2025, டிசம்பர் 23 அன்று, இந்திய வெளியுறவு அமைச்சர் கலாநிதி சுப்பிரமணியம் ஜெய்ஷங்கரின், இலங்கை ஜனாதிபதி மாண்புமிகு அனுர குமார திசாநாயக்கவுடனான சந்திப்பைத் தொடர்ந்து, இலங்கை வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் கௌரவ விஜித ஹேரத் வழங்கிய ஊடக அறிக்கை

2025, டிசம்பர் 23 அன்று, இந்திய வெளியுறவு அமைச்சர் கலாநிதி சுப்பிரமணியம் ஜெய்ஷங்கரின், இலங்கை ஜனாதிபதி மாண்புமிகு அனுர குமார திசாநாயக்கவுடனான சந்திப்பைத் தொடர்ந்து, இலங்கை வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் கௌரவ விஜித ஹேரத் வழங்கிய ஊடக அறிக்கை

வணக்கம்!
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கௌரவ கலாநிதி சுப்பிரமணியம் ஜெய்ஷங்கர் அவர்களே,
இந்திய உயர் ஸ்தானிகர் திரு. சந்தோஷ் ஜா அவர்களே,
இந்திய மற்றும் இலங்கை பிரதிநிதிகள் குழு உறுப்பினர்களே,
ஊடக நண்பர்களே,
முதலில், கொழும்புக்கு மீண்டும் வருகை தந்துள்ள கலாநிதி ஜெய்ஷங்கரை நான் அன்புடன் வரவேற்கிறேன்.

தித்வா சூறாவளியால் ஏற்பட்ட பாதகமான வானிலை நிலைமைகளைத்தொடர்ந்தான இந்நேரத்தில், இலங்கையுடனான இந்தியாவின் உறுதியான ஒற்றுமையை அடிக்கோடிட்டுக் காட்டும் வகையில் அமைந்த, கலாநிதி ஜெய்ஷங்கரின் வருகை பாராட்டுக்குரியது. இப்பயணம் நமது இரு நாடுகளுக்கும் இடையிலான நெருங்கிய நட்பு மற்றும் நீடித்த கூட்டாண்மையின் வலுவான பிரதிபலிப்பாவதுடன் சாகர் பந்து செயற்திட்டத்தை சரியான நேரத்தில் தொடங்குவதன் மூலம் எமது நாட்டின் அவசரகாலத்தில் முதல் பதிலளிப்பவராக இந்தியாவின் பங்கையும் பிரதிபலிக்கிறது.

இலங்கையின் பொருளாதார சவால்களை சமாளிக்க இந்தியா அளித்த விலைமதிப்பற்ற ஆதரவிற்காக, பிரதமர் நரேந்திர மோடி, இந்திய அரசு மற்றும் கலாநிதி ஜெய்ஷங்கர் ஆகியோருக்கு இலங்கை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, இலங்கை அரசாங்கம் மற்றும் மக்கள் சார்பாக எமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் பெட்ரோலியத்திற்கான கடன் வரிகள், இருதரப்பு நாணய பரிமாற்றங்கள் மற்றும் கடன் பொறுப்பு ஒத்திவைப்பு மூலம் வழங்கப்பட்ட 4 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான முன்னோடியில்லாத உதவியை நாம் நன்றியுடன் நினைவு கூர்கிறோம்.

புவியியல் அருகாமை, ஆழமான வரலாற்று மற்றும் கலாச்சார உறவுகள், பகிரப்பட்ட மதிப்புகள் மற்றும் விரிவடையும் பொருளாதார இணைப்புகளில் வேரூன்றிய நீண்டகால, பன்முக உறவை இலங்கையும் இந்தியாவும் பகிர்ந்து கொள்கின்றன. வழக்கமான உயர் மட்ட ஈடுபாடுகள் மற்றும் அரசியல், உத்தியோகபூர்வ மற்றும் மக்களிடையேயான நெருக்கமான ஒத்துழைப்பு மூலம் எமது இருதரப்பு உறவுகள் தொடர்ந்து பலம் பெற்று வருகின்றன.

இந்த வகையில், அவசர நிதியுதவி மற்றும் அந்நிய செலாவணி ஆதரவு உள்ளிட்ட பலதரப்பட்ட உதவிகள் மூலம் இலங்கைப் பொருளாதாரத்தை நிலைப்படுத்துவதில் இந்தியாவின் தொடர்ச்சியான ஆதரவையும், அத்தோடு, ஏற்கனவே உள்ள கடன்களின் கீழ் உறுதிசெய்யப்பட்ட திட்டங்களுக்கான கொடுப்பனவுகளைத் தீர்க்க வழங்கப்பட்ட 20.66 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதிமிக்க உதவியையும், நாங்கள் பெரிதும் மதிக்கிறோம். உத்தியோகபூர்வ கடன் வழங்குநர் குழுவின் இணைத்தலைவராக, இலங்கையின் கடன் மறுசீரமைப்பு செயற்பாட்டில் விவாதங்களை சரியான நேரத்தில் முடிக்க உதவிய, இந்தியாவின் முக்கிய பங்கையும் நாங்கள் மனதாரப் பாராட்டுகிறோம்.

ஊடக நண்பர்களே,

இன்று அதிகாலை, கலாநிதி ஜெய்ஷங்கர் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவை சந்தித்து, இருதரப்பு கலந்துரையாடல்களை மேற்கொண்டார், இது பொருளாதார மேம்பாடு, எரிசக்தி பாதுகாப்பு, இணைப்பு, வர்த்தகம் மற்றும் முதலீடு, சுகாதாரம், கல்வி, கடல்சார் பாதுகாப்பு, டிஜிட்டல் ஒத்துழைப்பு, சுற்றுலா மற்றும் மக்களிடையேயான பரிமாற்றங்கள் உள்ளிட்ட முக்கிய துறைகளில் இந்தியா-இலங்கை ஒத்துழைப்பின் பரந்த பாதையில் கவனம் செலுத்தியது. நமது பிராந்தியத்தில் காலநிலை தொடர்பான நிகழ்வுகளின் காரணமாக அதிகரித்து வரும் தாக்கத்தைக் கருத்தில் கொண்டு, பேரிடர் தயார்நிலை மற்றும் மீள்தன்மை ஆகியவற்றில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்தும் கருத்துக்கள் பரிமாறப்பட்டன.

இச்சந்திப்பின் போது, ​​பாரிய அளவிலான நிவாரணப் பொருட்கள், அவசர மருத்துவ உதவி, தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள், இணைப்பை மீட்டெடுப்பது மற்றும் முக்கியமான உட்கட்டமைப்பை மீண்டும் கட்டியெழுப்புவதில் உதவி உள்ளிட்ட இந்தியாவின் துரிதமான மற்றும் விரிவான மனிதாபிமான ஆதரவிற்கு ஜனாதிபதி திசாநாயக்க தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தார். இச்சரியான நேரத்தில் இந்தியா மேற்கொண்ட தலையீடானது, பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு மிகவும் தேவையான நிவாரணத்தைக் கொண்டு வந்து சேர்த்துள்ளதுடன், இலங்கையின் தேசிய மீட்பு முயற்சிகளுக்கு விலைமதிப்பற்ற உதவியாக அமைந்துள்ளது.

இந்தியா வழங்கிய 1,000 டன்களுக்கும் மேலதிகமான நிவாரணப் பொருட்களை பாதிக்கப்பட்ட சமூகங்களிடையே உடனடியாக விநியோகிக்கப்பட்டன.

மஹியங்கனையில் நிறுவப்பட்ட இந்திய இராணுவத்தின் வான்வழிக்கள மருத்துவமனை ( Para Field Hospital) முக்கியமான சுகாதார சேவைகளை வழங்கிய, அதே நேரத்தில் சூறாவளியால் ஏற்பட்ட சேதங்களைத் தொடர்ந்து இந்திய இராணுவ சமிஞ்சைப்படையினர்  இணைப்பை வெற்றிகரமாக மீட்டெடுத்தனர். இந்தியா சுமார் 10 டன் அவசர மருந்துகளையும் வழங்கியமையானது, முக்கியமான நேரத்தில் எமது அவசர சுகாதாரத்தேவையின் போதான உடனடிப் பதிலளிப்பை வலுப்படுத்தியது.

பிரதமர் மோடியிடம் ஜனாதிபதி திசாநாயக்க விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க, நான்கு தொகுதிகளாக 228 டன் பெய்லி பால அலகுகளை வழங்கியதற்கும் நாம் நன்றிகளைத்த தெரிவித்துக்கொள்கிறோம். இந்த உதவி முக்கிய போக்குவரத்து இணைப்புகளை விரைவாக மீட்டெடுக்க உதவியது. இன்று முற்பகல், கலாநிதி ஜெய்ஷங்கரும், நானும் கிளிநொச்சியில் நிறுவப்பட்ட பெய்லி பாலத்த்தின் திறப்பு நிகழ்வில் ஜனாதிபதி திசாநாயக்கவுடன், மெய்நிகர் முறையில் இணைந்துகொண்டோம். இது இணைப்பை மீட்டெடுப்பதில் முக்கியமானதொரு பங்களிப்பாகும்.

ஊடக நண்பர்களே,

இலங்கையின் மீட்பு மற்றும் மறுசீரமைப்பு முயற்சிகளுக்கு அர்த்தமுள்ள ஆதரவை வழங்குவதற்கான, மேலதிக நிவாரணத் தொகுப்பின் அறிவிப்பை மேற்கொள்ள உத்தேசித்துள்ள கலாநிதி ஜெய்ஷங்கரின் இன்றைய வருகை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகிறது.  இந்நடவடிக்கையின் மூலம், இந்தியா மீண்டும் அதன் நீடித்த நட்பையும், ஒற்றுமையையும் நிரூபித்துள்ளது. பிரதமர் மோடிக்கும், கலாநிதி ஜெய்ஷங்கருக்கும், இந்திய மக்களுக்கும் நாங்கள் மிகுந்த நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்.

கலாநிதி ஜெய்ஷங்கர் அறிந்திருப்பது போல, தித்வா சூறாவளிக்குப் பிறகு இலங்கையின் சுற்றுலாத் துறை மீண்டும் எழுச்சி பெற்றுள்ளதுடன், அனைத்து சுற்றுலாத் தலங்களும் இப்போது முழுமையாக செயற்படத் தொடங்கியுள்ளன. இலங்கைக்கான சுற்றுலாப் பயணிகளின் மிகப்பெரிய ஆதாரமாக இந்தியா உள்ளது; மேலும் கலாநிதி ஜெய்ஷங்கர் அவர்களே, இலங்கையின் சுற்றுலாத்துறை பற்றிய தங்களிடமிருந்தானதொரு நேர்மறையான செய்தி உள்வரும் பயணிகளின் நம்பிக்கையை பெரிதும் அதிகரிப்பதுடன், தொடர்ச்சியான வருகைகளையம் ஊக்குவிக்குமென்பது உறுதி.

கலாநிதி ஜெய்ஷங்கர் அவர்களே, தங்கள் வருகைக்கும், இந்திய அரசாங்கமும் மக்களும் இலங்கைக்கு அளித்த உறுதியான ஆதரவிற்கும் மீண்டும் ஒருமுறை மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்திய வெளியுறவு அமைச்சர் கௌரவ கலாநிதி சுப்பிரமணியம் ஜெய்ஷங்கரை ஊடகங்களுக்கு உரையாற்ற அழைக்கிறேன்.

 

நன்றி !

2025, டிசம்பர் 23

Please follow and like us:

Close