வதனை விரைவுபடுத்தல் மற்றும் அனைத்து பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கும் அதிகாரமளித்தல்'

தொடக்கக் கருத்துக்கள்:

தலைவர் அவர்களே,

பொதுச்செயலாளர் அவர்களே,

மேன்மை தங்கியவர்களே,

புகழ்பெற்ற பிரதிநிதிகளே,

கனவான்களே மற்றும் சீமாட்டிகளே,

  • பெண்கள் மீதான 4 வது உலக மாநாட்டின் 25 வது ஆண்டு நிறைவை நினைவுகூரும் இந்த உயர்மட்டக் கூட்டத்தில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தியமையை முன்னிட்டு நான் பெருமிதமடைகின்றேன்.
  • சந்தேகத்திற்கு இடமின்றி, 1995 ஆம் ஆண்டில் பெண்கள் பற்றிய 4 வது உலக மாநாட்டின் போது ஏற்றுக்கொள்ளப்பட்ட பெய்ஜிங் பிரகடனம் மற்றும் செயற்பாட்டுக்கான தளம் ஆகியவை பெண்களின் அதிகாரமளிப்பிற்கான ஒரு முக்கிய உலகளாவிய நிகழ்ச்சி நிரலாகும். உலகளவில் பெண்களின் முன்னேற்றத்திற்கான வழிகாட்டுதல் மற்றும் உத்வேகத்துக்கும், பாலின சமத்துவத்தை அடைந்து கொள்வதற்குமான ஆதாரமாக உள்ள இந்த விரிவான கொள்கை ஆவணம் 25 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்ததைப் போலவே இன்றும் பொருத்தமானதாக உள்ளது.
  • பாலின சமத்துவத்தை அடைந்து கொள்வதற்கும் பெண்களை மேம்படுத்துவதற்கும் உலகளாவிய சமூகம் முக்கிய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது என்பதை அங்கீகரிக்கும் அதே வேளையில், சவால்களும் தடைகளும் பெண்களின் சமூகப் பொருளாதார மற்றும் அரசியல் அபிவிருத்திக்கான இடையூறாக தொடர்ந்தும் நீடிக்கின்றன என்பதையும் நாங்கள் ஒப்புக்கொள்கின்றோம்.
  • ஆரோக்கியம் முதல் பொருளாதாரம் வரை, ஒவ்வொரு துறையிலும், கோவிட்-19 இன் எதிர்மறையான தாக்கங்கள் உலகெங்கிலும் உள்ள பெண்கள் மற்றும் சிறுமிகளை பாதித்துள்ளன. எனவே இந்தத் தொற்றுநோயிலிருந்து மீள்வதற்கான உலகளாவிய முயற்சிகளுக்கு மத்தியில் பாலின சமத்துவத்தையும் பெண்களையும் முன்னணியில் வைத்திருப்பது அவசியமாகும்.

தலைவர் அவர்களே,

  • வரலாற்று ரீதியாக, நாட்டின் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கான பெண்களின் மதிப்புமிக்க பங்களிப்பை அறிந்திருப்பதன் மூலம், பாலின சமத்துவத்திற்கான ஊக்குவிப்பு மற்றும் அதிகாரமளித்தல் ஆகியவற்றுக்கான தனது அர்ப்பணிப்பு மற்றும் அரசியல் விருப்பத்தை இலங்கை நிரூபித்துள்ளது.
  • எமது மக்கள்தொகையில் அரைவாசிக்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் விளங்கும்இலங்கையில் உள்ள பெண்கள், அபிவிருத்தியடைந்த நாடுகளுக்கு இணையாக கல்வியறிவு விகிதங்கள், சமூக உள்ளடக்கம் மற்றும் ஆயுட்காலம் போன்ற சமூக மேம்பாட்டு குறிகாட்டிகளை அடைந்துள்ளனர் என்பது மிகவும் ஊக்கமளிக்கின்றது.
  • எனது நாட்டில் ஒவ்வொரு துறையிலும் குறிப்பிடத்தக்க வகிபாகத்தைக் கொண்டுள்ள பெண்களின் சாதனைகளை ஏற்றுக்கொள்வதில் நான் மிகவும் பெருமைப்படுகின்றேன். இலங்கைப் பெண்களுக்கு 1931ஆம் ஆண்டில் வாக்களிக்கும் உரிமை வழங்கப்பட்டது. உலகின் முதலாவது பெண் பிரதமரை 1960இல் இலங்கை உருவாக்கியது. பாராளுமன்றம் மற்றும் ஊள்ளூராட்சி சபைகளிலான பிரதிநிதித்துவம், அமைச்சுக்களுக்கான செயலாளர்கள், இராஜதந்திரத் தூதுவராலயங்களின் தலைவர்கள் மற்றும் நீதித்துறை போன்றவற்றில் இலங்கைப் பெண்கள் பல உயர்ந்த பதவிநிலைகளைக் கொண்டுள்ளனர். பெண்கள் நாட்டில் உழைக்கும் மக்கள்தொகையில் அரைவாசியை பிரதிநிதித்துவப்படுத்தும் அதே வேளை, உயர் கல்வியில் சிறந்து விளங்குகின்றனர். தேசியப் பொருளாதாரத்தில் அவர்களின் பங்களிப்பு மிகவும் குறிப்பிடத்தக்கதாகும். பெண்கள்5% தொழிலாளர் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்துவதுடன், 39% ஆன வெளிநாட்டுத் தொழிலாளர்கள் பெண்களாவர்.

தலைவர் அவர்களே,

  • இலங்கை மக்களின் பெரும் ஆணையைப் பெற்றுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் தலைமையிலான அரசாங்கமானது, நிலையான அபிவிருத்தி இலக்குகளை எய்திக் கொள்வதற்கு உறுதிபூண்டுள்ளதுடன், அவற்றில் ஐந்தாவது குறிக்கோள் 'பாலின சமத்துவத்தை அடைந்து கொள்வதோடு அனைத்து பெண்கள் மற்றும் சிறுமிகளையும் மேம்படுத்துதல்' ஆகும்.
  • எமது அரசாங்கத்தின் தேசியக் கொள்கைக் கட்டமைப்பில் ('நாட்டைக் கட்டியெழுப்புவதறட்கான செழிப்பான பார்வை') உற்பத்திமிகுந்த குடிகள், திருப்தியான குடும்பம், ஒழுக்கமான மற்றும் நீதியான சமூகம் மற்றும் வளமான தேசம் ஆகிய நான்கு விளைவுகளை அடைந்து கொள்வதற்காக 10 முக்கிய கொள்கைப் பகுதிகள் அடையாளங் காணப்பட்டுள்ளன. இந்தக் கட்டமைப்பில், பாலின அடிப்படையிலான சமத்துவம், பெண்களுக்கு அதிகாரமளித்தல் மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறைகளைக் குறைத்தல் ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.
  • மேற்கண்ட கொள்கைக் கட்டமைப்பிற்கு இணங்க, பெண்கள் சுதந்திரமாக தமது சொந்தத் தீர்மானங்களை மேற்கொண்டு, தமது அபிலாஷைகளை அடைந்து கொள்வதற்குரியதொரு சூழலில், எந்தவொரு வன்முறைக்கும் பாகுபாட்டிற்கும் உட்படாத வகையில், சமமான வீரராக எமது சமுதாயத்தின் முன்னேற்றத்திற்கான இலங்கைப் பெண்களின் பங்களிப்பை அரசாங்கம் எளிதாக்கி, உறுதி செய்யும்.
  • இந்த சூழலில், 'பாலின சமத்துவத்தை உணர்ந்து கொள்வதனை விரைவுபடுத்தல் மற்றும் அனைத்து பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கும் அதிகாரமளித்தல்' என்ற இந்தக் கூட்டத்தின் கருப்பொருளை இலங்கை முழுமையாக ஆதரிக்கின்றது.
  • இறுதியாக, அனைத்தையும் உள்ளடக்கிய மற்றும் நிலையான அபிவிருத்திக்கான எமது பகிரப்பட்ட உறுதிப்பாடாக இருக்க வேண்டிய பாலின சமத்துவத்தை உணர்ந்து கொள்ளுதல் மற்றும் அனைத்து பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு அதிகாரமளித்தல் ஆகியவற்றிலான தனது உறுதிப்பாட்டை இலங்கை மீண்டும் உறுதிப்படுத்துகின்றது.
  • 'பெண்ணின் தைரியம் - தேசத்தின் வலிமை' என்ற இலங்கையின் இந்த ஆண்டின் சர்வதேச மகளிர் தினத்திற்கான கருப்பொருளை மேற்கோள் காட்டி நிறைவு செய்ய விரும்புகின்றேன்.

நன்றி.

Please follow and like us:

Close