மே 24 ஆந் திகதி ருமேனியாவிலுள்ள புக்கரெஸ்ட் விமான நிலையத்தில் சிக்கித் தவித்த 36 இலங்கைத் தொழிலாளர்களுக்கு புதிய தொழில் வாய்ப்புக்களை வழங்கும் முயற்சியில், ருமேனியாவின் தொழிலாளர் அமைச்சர் வயலெட்டா அலெக்ஸாண்ட்ரு தலையீடுகளை மேற்கொண்டு, இலங்கைத் தொழிலாளர்களின் தொழில் வாய்ப்புக்களைப் பாதுகாத்து, தக்கவைத்துக் கொள்வதற்கு ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்தார். தொழிலில் இருந்த பலருக்கு கோவிட்-19 தொற்று இருப்பதாக சந்தேகிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இலங்கைத் தொழிலாளர்கள் தமது தற்போதைய தொழில்களில் இருப்பதற்கு முன்னர் மறுப்புத் தெரிவித்திருந்தனர்.
ருமேனிய தொழிலாளர் அமைச்சு மற்றும் ஏனைய அமைப்புக்களின் உதவியுடன், ருமேனியாவிலுள்ள இலங்கைத் தொழிலாளர்களுக்கு பொருத்தமான தங்குமிட வசதிகள் மற்றும் ஏனைய தேவைகளை வழங்குவதற்கு, ருமேனியாவுக்கு அதிகாரமளிக்கப்பட்டுள்ள வோர்சோவிலுள்ள இலங்கைத் தூதரகம் தொடர்ந்தும் உதவி வருகின்றது.
அதற்கமைய, 36 இலங்கைத் தொழிலாளர்களைக் கொண்ட குழுவுக்கு ருமேனியாவில் தொடர்ந்தும் தொழில் வாய்ப்புக்களை வழங்குவதற்காக, வேறு தொழில் தருனர்களை வழங்கியுள்ளதாக ருமேனிய அரசாங்கம் இன்று (மே 27) இலங்கைத் தூதரகத்திற்கு தெரிவித்தது. இந்த விடயத்தை இணக்கமான முறையில் தீர்ப்பதற்காக ருமேனிய அரசாங்கம் மேற்கொண்ட முயற்சிகளுக்காக வெளிநாட்டு உறவுகள் அமைச்சர் தினேஷ் குணவர்தன தனது பாராட்டுக்களைத் தெரிவித்தார்.
இலங்கைத் தூதரகம்
வோர்சோ
27 மே 2020