இலங்கையானது 2026 ஆம் ஆண்டின் புத்தாண்டை வரவேற்கும் இத்தருணத்தில், கொள்கைசார் உலகளாவிய ஈடுபாடு, கண்ணியமிக்க வெளிநாட்டு வேலை, மற்றும் நவீனமானதும், நிலைபேறானதுமான சுற்றுலா பொருளாதாரம் ஆகியவற்றின் மூலம் நாட்டை மீளமைப்பதற்கான தனது உறுதிப்பாட்டை அமைச்சு மீண்டும் உறுதிப்படுத்துகிறது. இது விழுமியமிக்க சீர்திருத்தங்களுக்கும், புதுப்பிக்கப்பட்ட நம்பிக்கைக்கும் உரிய உன்னத தருணமாகும்.
இலங்கையின் வெளிநாட்டுக் கொள்கையானது, இருதரப்பு மற்றும் பல்தரப்புக் கூட்டாண்மைகளை வலுப்படுத்தி, சர்வதேச நம்பிக்கையை மீட்டெடுத்து, நாட்டை நம்பகமானதும், ஆக்கபூர்வமானதுமான உலகளாவிய கூட்டாளியாக நிலைநிறுத்தும் நோக்குடன் தெளிவுடனும், சமநிலையுடனும் முன்னெடுக்கப்படுகிறது. இன்றைய இராஜதந்திரமானது பொருளாதார மீட்பு, முதலீடு, வர்த்தக அணுகல் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆகியவற்றுக்கு நேரடியாக ஆதரவளிப்பதாக அமைவது அவசியமாகிறது.
எமது பொருளாதாரத்தின் முக்கிய தூணாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்ந்து திகழ்கிறது. 2026 ஆம் ஆண்டில், வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கை தொழிலாளர்களைப் பாதுகாத்தல், பாதுகாப்பானதும், சட்டபூர்வமானதுமான புலம்பெயர்தலுக்கான வழிகளை விரிவுபடுத்துதல், திறன்சார் அங்கீகாரத்தை மேம்படுத்துதல் ஆகியவற்றுடன் வெளிநாடுகளில் பணி புரியும் ஒவ்வொரு இலங்கையரினதும் மரியாதை, நலன் மற்றும் நியாயமான அணுகுமுறையை உறுதி செய்வது ஆகியவை அமைச்சின் முதன்மை பெரும் முன்னுரிமைகளாகும். திறமையுடனும் பாதுகாப்புடனும் கூடிய தொழிற்படையானது, பணமனுப்பல்களையும் தேசிய நம்பகத்தன்மையையும் ஒருங்கிணைந்து வலுப்படுத்துகிறது.
சுற்றுலாத்துறை தரம், நிலைபேறானதன்மை மற்றும் மீள்திறன் ஆகியவற்றை மையமாகக் கொண்டு மறுநிலைப்படுத்தப்பட்டு வருகிறது. சுற்றுச்சூழல் நலன்சார் பொறுப்புமிக்க சுற்றுலாத்துறை, உயர்தரச் சேவைகள், பிராந்திய சமநிலை, மற்றும் இலங்கையின் சர்வதேச நன்மதிப்பை மேம்படுத்தும் அதே வேளையில் சமூகங்களைப் பாதுகாக்கும் உலகளாவிய தரநிலைகள் என்பவற்றிலேயே எமது கவனம் உள்ளது.
இலங்கையை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு வலுவான நிறுவனங்கள், தூய்மையான ஆட்சி மற்றும் உலக சமூகத்துடன் தீவிர ஈடுபாடு அவசியமாகும். அரசின் தொலைநோக்குப் பார்வையை வழிகாட்டியாகக் கொண்டு, 2026 மற்றும் அதனைத்தொடர்ந்தும் வளர்ச்சி, வாய்ப்புகள் மற்றும் நீண்டகால தேசிய நிலைபேறானதன்மையை உறுதிப்படுத்துவதற்காக சர்வதேச கூட்டாளிகள், தனியார் துறை மற்றும் இலங்கைப் புலம்பெயர் சமூகத்துடன் இணைந்து அமைச்சானது தொடர்ந்து தீவிரமாகச் செயற்படும்.
விஜித ஹேரத்
வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர்
இலங்கை



