மார்ச் 02 - 04ஆந் திகதிகளில் இந்திய வெளியுறவு அமைச்சுடன் இணைந்து பார்வையாளர் ஆய்வு அறக்கட்டளையால் கூட்டாக நடாத்தப்பட்ட புவிசார் அரசியல் மற்றும் புவிசார் பொருளாதாரம் தொடர்பான இந்தியாவின் முதன்மை மாநாடான ரைசினா உரையாடல் - 2023 இல் கலந்து கொள்வதற்காக, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் எம்.யு.எம். அலி சப்ரி புதுதில்லிக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டார். பேச்சுவார்த்தையின் தொடக்க அமர்வை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
பக்க அம்சமாக, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி, இந்திய வெளியுறவு அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கரை மார்ச் 04ஆந் திகதி புதுதில்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் இருதரப்பு பேச்சுவார்த்தைக்காக சந்தித்தார். வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் சப்ரி, இலங்கையின் தற்போதைய அபிவிருத்திகள் மற்றும் நாட்டின் கடன் மறுசீரமைப்பு செயன்முறையின் நிலை மற்றும் சர்வதேச நாணய நிதியத் திட்டம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் குறித்து அமைச்சர் ஜெய்சங்கருக்கு விளக்கினார். இரு அமைச்சர்களும் தற்போதைய பொருளாதார ஒத்துழைப்பின் நிலையை மீளாய்வு செய்து, முன்னோக்கிச் செல்லும் வழி குறித்து கலந்துரையாடினர். பிரதமர் நரேந்திர மோடியினால் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு இந்தியாவிற்கு விஜயம் செய்யுமாறு விடுக்கப்பட்ட அழைப்பைத் தொடர்ந்து அமைச்சர் சப்ரி இந்த விஜயத்தை மேற்கொண்டார்.
குறித்த நாடுகளுடனான உறவுகளையும் ஒத்துழைப்பையும் வலுப்படுத்தும் நோக்கில், துருக்கியின் வெளிவிவகார அமைச்சர் மெவ்லூட் கவுசோக்லு, தென்னாபிரிக்காவின் வெளிவிவகார அமைச்சர் கலாநிதி நலேடி பாண்டோர், பிரேசில் வெளிவிவகார அமைச்சர் மௌரோ வியேரா மற்றும் ஸ்லோவேனியாவின் துணைப் பிரதமரும், வெளிவிவகார மற்றும் ஐரோப்பிய விவகார அமைச்சருமான டான்ஜா ஃபஜோன் ஆகியோருடன் இலங்கையின் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் இருதரப்பு சந்திப்புக்களில் ஈடுபட்டார்.
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி புதுதில்லியை தளமாகக் கொண்ட ஊடகங்களுடனும் பல கலந்துரையாடல்களில் ஈடுபட்டார்.
மார்ச் 03ஆந் திகதி வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் சப்ரி பிளவுபட்ட உலகத்தை குணப்படுத்துதல் என்ற கருப்பொருளின் கீழ் இடம்பெற்ற 'ரைசினா இளம் தோழர்களுடன் மதிய உணவு உரையாடலில்' கலந்து கொண்டதுடன், துருவமுனைப்பு மற்றும் அந்த செயற்பாட்டில் தலைவர்களின் வகிபாகமானது ஜனநாயக சமூகங்களில் எவ்வாறு பிரதிபலிக்க வேண்டும் என்பது குறித்து அமைச்சர் உரையாடினார். இதனைத் தொடர்ந்து, பார்வையாளர் ஆய்வு அறக்கட்டளையின் தலைவர் சன்ஜோய் ஜோஷியுடன் 'ரைசினா யோசனைத் தளம்' என்ற இடத்தில் அமைச்சர் நேருக்கு நேர் உரையாடியதுடன், இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலை மற்றும் நாட்டின் மீட்சிக்கான பாதை குறித்தும் கருத்து வெளியிட்டார்.
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் சப்ரி 'வாக்குறுதியின் பைட்டுகள்: தொழில்நுட்பம் சமூகங்களை எவ்வாறு உயர்த்த முடியும்' என்ற முழுமையான குழு விவாதத்தின் ஒரு குழு உறுப்பினராக கலந்து கொண்டதுடன், டிஜிட்டல் தொழில்நுட்பம் பரவுவதற்கான உட்கட்டமைப்பு மற்றும் நிதித் தடைகள், திறன் அபிவிருத்தியின் முக்கியத்துவம், டிஜிட்டல் மயமாக்கலினால் எவ்வாறு பின்னடைவை மேம்படுத்த முடியும் மற்றும் சமூகங்களின் மேம்பாட்டிற்காக தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கான சிறந்த கொள்கைகள் மற்றும் தளங்களின் தேவை குறித்து அவர் பேசினார்.
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் சப்ரியுடன் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் புதுதில்லியில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலய அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு,
கொழும்பு
2023 மார்ச் 06