23வது சபான்சி அடானா சர்வதேச நாடக விழாவில் இலங்கை நாடகம் 'காதல் மற்றும் முடக்கநிலை' அரங்கேற்றம்

23வது சபான்சி அடானா சர்வதேச நாடக விழாவில் இலங்கை நாடகம் ‘காதல் மற்றும் முடக்கநிலை’ அரங்கேற்றம்

துருக்கியின் அரச திரையரங்குகள் பணியகத்தின் அழைப்பின் பேரில், 'காதல் மற்றும் முடக்கநிலை' என்ற தனது மேடை நாடகத்தை (தனிநபர் நாடகம்) 23வது சபான்சி அதானா சர்வதேச நாடக விழா 2022 இல் ஏப்ரல் 19 மற்றும் 20 ஆகிய திகதிகளில் இலங்கையின் இன்டர் எக்ட் ஆர்ட் தியேட்டர் இன்ஸ்டிடியூட் அரங்கேற்றியது. முதன்முறையாக, சபான்சி அதானா சர்வதேச நாடக விழாவில் பிரதிநிதித்துவப்படுத்த இலங்கை நாடகக் குழு ஒன்று அழைக்கப்பட்ட அதே வேளையில், இலங்கையின் முதலாவது மேடை நாடகம் துருக்கியில் காட்சிப்படுத்தப்பட்டது.

ஏப்ரல் 19ஆந் திகதி நடைபெற்ற மேடை நாடகத்தின் (தனிநபர் நாடகம்) தொடக்க நிகழ்ச்சியின் போது, அதானா அரச திரையரங்கின் பணிப்பாளர் திரு. எம்ரா கெஸ்கின் மற்றும் ஏற்பாட்டுக் குழு உறுப்பினர்களுடன் தூதுவர் ரிஸ்வி ஹாசன் கலந்து கொண்டார். திரு. எம். சபீரால் இயக்கப்பட்டு, பிரசாத் விக்கிரமரத்னவால் எழுதப்பட்ட தனிநபர் நாடகத்தின் தனிக் கலைஞர் மற்றும் குழுவின் நடிப்பை அதானாவின் அரச அரங்கின் பணிப்பாளர் திரு. எம்ரா கெஸ்கின் மற்றும் ஏற்பாட்டுக் குழுவினர் வெகுவாகப் பாராட்டினர். பல்துறை நடிகை சுபுத்தி லக்மாலியின் தனி நடிப்பு துருக்கிய பார்வையாளர்களை மயக்கியது.

இலங்கைக்கு விடுக்கப்பட்ட அழைப்பிற்கும், குழுவிற்கு வழங்கப்பட்ட துருக்கிய விருந்தோம்பலுக்கும் துருக்கியின் அரச நாடகப் பணியகத்தின் அனுசரணையாளர்கள் மற்றும் அமைப்பாளர்களுக்கு தூதுவர் மற்றும் இலங்கை நாடகக் குழுவினர் நன்றிகளைத் தெரிவித்தனர்.

காதல் மற்றும் தனிமையைக் கருப்பொருளாகக் கொண்ட காதல் மற்றும் முடக்கநிலை என்ற மேடை நாடகம், காதல், தனிமை, அன்பானவர்களிடமிருந்து பிரிதல், இன்பம் மற்றும் துன்பம் ஆகியவற்றுக்கு இடையேயான பிரிக்க முடியாத தொடர்பை நாடக ரீதியாக விளக்குகின்றது. 2021 டிசம்பரில் தயாரிக்கப்பட்ட காதல் மற்றும் முடக்கநிலை என்ற மேடை நாடகம், இன்டர் எக்ட் ஆர்ட் தியேட்டர் இன்ஸ்டிட்யூட்டின் முதலாவது சர்வதேச நாடகமாகும்.

 இலங்கைத் தூதரகம்,

அங்காரா

2022 ஏப்ரல் 22

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close