2025 ஆம் ஆண்டில் சுற்றுலா வருகைகள் மற்றும் வெளிநாட்டு பணம் அனுப்புதல்களில் வரலாற்றுச் சாதனைகளைப் பதிவு செய்த இலங்கை

2025 ஆம் ஆண்டில் சுற்றுலா வருகைகள் மற்றும் வெளிநாட்டு பணம் அனுப்புதல்களில் வரலாற்றுச் சாதனைகளைப் பதிவு செய்த இலங்கை

2025 ஆம் ஆண்டில், சுற்றுலாப் பயணிகளின் வருகை மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பணம் அனுப்புதலில் இலங்கை வரலாற்று மைல்கற்களை எட்டுவதில் சாதனை படைத்துள்ளதாக வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு, நேற்று (2026 ஜனவரி 05) ஊடகங்களுக்குத் தெரிவித்தது.

2025 ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட முக்கிய சாதனைகளை கோடிட்டுக் காட்டுவதற்காகவும், 2026 ஆம் ஆண்டிற்கான முன்னுரிமையளிக்கப்படவுள்ள மூலோபாய நடவடிக்கைகளை முன்வைப்பதற்காகவும், வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சில் நேற்று, 2026, ஜனவரி 05 அன்று, வெளிநாட்டு அலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் மற்றும் சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் ஆகியோருடன் இணைந்து தான் தலைமை தாங்கி நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பில், அமைச்சர் இத்தகவலைப் பகிர்ந்து கொண்டார்.

ஊடகங்களுக்கு உரையாற்றிய அமைச்சர் ஹேரத், பொருளாதாரம், வர்த்தகம் மற்றும் அரசியல் துறைகளில் 2025 ஆம் ஆண்டில் இருதரப்பு மற்றும் பல்தரப்பு துறைகளில் இலங்கையின் இராஜதந்திர ஈடுபாடு கணிசமாக வலுப்பெற்றதாகக் கூறினார். சுற்றுலாத்துறை மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புத்துறை இந்த ஆண்டில் நாட்டின் மிக முக்கியமான வருமானம் ஈட்டும் இருதுறைகளாக பரிணமித்துள்ளன என்றும், 2025 ஆம் ஆண்டில் 2,362,000 சுற்றுலாப் பயணிகள் வருகை பதிவாகி, அண்ணளவாக 3.2 பில்லியன் அமெரிக்க டொலர் வருவாயை அது ஈட்டித்தந்தது என்றும் அவர் வலியுறுத்தினார். இது முந்தைய சாதனைகளை முறியடிக்கின்ற, இலங்கையின் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு, சுற்றுலாப் பயணிகளின் அதிகரித்த வருகையாக பதிவாகிறது.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு குறித்து, 2025 ஆம் ஆண்டில் முறையான வங்கி வழிமுறைகள் மூலம் பெறப்பட்ட புலம்பெயர்ந்த இலங்கைத் தொழிலாளர்காலால் மேற்கொள்ளப்படும் பணம் அனுப்புதல்கள் 7.8 பில்லியன் அமெரிக்க டொலர்களைத் தாண்டியமையானது, 2016 ஆம் ஆண்டிலிருந்து புலம்பெயர் இலங்கைத் தொழிலாளர் பணம் அனுப்புதலின் மிக உயர்ந்த வரவாக அமைகிறது என்று அமைச்சர் ஹேரத் குறிப்பிட்டார். மாதாந்த பணம் அனுப்புதல் சராசரியாக 650 மில்லியன் அமெரிக்க டொலர்களிலிருந்து, 700 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை இருந்தது. இந்த ஆண்டில் அண்ணளவாக 312,000 இலங்கையர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பைப் பெற்றனர். 2025 ஆம் ஆண்டில் சுற்றுலா மற்றும் தொழிலாளர் பணம் அனுப்புதலின் ஒருங்கிணைந்த வருவாய் அண்ணளவாக 11 பில்லியன் அமெரிக்க டொலர்களாகப் பெறப்பட்டமை தேசிய பொருளாதாரத்திற்கு குறிப்பிடத்தக்கதொரு சாதனையாகும்.

தித்வா சூறாவளிக்குப் பிறகு இலங்கையின் மீட்புத் திட்டம் குறித்தும் அமைச்சர் விளக்கியதுடன், மேற்கொள்ளப்பட்ட தீவிர இராஜதந்திர முயற்சிகள் வெளிநாட்டு அரசாங்கங்கள் மற்றும் அமைப்புகள், சர்வதேச அபிவிருத்திப் பங்காளிகள் மற்றும் இலங்கை புலம்பெயர்ந்தோர் மற்றும் இலங்கையின் நண்பர்களிடமிருந்து நிதி, பொருள் மற்றும் தொழில்நுட்ப உதவியைப் பெற நாட்டிற்கு வழிவகுத்தன எனக் குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் உரையாற்றிய வெளிநாட்டு அலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பிரதி அமைச்சர் கௌரவ அருண் ஹேமச்சந்திர, 2025 ஆம் ஆண்டு இலங்கையின் வெளிநாட்டு வேலைவாய்ப்புத் துறையின் நான்கு தசாப்த கால வரலாற்றில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்ளாக விளங்குவதுடன், இலங்கை பொருளாதாரம் மற்றும் சமூகத்திற்கு இத்துறை அளித்த அபரிமித பங்களிப்புகளையும் விவரித்தார். வருவாய் ஈட்டுதல், சேவை வழங்கல் மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களைப் பாதுகாப்பதில் வெளிநாடுகளில் உள்ள இலங்கையின் தூதரகப் பணியகங்களின் வலையமைப்பின் பங்கையும் அவர் எடுத்துரைத்தார்.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு செயன்முறைகளில் அரசியல் தலையீட்டைத் தடுக்கவும், வெளிநாட்டு வேலைவாய்ப்புக்களுக்கு சமமான அணுகலை உறுதி செய்யவும் செயற்படுத்தப்பட்ட முக்கிய சீர்திருத்தங்களை பிரதி அமைச்சர் கோடிட்டுக் காட்டினார். வேலைவாய்ப்பு வழங்கும் போர்வையிலான மோசடியை நிவர்த்தி செய்வதற்கும், அவை தொடர்பிலான விசாரணைகளை விரைவுபடுத்துவதற்கும் 2025 ஆம் ஆண்டில் ஒரு சிறப்பு பொலிஸ் புலனாய்வுப் பிரிவு நிறுவப்பட்டதை அவர் குறிப்பிட்டார்.

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் (SLBFE) ஆதரவுடன் அரசு மற்றும் தனியார் துறை வங்கிகள் மூலம் 10 மில்லியன் ரூபாய் வரை வீட்டுக் கடன்களை வழங்குதல் மூலம் புலம்பெயர்ந்த தொழிலாளர் வீட்டுவசதித் திட்டத்தைத் தொடங்குதல் உள்ளடங்கலாக புலம்பெயர்ந்த தொழிலாளர் நலனை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் விபரிக்கப்பட்டன. ஆகியவை இதில் அடங்கும். அது தொடர்பிலான மேலதிக முயற்சிகளில் ஜனாதிபதி நிதியுடன் இணைந்து செயற்படுத்தப்படும் நலன்புரித் திட்டம், வாட்ஸ்அப், குறுஞ்செய்தி ஒருங்கிணைப்பு மற்றும் டிஜிட்டல் கட்டுப்பாட்டுக் கூடங்களுடன், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் அழைப்பு மையத்தை அறிமுகப்படுத்துதல் மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர் வசதிக்கான கைப்பேசிச் செயலியைத் தொடங்குவதற்கான திட்டங்கள் ஆகியவை அடங்கும். தற்போது உருவாக்கத்தில் உள்ள, சர்வதேச சிறந்த நடைமுறைகளுடன் இணைக்கப்பட்டதும், முன்மொழியப்பட்டதுமான புதிய வெளிநாட்டு வேலைவாய்ப்புச் சட்டத்தைப் பற்றியும் துணை அமைச்சர் குறிப்பிட்டார்.

சுற்றுலாத் துறையின் பிரதி அமைச்சர் கௌரவ பேராசிரியர் ருவான் ரணசிங்க, சுற்றுலாத் துறையை தொற்றுநோய்க்கு முந்தைய நிலை மற்றும் அதனையும் தாண்டிய நிலைக்கு இலங்கையை மீட்டெடுப்பதில் அரசாங்கம் வெற்றிகண்டுள்ளதாகக் கூறினார். தித்வா சூறாவளியின் தாக்கம் இருந்தபோதிலும், தினசரி சுற்றுலாப் பயணிகளின் வருகை 10,000 முதல் 12,000 வரை இருந்தமையானது, இத்துறையின் மீள்தன்மை மற்றும் மீட்பு நடவடிக்கைகளின் செயற்திறனை நிரூபிக்கிறது என்று அவர் குறிப்பிட்டார்.

2025 ஆம் ஆண்டில் இலங்கை இதுவரை இல்லாத அளவுக்கு அதிக சுற்றுலாப் பயணிகளின் வருகையைப் பதிவு செய்துள்ளதாகவும், இந்தியா, ரஷ்யா, அமெரிக்கா, போலந்து, ஆஸ்திரேலியா மற்றும் சீனா ஆகியவை முன்னணி சந்தைகளில் இடம்பெற்றுள்ள, அதே நேரத்தில் இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகியவை ஐரோப்பாவிற்குள் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் காட்டியுள்ளன என்றும் அவர் உறுதிப்படுத்தினார்.

மேம்பட்ட டிஜிட்டல் சந்தைப்படுத்தல் உத்திகள், விமான நிலைய அடிப்படையிலான விளம்பர முயற்சிகள், அதிகரித்த வெளிநாட்டு முதலீடு மற்றும் மிகவும் மீள்தன்மை கொண்ட, நிலையானதும், பார்வையாளர்களுக்கு ஏற்றதுமான சுற்றுலாத் துறையை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்ட நிறுவன சீர்திருத்தங்களை வலுப்படுத்தியதையும் பிரதி அமைச்சர் எடுத்துரைத்தார். 2025 ஆம் ஆண்டில் இலங்கை பல பெருமைமிக்க சர்வதேச சுற்றுலா விருதுகளையும் பெற்றமையானது, இலங்கையை முதன்மையானதொரு பயண இடமாக அதன் உலகளாவிய நிலையை வலுப்படுத்தியது.

வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் அமைச்சின் கீழ் வரும் நிறுவனங்களும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டனர்.

 

வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு
கொழும்பு

2026, ஜனவரி 06

           

Please follow and like us:

Close