30வது ஆசியான் பிராந்திய மன்றத்திற்கான இலங்கைப் பிரதிநிதிகள் குழுவை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் வழிநடாத்தல்

30வது ஆசியான் பிராந்திய மன்றத்திற்கான இலங்கைப் பிரதிநிதிகள் குழுவை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் வழிநடாத்தல்

இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் 2023 ஜூலை 14ஆந் திகதி நடைபெற்ற 30வது ஆசியான் பிராந்திய மன்றத்தின் அமைச்சர்கள் கூட்டத்திற்கான இலங்கைப் பிரதிநிதிகள் குழுவை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் எம்.யு.எம். அலி சப்ரி வழிநடாத்தினார்.

ஆசிய-பசிபிக் பிராந்தியத்தை மையமாகக் கொண்ட பாதுகாப்பு உரையாடல் பொறிமுறையான ஆசியான் பிராந்திய மன்றம், 1994 இல் தாய்லாந்தில் தொடங்கப்பட்டதுடன், இது பிராந்தியத்தின் அமைதி, பாதுகாப்பு மற்றும் செழுமைக்கான சவால்களை அங்கீகரிக்கும் அதே வேளையில் திறந்த மற்றும் உள்ளடக்கிய உரையாடலின் மூலம் பிராந்தியததின் அபிவிருத்தி மற்றும் செழிப்பை மேம்படுத்துவதற்கு முயற்சிக்கின்றது. ஆசியான் பிராந்திய மன்றம் 27 உறுப்பு நாடுகளைக் கொண்டுள்ளதுடன், இலங்கை 2007 ஆம் ஆண்டு முதல் ஆசியான் பிராந்திய மன்றத்தில் உறுப்பினராக உள்ளது.

மன்றத்தில் உரையாற்றிய வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் சப்ரி, கடல்சார் பாதுகாப்பு, அனர்த்த முகாமைத்துவம், பாதுகாப்பு தொடர்பான நம்பிக்கையை கட்டியெழுப்பும் நடவடிக்கைகள் மற்றும் தடுப்பு இராஜதந்திரம் மற்றும் பிராந்தியத்தின் வளர்ந்து வரும் பொருளாதார சுறுசுறுப்பு மற்றும் செழுமையை நிலைநிறுத்துதல் உள்ளிட்ட இலங்கைக்கான ஒத்துழைப்பின் முக்கிய பகுதிகளை எடுத்துரைத்தார். ஆசியான் பிராந்திய மன்றத்தில் ஒத்துழைப்பு சார்ந்த துறைகளில் ஏற்பட்டுள்ள நிலையான முன்னேற்றத்தை வரவேற்ற அவர், இந்த செயன்முறையை தடையின்றி ஆதரித்தார்.

2022 ஜனவரி 01 முதல் நடைமுறைக்கு வந்த உலகின் மிகப் பெரிய சுதந்திர வர்த்தகப் பகுதியான விரிவான பிராந்திய  பொருளாதாரக் கூட்டாண்மையில் அங்கத்துவம் பெறுவதற்கு இலங்கை உத்தேசித்துள்ளதாக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் தெரிவித்தார். அவுஸ்திரேலியா, புருனே, கம்போடியா, சீனா, இந்தோனேஷியா, ஜப்பான், தென் கொரியா, லாவோஸ், மலேசியா, மியன்மார், நியூசிலாந்து, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து மற்றும் வியட்நாம் ஆகியவை விரிவான பிராந்திய பொருளாதாரக் கூட்டாண்மையின் 15 நிறுவன உறுப்பினர்களாகும். விரிவான பிராந்திய பொருளாதாரக் கூட்டாண்மை 2023 ஜூலை 01 முதல் புதிய உறுப்பினர்களுக்காக திறக்கப்பட்டதுடன், விரிவான பிராந்திய பொருளாதாரக் கூட்டாண்மையில் இணைவதற்காக இலங்கை 2023 ஜூன் 28ஆந் திகதி ஆசியான் செயலகத்தில் விருப்பக் கடிதத்தை சமர்ப்பித்துள்ளது.

ஆசியான் பிராந்திய மன்றத்தின் பக்க அம்சமாக, பரஸ்பரம் ஆர்வமுள்ள பகுதிகள் குறித்து கலந்துரையாடுவதற்காக, அவுஸ்திரேலியா, இந்தோனேஷியா, லாவோ மக்கள் ஜனநாயகக் குடியரசு, மங்கோலியா, நியூசிலாந்து, பிலிப்பைன்ஸ், ரஷ்யா, திமோர் லெஸ்டே, வியட்நாம் மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்களுடன் அமைச்சர் இருதரப்பு சந்திப்புக்களில் ஈடுபட்டார்.  அவர் ஜகார்த்தாவில் தங்கியிருந்த காலத்தில், இந்தோனேசிய நிதி அமைச்சர், இந்தோனேசியாவின் பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கான தேசிய நிறுவனம் மற்றும் இந்தோனேசியாவில் உள்ள இலங்கை வர்த்தக சமூகம் ஆகியோருடன் கலந்துரையாடினார்.

இந்தோனேசியாவுக்கான இலங்கைத் தூதுவர் ஜயநாத் கொலம்பகே மற்றும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் தென்கிழக்கு  மற்றும் மத்திய ஆசியப் பிரிவின் பணிப்பாளர் நாயகம் வருண வில்பத ஆகியோர் இலங்கைப் பிரதிநிதிகள் குழுவில் இணைந்திருந்தனர்.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு,

கொழும்பு.

2023 ஜூலை 15

 

Please follow and like us:

Close