புலம்பெயர்ந்த இலங்கைத் தொழிலாளர்களுக்கு உதவுவதற்கான சாத்தியப்பாடுகளை அமைச்சர் தினேஷ் குணவர்தன ஆராய்ந்தார்

புலம்பெயர்ந்த இலங்கைத் தொழிலாளர்களுக்கு உதவுவதற்கான சாத்தியப்பாடுகளை அமைச்சர் தினேஷ் குணவர்தன ஆராய்ந்தார்

Pic 1

 

தற்போதைய கொரோனா வைரஸ் தொற்றுநோயின் தாக்கத்தினால் வெளிநாடுகளிலுள்ள புலம்பெயர்ந்த இலங்கைத் தொழிலாளர்களுக்கு ஏற்படும் பாதிப்புக்களைப் பற்றி கலந்துரையாடுவதற்காகவும், குறித்த இலங்கையர்களுக்கு உதவுவதற்கான சாத்தியமான வழிமுறைகள் குறித்து ஆராய்வதற்காகவும், வெளிநாட்டு உறவுகள், திறன் அபிவிருத்தி, வேலைவாய்ப்பு மற்றும் தொழிலாளர் உறவுகள் அமைச்சர் தினேஷ் குணவர்தன வெளிநாட்டு உறவுகள் அமைச்சு, திறன் அபிவிருத்தி, வேலைவாய்ப்பு மற்றும் தொழிலாளர் உறவுகள் அமைச்சு மற்றும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் ஆகியவற்றின் செயலாளர்கள் மற்றும் சிரேஷ்ட அதிகாரிகளை இன்று (2020 ஏப்ரல் 10) வெளிநாட்டு உறவுகள் அமைச்சில் வைத்து சந்தித்தார்.

மத்திய கிழக்கு, தென்கிழக்கு ஆசியா, கிழக்கு ஆசியா, ஐரோப்பா மற்றும் ஆபிரிக்கப் பிராந்தியங்களில் பெருமளவில் பணியாற்றும் சுமார் 1 மில்லியனுக்கும் அதிகமான புலம்பெயர்ந்த இலங்கைத் தொழிலாளர்கள் தொடர்பில் சுட்டிக்காட்டிய அமைச்சர் குணவர்தன, இந்த இலங்கையர்களின் நலன்கள் குறித்து இரண்டு அமைச்சுக்களும் கவனம் செலுத்த வேண்டும் எனத் தெரிவித்தார். இந்தக் கூட்டத்தின் போது, வளைகுடாப் பிராந்தியத்தில் பணிபுரியும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் தேவைகள் குறித்து சிரேஷ்ட அதிகாரிகள் தெரிவித்த கருத்துக்களுக்கு அவர் விஷேடமாக கவனம் செலுத்தினார். கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்காக இந்தப் பிராந்தியத்திலுள்ள நாடுகள் மேற்கொண்ட நடவடிக்கைகள் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை மோசமாகப் பாதித்துள்ளதாக தெரிவித்த அமைச்சர் குணவர்தன, இந்தத் தாக்கங்களுக்கான தீர்வுகளை ஆராயுமாறு சிரேஷ்ட அதிகாரிகளை அறிவுறுத்தினார்.

நடைமுறைத் தீர்வுகளை ஆராய்ந்து, இந்த சவால் மிகுந்த நேரத்தில் புலம்பெயர்ந்த இலங்கைத் தொழிலாளர்களுக்கு உதவும் முகமாக, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் கீழ் பதிவு செய்யப்படாத புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பிரச்சினைகள், அண்மையில் தொழிலை இழந்தவர்கள் மற்றும் பணம் அனுப்புவது தொடர்பான பிரச்சினைகள் ஆகியன இந்தக் கூட்டத்தின் போது கலந்துரையாடப்பட்டன. உலகெங்கிலுமுள்ள புலம்பெயர்ந்த இலங்கைத் தொழிலாளர்களின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வுக்கு உதவுவதற்காகவும், பாதுகாப்பதற்காகவும் இலங்கை அரசாங்கம் சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுக்கும் என்றும் வெளிநாட்டு உறவுகள் அமைச்சர் தெரிவித்தார்.

இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட வெளிவிவகார செயலாளர் ரவிநாத ஆரியசிங்க, திறன் அபிவிருத்தி, வேலைவாய்ப்பு மற்றும் தொழிலாளர் உறவுகள் அமைச்சின் செயலாளர் டி.எம். சரத் அபயகுணவர்தன மற்றும் ஏனைய சிரேஷ்ட அதிகாரிகள் புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் தற்போதைய நிலைமை குறித்த தமது கருத்துக்களையும், உட்பார்வைகளையும் பகிர்ந்து கொண்டதோடு, புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் முன்னேற்றத்திற்காக இரு அமைச்சுக்களும் நெருக்கமாக செயற்படும் என்பதனை வலியுறுத்தினர்.

 

வெளிநாட்டு உறவுகள் அமைச்சு
கொழும்பு
10 ஏப்ரல் 2020

Pic 2 Pic 3

Please follow and like us:

Close