சுமார் நான்கு தசாப்தங்களாக ஓமான் சுல்தானேற்றில் பணியாற்றிவிட்டு ஓமானில் இருந்து இலங்கைக்கு செல்லும் ஓமானில் உள்ள இலங்கை சமூகத்தின் மிகவும் சிரேஷ்ட உறுப்பினர்களில் ஒருவரான நமிக் அஸ்ஹர் மொஹிதீனை, ஓமான் சுல்தானேற்றுக்கான இலங்கைத் தூதுவர் அமீர் அஜ்வாத் பிரியாவிடை நிகழ்வில் பாராட்டினார். ஓமானில் உள்ள இலங்கை சமூகத்திற்கான நமிக் மொஹிதீனின் நீண்ட சேவையை அங்கீகரிப்பதற்காக மஸ்கட்டில் வசிக்கும் இலங்கை சமூக உறுப்பினர்களால் கலாவில் உள்ள சென்டரா மஸ்கட் ஹோட்டலில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது. கடந்த நாற்பது வருடங்களில் நமிக் மொஹிதீன் உள்நாடு மற்றும் புரவலன் ஆகிய இரு நாடுகளுக்கும் ஆற்றிய நீண்ட சேவையை அங்கீகரிப்பதற்காக தூதுவர் அஜ்வாத் பாராட்டுச் சான்றிதழை வழங்கினார். இலங்கைக்கும் ஓமான் சுல்தானேற்றுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளின் 40வது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஓமானில் உள்ள இலங்கைத் தூதரகத்தால் வெளியிடப்பட்ட லோகோ பெட்ஜையும் தூதுவர் அஜ்வாத் வழங்கினார்.
இந்நிகழ்வில் உரையாற்றிய தூதுவர் அமீர் அஜ்வாத், ஓமானில் உள்ள இலங்கையின் புலம்பெயர் தொழிலாளர்கள் உள்நாட்டு மற்றும் புரவலன் ஆகிய இரு நாடுகளினதும் பொருளாதார வளர்ச்சிக்கு ஆற்றிய பங்களிப்புகளை பாராட்டிய அதே வேளையில், இராஜதந்திர உறவுகளின் 40வது ஆண்டு நினைவு தினத்திலிருந்து சுல்தானேற்றில் நீண்டகாலமாக சேவையாற்றும் இலங்கையின் புலம்பெயர் தொழிலாளர்களை கௌரவிக்கும் ஒரு பாரம்பரியத்தை தூதரகம் ஏற்கனவே ஆரம்பித்துள்ளதாக அறிவித்தார். இரு நட்பு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளின் வரலாற்றில் மற்றொரு மைல்கல்லை எட்டுவதற்காக, எதிர்வரும் ஆண்டுகளில் இலங்கைக்கும் ஓமான் சுல்தானேற்றிற்கும் இடையில் பொருளாதார, கலாச்சார, சமூக மற்றும் மக்களுக்கிடையேயான தொடர்பை மேம்படுத்துவதில் இலங்கை சமூக உறுப்பினர்களின் புதுப்பிக்கப்பட்ட ஈடுபாட்டின் முக்கியத்துவத்தையும் தூதுவர் வலியுறுத்தினார்.
மஸ்கட்டில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் முதன்மைச் செயலாளர் திலினி அபேசேகர, இலங்கை சமூக சமூகக் கழகத்தின் தலைவர் ரோய் லசந்த, எதெர அபி அமைப்பின் உறுப்பினர் ருவன் சானக்க, இலங்கைப் பாடசாலை மஸ்கட் நிர்வாக சபை உறுப்பினர்களான சனத் ஹேமச்சந்திர, ஸியாத் நியாஸ் மற்றும் நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் ஹபீஸ் மரிக்கார், மொஹமட் ஐயாஸ், எம். கமல் அப்துல்லா, மொஹமட் ரிஸான், மொஹமட் ஃபர்வீன் ஆகியோர் இந் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
இலங்கைத் தூதரகம்,
மஸ்கட்
2021 நவம்பர் 29