சட்ட வரையறைக்குட்பட்ட படிப்படியான அணுகுமுறை மூலம் சட்ட இடைவெளிகளை கையாண்டு முழுமையான ஆயுதக்களைவை ஏற்படுத்துவதில் இலங்கை உறுதியாக இருக்கிறது என ஜெனீவாவிலுள்ள இலங்கையின் நிரந்தர பிரதிநிதி ஏ.எல்.ஏ. அஸீஸ் அவர்கள் ஆயுத களைவு மாநாட்டில் உரையாற்றும் போது கூறினார்.
இந்த உயர் நிலை மாநாட்டில் மேலும் உரையாற்றிய தூதுவர், ஐ.நா செயலாளர் நாயகத்தின் "எங்கள் பொதுவான எதிர்காலத்தை பாதுகாத்தல்: ஆயுதக்களைவுக்கான ஒரு நிகழ்ச்சி நிரல்" இல் உள்ள "இயலாதவற்றை விட்டு இயலுமானதை எடுத்துக்கொள்ளல்" என்ற அணுகுமுறையானது, தற்போதுள்ள ஏற்றத்தாழ்வுகளை நீக்குவதற்கு பதிலாக மேலும் அதிகரிக்க செய்யும் என கூறினார்.
இலங்கையின் கண்ணோட்டத்தில், செயலாளர் நாயகத்தின் நிகழ்ச்சி நிரலை அறிமுகப்படுத்தியமை குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. அநேக நாடுகள் இந்த நிகழ்ச்சி நிரலின் யோசனைகளில் இருந்து பலதரப்பு முயற்சிகளை அறிமுகப்படுத்தியிருப்பது எங்களை உற்சாகப்படுத்தியிருந்தாலும், ஏனைய நாடுகள் தமது சொந்த மூலோபாய முன்னுரிமைகளை முன்னிலைப்படுத்தி அர்த்தப்படுத்திக்கொள்வது வருத்தமளிப்பதாகவும் அவர் கூறினார்.
மேலும் கருத்து தெரிவித்த தூதுவர் அஸீஸ் அவர்கள், சர்வதேச சமாதான, மற்றும் பாதுகாப்பு நிலவரம் பற்றிய தற்போதைய அபாயகரமான நிலையை கருத்திற்கொண்டு, தீவிர மற்றும் உறுதியான பேச்சுவார்த்தைகளுக்கான வேகத்தை உருவாக்குவதற்கான அனைத்து வழிகளையும் ஆராய வேண்டிய அவசர தேவை மாநாட்டிற்கு இருப்பதை வலியுறுத்தினார்.
அணு ஆயுத பாவனைக்கான சாத்தியக்கூறுகள், ஏனைய பேரழிவை ஏற்படுத்தும் ஆயுதங்களின் பாவனை சாத்தியத்தை விட குறைவானது என்ற எதிர்வு கூறல், அணு ஆயுத பலம் அற்ற நாடுகளின் நம்பிக்கையான பாவனையின்மை மற்றும் கட்டுப்படுத்தல் தொடர்பான உறுதிப்பாடு படிப்படியாக குறைந்து வருகிறது.
ஆயுதக்களைவு மாநாட்டின் 40வது ஆண்டு நிறைவு உள்ளடங்கலான, 2019 ம் ஆண்டின் ஆயுதக்களைவு தொடர்பான முக்கியத்துவத்தை குறிப்பிட்டுக்காட்டிய தூதுவர், 2018 இல் இலங்கையின் தலைமைத்துவத்தில் எட்டப்பட்ட உத்வேகத்தை பயன்படுத்த இது சரியான சந்தர்ப்பமாகும் என குறிப்பிட்டார்.
ஐ.நா. செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டர்ஸ் மற்றும் வெளிவிவகார அமைச்சர்கள் உள்ளிட்ட பல உயர்மட்ட பிரமுகர்கள் 2019 ஆம் ஆண்டு பெப்ரவரி 27 ஆம் திகதி முடிவடைந்த 2019 உயர் நிலைப் மாநாட்டில் உரையாற்றினர்.