இன்று இலங்கை மற்றும் ஓமான் சுல்தானேனற்று ஆகியன இராஜதந்திர உறவுகளை ஸ்தாபித்த 40வது ஆண்டு நிறைவை நினைவுகூர்கின்றன. இந்த முக்கியமான சந்தர்ப்பத்தைக் குறிக்கும் வகையில், இலங்கை வெளிநாட்டு அமைச்சர் கௌரவ தினேஷ் குணவர்தன மற்றும் ஓமான் சுல்தானேற்றின் வெளிநாட்டு அமைச்சர் மாண்புமிகு சையித் பத்ர் பின் ஹமாத் அல் புசைதி ஆகிய இருவரும் இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளிலான இந்த குறிப்பிடத்தக்க சந்தர்ப்பத்தில் வாழ்த்துச் செய்திகளைப் பரிமாறிக்கொண்டனர்.
இந்த முக்கியமான சந்தர்ப்பத்தை நினைவுகூரும் வகையில், மஸ்கட்டில் உள்ள ஓமான் சுல்தானேற்றின் வெளிநாட்டு அமைச்சில் நினைவுச் சின்னம் ஒன்றை அறிமுகப்படுத்தும் முகமாக இன்று ஒரு விஷேட நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த விஷேட சந்தர்ப்பத்துடன் இணைந்த நிகழ்வின் போது இராஜதந்திர, சிறப்பு, சேவை மற்றும் உத்தியோகபூர்வ கடவுச்சீட்டுக்களை வைத்திருப்பவர்களுக்கான வீசா தேவைகளை பரஸ்பரம் விலக்களிப்பது குறித்த ஒப்பந்தமும் கைச்சாத்திடப்படவுள்ளது. இந்த வரலாற்று நிகழ்வை நினைவுகூரும் வகையில் மஸ்கட்டில் உள்ள இலங்கைத் தூதரகம் தொடர்ச்சியான நடவடிக்கைகளை ஏற்பாடு செய்து வருகின்றது.
இலங்கையும் ஓமான் சுல்தானேனற்றும் நீண்டகால வரலாற்று மற்றும் மக்களுக்கிடையிலான உறவுகளை அனுபவித்து வருகின்றன. இராஜதந்திர உறவுகள் 1981ஆம் ஆண்டில் ஸ்தாபிக்கப்பட்டதோடு, 1987 மற்றும் 2013ஆம் ஆண்டுகளில் முறையே மஸ்கட் மற்றும் கொழும்பில் இலங்கை மற்றும் ஓமானின் இராஜதந்திரத் தூதரகங்கள் திறக்கப்பட்டதன் மூலம், இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் தொடர்ந்தும் செழிப்படைந்து, கடந்த நான்கு தசாப்தங்களாக குறிப்பிடத்தக்க மைல்கற்களை எட்டியுள்ளன.
இரு நாடுகளுக்கிடையேயான முதலாவது இருதரப்பு ஈடுபாடு 1996ஆம் ஆண்டில் இலங்கையின் முன்னாள் வெளிநாட்டு அமைச்சர் காலஞ்சென்ற லக்ஷ்மன் கதிர்காமர் அவர்களின் விஜயத்துடன் ஆரம்பமானது. இந்த விஜயமானது, காலஞ்சென்ற மேன்மை தங்கிய சுல்தான் கபூஸின் தனிப்பட்ட பிரதிநிதியான சையித் துவைனி பின் ஷிஹாப் அல் சையத் அவர்களின் தலைமையில் 1997ஆம் ஆண்டில் ஓமான் சுல்தானேற்றில் இருந்து இலங்கைக்கு மேற்காள்ளப்பட்ட ஒரு உயர்மட்ட தூதுக்குழுவின் உத்தியோகபூர்வ விஜயத்துக்கு வழிவகுத்தது. அப்போதைய ஓமான் வெளிநாட்டு அமைச்சின் பொதுச்செயலாளராக மேன்மை தங்கிய சுல்தான் ஹைதம் பின் தாரிக் செயற்பட்டதுடன், உயர்மட்ட தூதுக்குழுவின் ஒரு பகுதியாக இலங்கைக்கு விஜயம் செய்தார்.
இரு நாடுகளினதும் வெளிநாட்டு அமைச்சுக்களுக்கிடையிலான இருதரப்பு அரசியல் ஆலோசனை குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் இரு நாடுகளுக்கிடையில் பன்முகத் துறைகளில் அபிவிருத்தியடைந்து வரும் இருதரப்பு ஒத்துழைப்புக்கு ஒரு ஊக்கியாக தொழிற்படுகின்றது.
இலங்கை நாடாளுமன்றத்துக்கும் ஓமான் ஷூரா சபைக்கும் இடையில் நிறுவப்பட்ட இலங்கை - ஓமான் நாடாளுமன்ற நட்புறவுச் சங்கமானது, இரு நாடுகளுக்கும் இடையில் உயர்மட்ட விஜங்களைப் பரிமாறிக் கொள்ள வழி வகுத்தது.
இந்து சமுத்திரத்தைப் பகிர்ந்து கொள்ளும் நாடுகள் என்ற வகையில், அதிக இணைப்பு மற்றும் ஆழ்ந்த பொருளாதார ஈடுபாடு ஆகியவற்றுக்கு இலங்கையும், ஓமானும் நன்கு தயாராக உள்ளன. இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் கடந்த நான்கு தசாப்தங்களாக ஒத்துழைப்புக்கான பரந்த பகுதிகளை உள்ளடக்கியதாக பன்முகப்படுத்தப்பட்டிருப்பதோடு, இரு நாடுகளும் தற்போது பொருளாதார பன்முகப்படுத்தல் உந்துதலுக்கு உட்பட்டுள்ள நிலையில், இரு நாட்டு மக்களினதும் பரஸ்பர நன்மைகளுக்காக அடுத்த ஆண்டுகளில் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் கூட்டாண்மை ஆகியவற்றின் மேம்படுத்தல்களில் இரு நாடுகளும் கவனம் செலுத்த வேண்டிய நேரம் கனிந்துள்ளது.
இலங்கை ஜனாதிபதி அதி மேதகு கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் 'நாட்டைக் கட்டியெழுப்பும் செழிப்பான பார்வை' மற்றும் மேன்மை தங்கிய சுல்தான் ஹைதம் பின் தாரிக் அவர்களால் வடிவமைக்கப்பட்ட ஓமானின் பார்வை 2040 ஆகியன இருதரப்பு வரலாற்றில் இலங்கைக்கும் ஓமான் சுல்தானேற்றுக்கும் இடையிலான உறவுகள் மற்றுமொரு மைல்கல்லை எட்டும் நோக்கில் பயணத்திற்கான தெளிவான பாதை வரைபடங்கள் ஆகும்.
இரு நாட்டு மக்களினதும் பரஸ்பர நலன்களுக்காக கடந்த பல தசாப்தங்களாக இலங்கைக்கும் ஓமான் சுல்தானேற்றுக்கும் இடையிலான இருதரப்பு உறவை மேம்படுத்துவதில் தமது மதிப்புமிக்க பங்களிப்பை வழங்கிய அனைவருக்கும் மரியாதை செலுத்துவதற்காக இந்த வாய்ப்பை நான் பயன்படுத்துகின்றேன்.
இலங்கைக்கும் ஓமானுக்கும் இடையில் பல தசாப்தங்களாக மகிழ்ச்சியுடன் நிலவும் நட்பு மற்றும் ஒத்துழைப்பின் நீண்டகால பிணைப்புக்களால் வளர்ந்து வரும் இருதரப்பு உறவுகள், அடுத்த ஆண்டுகளில் தொடர்ந்தும் செழித்து வளரும் என நான் நம்புகின்றேன்.
இலங்கைத் தூதரகம்
மஸ்கட்
2021 பெப்ரவரி 17