மனித உரிமைகள் பேரவையின் 43வது செயலமர்வு – உயர் மட்ட அமர்வு இலங்கையின் வெளிநாட்டு உறவுகள் அமைச்சர் கௌரவ தினேஷ் குணவர்தனவின் அறிக்கை   26 பெப்ரவரி 2020

மனித உரிமைகள் பேரவையின் 43வது செயலமர்வு – உயர் மட்ட அமர்வு இலங்கையின் வெளிநாட்டு உறவுகள் அமைச்சர் கௌரவ தினேஷ் குணவர்தனவின் அறிக்கை   26 பெப்ரவரி 2020

கௌரவ தலைவர் அவர்களே!

கௌரவ உயர்ஸ்தானிகர் அவர்களே!

மனித உரிமைகள் பேரவையின் உறுப்பினர்களே மற்றும் பிரதிநிதிகளே!

கனவான்களே மற்றும் சீமாட்டிகளே!

இந்த சபை அறிந்திருக்கும் வகையில், 2019 நவம்பர் மாதத்தில், ‘திறன்மிக்க குடிமக்கள், திருப்திகரமான குடும்பம், ஒழுக்கமானதும் நியாயமானதுமான சமூகம் மற்றும் வளமான நாடொன்றின் நான்மடங்கு விளைவை’ அடைவதை நோக்காகக் கொண்ட கொள்கைக் கட்டமைப்பை அடைந்து கொள்வதற்கானதொரு மகத்தான ஆணையை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு இலங்கை மக்கள் வழங்கினர்[1]. ‘எமது மக்களுக்கு கிடைக்கக்கூடிய ஜனநாயக எல்லையை சமரசம் செய்யாமல் தேசியப் பாதுகாப்பை’ பாதுகாப்பதில் உறுதியாக நங்கூரமிட்டுள்ள வகையில் நாட்டில் நிலையான வளர்ச்சி மற்றும் அமைதியை உறுதி செய்வதற்காக இது திட்டமிடப்பட்டுள்ளது[2].

ஒரு தசாப்தத்திற்கு முன்னர், 18 மே 2009 அன்று, எல்.ரீ.ரீ.ஈ. பயங்கரவாதத்தை இலங்கை, இராணுவ ரீதியாக தோற்கடித்து, மூன்று தசாப்த கால மோதல்களையும் துன்பங்களையும் முடிவுக்குக் கொண்டுவந்தது. மிருகத்தனமான மோதலின் நிறைவானது, அடிப்படை மனித உரிமைகளில் ஒன்றான, சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள் மற்றும் ஏனைய அனைத்து இலங்கையர்களினதும் ‘உயிர் வாழ்வதற்கான உரிமையை’ மேம்படுத்தி, பாதுகாத்தது. இலங்கையில் பிரிவினைவாத பயங்கரவாதத்தின் பெயரில் 2009 மே மாதம் முதல் ஒரு துப்பாக்கி வேட்டேனும் சுடப்படவில்லை என்பதை நான் பெருமையுடன் கூற விரும்புகின்றேன்.

எல்.ரீ.ரீ.ஈ. பயங்கரவாதிகளுக்கு எதிரான மோதலின் நிறைவானது ஒரே இரவில் நீடித்த அமைதியை தோற்றுவிக்கும் என்ற மாயை இலங்கைக்கு ஒருபோதும் இருந்ததில்லை. இந்த சபை கையாளும் பல மோதல் சூழ்நிலைகளைப் போலவே, இலங்கையும் தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கானதொரு விடயப்பொருள் அல்ல என்றாலும், நிலையான அமைதி மற்றும் நல்லிணக்கத் திட்டத்தின் ஒரு பகுதியாக, சில மதிப்புரைகள் மற்றும் இருக்கும் கட்டமைப்புகளை வலுப்படுத்துவதற்கான தேவை இலங்கைக்கு உள்ளது என்பதை நாங்கள் கவனத்தில் கொண்டிருந்தோம்.

தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருந்த, அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையிலான அரசாங்கம், அந்த நேரத்தில் காணப்பட்ட உண்மைகளை அறிந்து, இலங்கையில் ‘குணப்படுத்துதல் மற்றும் சமாதானத்தைக் கட்டியெழுப்புதலைக்’ கொண்டுவருவதற்காக நிலையானதொரு நல்லிணக்கச் செயற்பாட்டை ஆரம்பித்தது. மிகவும் சிறந்த வளமுள்ள நாடுகள் நிவர்த்தி செய்து, சாதிப்பதற்கு பல தசாப்தங்களை எடுத்துள்ளமையினால், இது மேம்பட்ட மற்றும் உள்ளடக்கமிகு செயன்முறையொன்றாகக் கருதப்பட்டது.

கௌரவ தலைவர் அவர்களே!

டிசம்பர் 2014 நிலவரப்படி, நான் உறுப்பினராக இருந்த மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் தனது பதவிக்காலத்தை நிறைவு செய்த போது, பின்வருவனவற்றில் நாங்கள் கணிசமான முன்னேற்றத்தைக் கண்டிருந்தோம்;.

  • கண்ணி வெடி அகற்றுதல்
  • மீள்குடியேற்றம்
  • பாதுகாப்புப் படையினர் பயன்படுத்திய நிலத்தை விடுவித்தல்
  • முந்தைய மோதல் இடம்பெற்ற பகுதிகளில் இராணுவ இருப்பைக் குறைத்தல்
  • சிறுவர் போராளிகள் உட்பட முன்னாள் எல்.ரீ.ரீ.ஈ. போராளிகளுக்கு புனர்வாழ்வளித்து, மீள சமூகத்துடன் ஒருங்கிணைத்தல்
  • விரைவான உள்கட்டமைப்பு அபிவிருத்தி
  • முந்தைய மோதலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வாக்குரிமையை மீள நிறுவுதல், மற்றும்
  • பொறுப்புக்கூறல், சட்டத்தின் ஆட்சி மற்றும் மனித உரிமைகள் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக உள்நாட்டு வழிமுறைகளை நிறுவுதல்

இலங்கை மக்கள் அனைவரையும் கருதிய வகையிலான இந்த அனைத்தையும் உள்ளடக்கிய மற்றும் உள்நாட்டில் வடிவமைக்கப்பட்ட அளவீடுகள் இருந்தபோதிலும், பயங்கரவாதத்தை தோற்கடிப்பதிலும், சீரான நல்லிணக்க செயன்முறை மூலம் ஸ்திரத்தன்மை, மனிதாபிமான நிவாரணம் மற்றும் நீடித்த அமைதியைக் கொண்டுவருவதற்குமான இலங்கை அரசாங்கத்தின் முயற்சிகளை அங்கீகரிக்கத் தவறிய ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் உறுப்பினர்களின் குழுவொன்று, 2012, 2013 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் இலங்கை மீதான தொடர்ச்சியான நாடு சார்ந்த தீர்மானங்களை ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் அமுல்படுத்தியது.

கௌரவ தலைவர் அவர்களே!

முந்தைய அரசாங்கமானது, 2015 ஜனவரியில், நல்ல பலன்களையளித்த இந்த உள்நாட்டு நல்லிணக்க செயன்முறையின் பாரத்தைக் குறைத்தது. மனித உரிமைகள் பேரவையின் வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாதவாறும் நாட்டின் குறிப்பிட்ட தீர்மானங்கள் குறித்த இலங்கையின் நிலைப்பாட்டிற்கு மாறாகவும், இந்த அரசாங்கம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கழகத்தின் தீர்மானம் 30/1 இற்கு இணை அனுசரணையை வழங்கியது.

பிரத்தியேகமாக, முன்னைய அரசாங்கமானது; 30/1 தீர்மானத்திற்கு மட்டுமன்றி, அண்மைக்காலங்களில் பயங்கரவாதத்தைத் தோற்கடித்த ஒரே தேசிய பாதுகாப்பு அமைப்பான இலங்கை பாதுகாப்பு படையினரின் வீரத்தை நியாயமில்லாமல் அவதூறுக்குள்ளாக்குவதற்கும் அடிப்படையான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கழகத்தின் இலங்கை பற்றியதிலான மிகவும் குறைபாடுள்ள புலன்விசாரணை அறிக்கையை ‘பாராட்டுதலுடன் குறிப்பிட்டது’. இதற்கு மாறாக, பின்வருவனவற்றில் ஏராளமான ஆதாரங்கள் இருந்தன.

  • கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு மற்றும் ‘பரணகம ஆணைக்குழு’ போன்ற உள்நாட்டு அறிக்கைகள்,
  • நேஸ்பி பிரபுவால் ஐக்கிய இராச்சியத்தின் பிரபுக்கள் சபையில் சமர்ப்பிக்கப்பட்ட, ஏனைய விடயங்களுக்கு மத்தியில், மிகைப்படுத்தப்பட்ட பொதுமக்கள் இடர் புள்ளிவிவரங்களை சவாலுக்குட்படுத்தும் தகவல்,[3]
  • ஐக்கிய நாடுகள் மற்றும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் உள்ளிட்ட சர்வதேச நிறுவனங்களின் ஏனைய அறிக்கைகள்,
  • மற்றும் வெளிப்படுத்தப்பட்ட பிற இராஜதந்திர தந்திகள்.

அரசியலமைப்பு ரீதியாக இத்தீர்மானமானது, இலங்கையின் அரசியலமைப்பு கட்டமைப்பிற்குள் நிறைவேற்ற முடியாத கடமைகளைச் சுமத்த முற்படுவதுடன், இலங்கை மக்களின் இறையாண்மையையும் அரசியலமைப்பின் அடிப்படைக் கட்டமைப்பையும் மீறுகிறது. இணை அனுசரணை தொடர்பில் தனது நிலையை மறுபரிசீலனை செய்ய இலங்கையைத் தூண்டிய இன்னொரு காரணி இதுவாகும்.

நடைமுறையின்படி, முன்னைய அரசாங்கமானது, 30/1 தீர்மானத்திற்கு இணை அனுசரணை வழங்கியதன் மூலம் அனைத்து ஜனநாயகக் கொள்கைகளையும் மீறியது.

  • வரைவு உரை வழங்கப்படுவதற்கு முன்பே, தீர்மானத்திற்கான ஆதரவை அது அறிவித்தது.
  • சர்வதேச அமைப்பொன்றின் ஆணைகளை நிறைவேற்றுவதற்காக நாட்டை பிணைப்பதற்கு எந்தவித அமைச்சரவை அங்கீகாரத்தையும் அது கோரவில்லை.
  • அத்தகைய இணை அனுசரணையின் செயன்முறை, நடவடிக்கைகள் மற்றும் விளைவுகள் குறித்து பாராளுமன்றத்தில் எந்தக் குறிப்புகளும் இல்லை.
  • மிக முக்கியமாக, நாட்டின் உயர் சட்டமான அரசியலமைப்பை மீறும் வகையில் காணப்படும் தீர்மானத்தின் உள்ளார்ந்த சட்டத்திற்கு முரணான தன்மை காரணமாக, அதில் வழங்க முடியாத விதிமுறைகள் அடங்கியுள்ளன.
  • மேலும், இது தொழில்முறை இராஜதந்திரிகள், கல்வியியலாளர்கள், ஊடகங்கள் மற்றும் பொது மக்களால் வெளிப்படுத்தப்பட்ட கருத்துக்களை மீறியது.
  • அந்த நேரத்தில் இந்த விடயம் குறித்து தன்னுடன் ஆலோசிக்கப்படவில்லை என அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் குறிப்பிட்டுள்ளார்.
  • இது இலங்கையின் இறையாண்மை மற்றும் கௌரவத்திற்கு ஒரு களங்கமாக உள்ளது.

ஒரு சில நாடுகளை மகிழ்விப்பதற்காக பல முயற்சிகளை மேற்கொள்ள முடியாது என்பதற்கான வலுவான எதிர்ப்பும் ஆதாரங்களும் இருந்தபோதிலும், இப்பரிசோதனையை மேற்கொள்வதற்காக இந்த நாட்டைக் கட்டுப்படுத்திய கடமைகள் நடைமுறைக்கு மாறானவை, அரசியலமைப்பிற்கு அப்பாற்பட்டவை மற்றும் நம்பமுடியாதவை.

பாதிக்கப்பட்ட எமது கௌரவத்தைப் பொறுத்தவரையில், இது சர்வதேச அமைப்பின் மீதான இலங்கையர்களின் நம்பிக்கையையும், சர்வதேச சமூகத்தின் பார்வையில் இலங்கையின் ஒட்டுமொத்த நம்பகத்தன்மையையும் படிப்படியாக அழித்துவிட்டது. பொறுப்பற்ற இந்த நடவடிக்கையானது நீண்டகாலமாக வளர்க்கப்பட்ட பிராந்திய உறவுகள் மற்றும் அணிசேரா மற்றும் தெற்காசிய ஒற்றுமையையும் சேதப்படுத்தியது. இலங்கையின் வெளியுறவுக் கொள்கையானது ஒரு ‘ஆதாயம் அல்லது இழப்பு என்ற விளையாட்டாக’ குறைக்கப்பட்டு, எனது நாட்டை உலக அரசியல் சதுரங்கத்தில் ஒரு ‘பகடைக்காய்’ ஆக்கியதுடன், தேவையில்லாமல் இலங்கையை அதன் பாரம்பரியமான நடுநிலைமையிலிருந்து அப்புறப்படுத்தியது.

மிக முக்கியமாக, 30/1 இற்கிணங்க நாட்டில் கட்டளையிடப்பட்ட மாற்றங்கள், தேசிய நலனைக் குறைத்து மதிப்பிட்டதுடன், தேவாலயங்கள் மற்றும் ஹோட்டல்களை இலக்காகக் கொண்ட ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தேசிய உளவுத்துறை நடவடிக்கைகள் பலவீனமடைந்து, அது தொடர்பான பாதுகாப்புகள் உள்ளிட்ட தேசிய பாதுகாப்பு சமரசம் செய்யப்பட்டதன் விளைவாக ஏற்பட்ட குறைபாடுகளுக்குப் பங்களித்ததாகக் கருதப்படுகின்றன. இதன் விளைவாக வெளிநாட்டுப் பிரஜைகள் உட்பட உயிர் இழப்புகள் ஏற்பட்டதுடன், தேசிய பாதுகாப்பை மீட்டெடுப்பதில் அரசாங்கம் சவால்களை எதிர்கொள்கிறது.

2015 அக்டோபரில் 30/1 தீர்மானத்திற்கு இணை அனுசரணை வழங்கிய முந்தைய அரசாங்கமானது, எனக்கு முந்தைய அமைச்சர் இந்த கழகத்தில் அளித்த அறிக்கையின் மூலம் அதன் கட்டளைகளை அகற்றும் செயன்முறையைத் தொடங்கியது முரண்பாடாகவுள்ளது. இதே அறிக்கை, 4 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த தீர்மானத்திற்கு இணை அனுசரணை செய்யும்போதிருந்த உண்மையான தடைகளை ஏற்றுக்கொண்டது. அந்த அறிக்கை இத்தீர்மானத்தின் இணை அனுசரணையின் சார்விதிகளைத் தகுதியானதாக்க முயன்றது.

  • இது 30/1 தீர்மானம் பிரச்சனையின் தன்மையின் பண்புருக்களையும் மதிப்பிடப்பட்ட இறப்புகளின் எண்ணிக்கையையும் கேள்விக்குள்ளாக்கியது,
  • பாதுகாப்புப் படையினரின் குற்றச்சாட்டுக்களைப் புறந்தள்ளியது,
  • கோரப்பட்ட பாதுகாப்புத் துறை சீர்திருத்தத்தின் விளைவைக் குறைத்தது,
  • முன்வைக்கப்பட்ட நீதித்துறை பொறிமுறையில் வெளிநாட்டு நீதிபதிகள் மற்றும் வழக்குரைஞர்களின் ஈடுபாட்டை இலங்கை அரசியலமைப்பு தடுக்கிறது என வலியுறுத்தியது.
  • இதை ஒப்புக்கொண்டபோதிலும், முந்தைய அரசாங்கம், 30/1 தீர்மானத்தைச் செயற்படுத்துவதற்கு முழுமையான ஆதரவளிக்கும் அதன் இணை அனுசரணையைத் தொடர்ந்தது.

தேர்தலில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பெரும்பான்மையுடன் தேர்ந்தெடுக்கப்பட்டதன் மூலம், இலங்கை மக்கள் நாடு முன்னோக்கிச் செல்வதற்கான வேறு பாதை வேண்டும் என்ற விருப்பத்திற்கு தெளிவான சமிக்ஞையை வழங்கியுள்ளனர். இலங்கையின் 72 ஆவது சுதந்திர தினத்தில் ஜனாதிபதி தனது உரையில் கூறியது போல், “ஒவ்வொரு இலங்கை குடிமகனும் தனது தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மூலம் அரசியல் மற்றும் நிர்வாக செயல்முறைகளில் பங்கேற்கும் உரிமையை நாங்கள் எப்போதும் பாதுகாப்போம்”.

இலங்கை மக்களின் விருப்பத்திற்கேற்ப எமது அரசாங்கமானது; அணிசேரா, நடுநிலை வெளியுறவுக் கொள்கையைப் பின்பற்றும் அதேநேரம், பிரச்சனைகளைப் புதிதாக ஆராய்வதற்கும், ‘பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டின் மூலம் செழிப்பு’ என்ற அதன் நிகழ்ச்சி நிரலை முன்னெடுப்பதற்கும், சகல இலங்கையர்களின் நலனுக்காக சமகால சவால்களைச் சமாளிப்பதற்கான தீர்வுகளை உள்நாட்டிலேயே காண்பதற்கும் தன்னை அர்ப்பணித்துள்ளது.

இக்கருத்தின் அடிப்படையில்;  ‘இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை ஊக்குவித்தல்’ என்ற தலைப்பில், அக்டோபர் 2015/30/1 மற்றும் மார்ச் 2017 இன் 34/1 ஆகிய முந்தைய தீர்மானங்களையும் இணைத்து உருவாக்கப்பட்ட 40/1 தீர்மானத்தின் இணை அனுசரணையிலிருந்து விலகுவதற்கான இலங்கையின் முடிவைப் பதிவு செய்ய விரும்புகிறேன்.

கௌரவ தலைவர் அவர்களே!

இந்தத் தீர்மானத்தின் இணை அனுசரணையிலிருந்து விலகியபோதும் நிலையான அமைதி மற்றும் நல்லிணக்கத்தை நோக்கி இலங்கை மக்கள் பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகள் குறித்து நிர்ணயித்த இலக்குகளை அடைவதில் இலங்கை உறுதிகொண்டுள்ளது. இந்த முடிவுக்கு;

முதலாவதாக, அரசாங்கத்தின் கொள்கைக் கட்டமைப்பிற்கமைவாக, தற்போதுள்ள பொறிமுறைகளை பொருத்தமான முறையில் பின்பற்றுதல் உட்பட, உள்ளடக்கப்பட்டதும், உள்நாட்டில் வடிவமைக்கப்பட்டுச் செயற்படுத்தப்பட்டதுமான நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் செயன்முறை மூலம் நிலையான அமைதியை அடைவதற்கான தனது உறுதிப்பாட்டை இலங்கை அரசாங்கம் வெளிப்படுத்துகிறது. இது; மனித உரிமைகள் மற்றும் சர்வதேச மனித நேயச் சட்ட மீறல்களைப் புலன் விசாரணை செய்த முந்தைய விசாரணை ஆணைக்குழுக்களின் அறிக்கைகளை மீளாய்வு செய்யவும் அவர்களின் பரிந்துரைகளை அமல்படுத்துவதற்கான நிலையை மதிப்பிடுவதற்கும், புதிய அரசாங்கத்தின் கொள்கைக்கு இணங்க அவற்றை செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்மொழியவும்   உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையிலான விசாரணை ஆணைக்குழுவை நியமிப்பதை உள்ளடக்கியது.

இரண்டாவதாக, 2030 நிலையான அபிவிருத்தி நிகழ்ச்சி நிரல் உட்பட்ட இலங்கையின் கடமைகளுக்கு இணங்க, நிலுவையில் உள்ள பிற அக்கறைகளையும் தேவையான இடங்களில் நிறுவன சீர்திருத்தங்களையும் அறிமுகப்படுத்தும். சட்டத்தின் கீழ் தனிநபர் மற்றும் கூட்டு உரிமைகள் மற்றும் பாதுகாப்புகளை முன்னெடுப்பதன் மூலமும், நீதி மற்றும் நல்லிணக்கத்தை உறுதி செய்வதன் மூலமும், சமூகத்தின் பாதிக்கப்படக்கூடிய பிரிவுகளைச் சேர்ந்தோரின் கவலைகளை நிவர்த்தி செய்வதன் மூலமும் அரசாங்கத்தின் உறுதிப்பாட்டில் வேரூன்றிய கொள்கைகளை நாங்கள் செயற்படுத்துவோம். அரசாங்கத்தின் கொள்கைகளை வகுத்தல் மற்றும் செயன்முறைப்படுத்துவதில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து சிறப்புக் கவனம் செலுத்தப்படும். இலங்கையின் 8 வது நாடாளுமன்றத்தின் நான்காவது அமர்வின் தொடக்க விழாவில் தனது கொள்கை அறிக்கையில், “ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான அபிவிருத்தி இலக்குகளை அடைவதில் இலங்கையை உலகின் முன்னணி நாடுகளில் ஒன்றாக மாற்றுவதற்கான தனது பார்வையை ஜனாதிபதி மீண்டும் வலியுறுத்தினார். ஜனாதிபதிக்கும் ஐக்கிய நாடுகள் வதிவிட ஒருங்கிணைப்பாளருக்கும் இடையில் ஏற்கனவே ஒரு கலந்துரையாடல் இடம்பெற்றபோது, அங்கு நிலையான அபிவிருத்தி நிகழ்ச்சி நிரல்களைச் செயற்படுத்துவதில் இலங்கை அரசுக்கு உதவ தொடர்புடைய ஐ.நா. முகவராண்மைகளை இணைப்பதற்கு ஒப்புக்கொள்ளப்பட்டது.

மூன்றாவதாக, வழக்கமான மனித உரிமை ஆணைகள் / அமைப்புக்கள் மற்றும் பொறிமுறைகள் உட்பட ஐ.நா. மற்றும் அதன் நிறுவனங்களுடன் இலங்கை தொடர்ந்தும் பணியாற்றி, உள்நாட்டு முக்கியத்துவமிக்க விடயங்கள் மற்றும் கொள்கைகளுக்கு அமைய திறன் அபிவிருத்தி மற்றும் தொழினுட்ப உதவியை தேவைக்கேற்ப எதிர்பார்க்கும்.

இறுதியாக, ஐ.நா. வின் அனைத்து உறுப்பினர்களுடனும் இணைந்து, தீர்மானத்தை முடிவுறுத்துவதற்காக பணியாற்றுவதற்கு இலங்கை எதிர்பார்க்கின்றது.

கௌரவ தலைவர் அவர்களே!

இலங்கையின் பல இன, பல மொழி, பல மத மற்றும் பல கலாச்சார மக்களின் நல்வாழ்வானது, இலங்கை அரசாங்கத்தை விட வேறு யாருக்கும் இல்லை. இந்த உந்துதல்களே எமது உறுதிப்பாட்டை வழிநடத்துவதுடன், விரிவான நல்லிணக்கம் மற்றும் எமது மக்களுக்கான நிலையான அமைதி மற்றும் செழிப்பு மிகுந்த சகாப்தத்தை நோக்கி செல்வதற்கு தீர்மானிக்கின்றது. ஆகவே, இலங்கையின் உள்நாட்டு முன்னுரிமைகள் மற்றும் கொள்கைகளின் கட்டமைப்பிற்குள் மேற்கூறிய நடவடிக்கைகள் யதார்த்தமானவையாக மட்டுமன்றி,
வழங்கக்கூடியவையாகவும் இருக்கின்றன என்பது எமது வலுவான நம்பிக்கையாகும்.
இந்த முயற்சியில் இலங்கையுடன் ஒத்துழைப்பதற்காக இந்த அமைப்பிற்கு உள்ளேயும் வெளியேயும் உள்ள அனைத்து பங்குதாரர்களுக்கும் நாம் அழைப்பு விடுக்கின்றோம்.
புத்த பகவானின் வார்த்தைகளை மேற்கோள் காட்டி இந்த உரையை நிறைவு செய்கின்றேன்,
‘சியலு சத்வயோ நிதுக் வெத்வா, நிரோகீ வெத்வா, சுவபத் வெத்வா’
எல்லா உயிர்களும் பாதுகாப்பாக இருக்கட்டும்,
எல்லா உயிர்களும் துன்பத்திலிருந்து விடுபடட்டும்,
எல்லா உயிர்களும் நன்றாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கட்டும்.
நன்றி.

[1] http://www.treasury.gov.lk/documents/10181/791429/FinalDovVer02+English.pdf/10e8fd3e-8b8d-452b-bb50-c2b053ea626c

[2] அதே குறிப்பு

[3] https://hansard.parliament.uk/Lords/2017-10-12/debates/14CAA83D-8895-4182-8C4F-D964E0A5B399/SriLanka

Please follow and like us:

Close