​கூட்டு ஊடக வெளியீடு: ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆறாவது கூட்டம் - ஆட்சி, சட்டத்தின்  ஆட்சி மற்றும் மனித உரிமைகள் குறித்த   இலங்கை செயற்குழு

​கூட்டு ஊடக வெளியீடு: ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆறாவது கூட்டம் – ஆட்சி, சட்டத்தின்  ஆட்சி மற்றும் மனித உரிமைகள் குறித்த   இலங்கை செயற்குழு

ஆட்சி, சட்டத்தின் ஆட்சி மற்றும் மனித உரிமைகள் தொடர்பான ஆறாவது செயற்குழு 2022  அக்டோபர் 28ஆந் திகதி கொழும்பில் கூடியது.

  1. இலங்கைக்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையிலான வழக்கமான இருதரப்புத் தொடர்புகளின் பின்னணியில் செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. ஒரு நாள் முழுவதுமான நடவடிக்கைகள், ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பரப் பரிமாற்றத்தின் அடிப்படையில், கருத்துக்கள் மற்றும் அனுபவங்களின் சுமூகமான கருத்துப் பரிமாற்றம் இடம்பெற்றது. இலங்கை மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தில் ஏற்பட்டுள்ள சமீபத்திய முன்னேற்றங்கள் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துதல் மற்றும் பாதுகாத்தல் தொடர்பான உரிய நடவடிக்கை மற்றும் சட்ட முன்முயற்சிகளை நடைமுறைப்படுத்துதல் குறித்து இரு தரப்பும் கலந்துரையாடினர். நல்லிணக்கத்தில்  முன்னேற்றம் குறித்து இலங்கை ஐரோப்பிய ஒன்றியத்திற்கு விளக்கமளித்துள்ளது.
  1. தேவையான சீர்திருத்தங்கள் மற்றும் சமூக பாதுகாப்பு நடவடிக்கைகள் உட்பட, தற்போதைய முன்னோடியில்லாத பொருளாதார நெருக்கடியை வெற்றிகரமாக சமாளிப்பதற்காக, நெருக்கடியின் பாதகமான தாக்கத்தைத் தணித்து, நாட்டை நிலையான அபிவிருத்தி மற்றும் செழிப்புக்கு இட்டுச் செல்லும் இலங்கையின் முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதற்கான உறுதிப்பாட்டை  ஐரோப்பிய ஒன்றியம் மீண்டும் உறுதிப்படுத்தியது. மனித உரிமைகள் முன்னேற்றத்தில் நீதி மற்றும் நல்லிணக்கத்தின் மூலம் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் உள்ளடக்கத்தின் முக்கியத்துவத்தை இலங்கையும் ஐரோப்பிய ஒன்றியமும் மீண்டும் வலியுறுத்தின.
  1. ஜனநாயகநிர்வாகத்தை வலுப்படுத்துவதையும் முக்கிய நிறுவனங்களின் சுயாதீன மேற்பார்வையையும், பொது ஆய்வு மற்றும் ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகள், அரசியலமைப்பு சபை மற்றும் சுயாதீன ஆணைக்குழுக்களை மீண்டும் நிறுவுவதை நோக்கமாகக் கொண்டுள்ள அரசியலமைப்பின் 21வது திருத்தம் குறித்து இலங்கை ஐரோப்பிய ஒன்றியத்திற்கு தெரியப்படுத்தியது. இச்சூழலில், அதிகாரங்கள், கண்காணிப்புக்கள் மற்றும் சமநிலைகளை பிரிப்பதன் முக்கியத்துவம் மற்றும் சுயாதீன நிறுவனங்களின் தற்போதைய பணிகள் குறித்து இரு தரப்பும் கலந்துரையாடின. தேர்தல் சீர்திருத்த செயன்முறை குறித்தும் பணிக்குழுவிற்கு புதிய தகவல்கள் வழங்கப்பட்டன. இந்நிலையில், 2019 ஐரோப்பிய ஒன்றியத் தேர்தல் பார்வையாளர் பணியின் பணிகளை ஐரோப்பிய ஒன்றியம் நினைவு கூர்ந்தது. ஜனநாயகக் கருத்து மற்றும் கருத்துச் சுதந்திரத்தின் முக்கியத்துவத்தையும், அமைதியான முறையில் ஒன்றுகூதுவதற்கான சுதந்திரத்திற்கான உரிமைகளையும் இரு  தரப்பும்  மீண்டும் வலியுறுத்தின.
  1. ஐரோப்பியஒன்றியத்தால் நிதியளிக்கப்பட்ட நீதித்துறை சீர்திருத்தத் திட்டத்திலான முன்னேற்றத்தை வரவேற்ற ஐரோப்பிய ஒன்றியம், நீதிக்கான அணுகலை  மேலும் மேம்படுத்தி மனித  உரிமைகளை மேம்படுத்தவுள்ளது. இந்த விடயத்தில் ஐரோப்பிய ஒன்றியம் வழங்கிய ஆதரவை இலங்கை பாராட்டியது.
  1. பயங்கரவாதத்தடைச் சட்டத்தை சீர்திருத்துவதற்காக மார்ச் 2022 இல் இலங்கை முன்னெடுத்த நடவடிக்கைகளை ஐரோப்பிய ஒன்றியம் அங்கீகரித்ததோடு, அதன் உறுதிமொழிகளுக்கு இணங்க மேலும் நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டியது. பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் சமீபத்திய பயன்பாடு குறித்து ஐரோப்பிய ஒன்றியம் கவலை  தெரிவித்தது. பயங்கரவாதத் தடைச் சட்டம் மிகவும் அவசியமான சந்தர்ப்பங்களில் மட்டுமே பயன்படுத்தப்பட்டதாக இலங்கை உறுதியளித்துள்ளது. 2021-2022ஆம் ஆண்டில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதிகளை விடுவிப்பது குறித்த இலங்கையின் புதிய தகவல்கள் குறித்து ஐரோப்பிய ஒன்றியம் குறிப்பிட்டதுடன், குற்றம் சாட்டப்படாத பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை விடுதலை செய்ய ஊக்குவித்துள்ளது. அரசியலமைப்பு, சர்வதேச நியமங்கள் மற்றும் சிறந்த நடைமுறைகளுக்கு இணங்க, 2023ஆம் ஆண்டில் பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்குப் பதிலாக ஒரு விரிவான சட்ட முன்மொழிவைத் தயாரிப்பதில் இலங்கை தனது வலுவான உறுதிப்பாட்டை வெளிப்படுத்தியது.
  1. இலங்கையும்ஐரோப்பிய ஒன்றியமும் சிவில் சமூகத்தை ஈடுபடுத்துவதன் மற்றும் அதன்  அனைத்து பன்முகத்தன்மையிலும் செயற்படத் தேவையான இடத்தை வழங்குவதன் முக்கியத்துவத்தை மீண்டும் உறுதிப்படுத்தியது. இந்த நடவடிக்கையில் இலங்கைக்கு தொடர்ந்தும் ஆதரவளிப்பதற்கு ஐரோப்பிய ஒன்றியம் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளது.
  1.  இருதரப்பினரும் சிறுபான்மையினரின் நிலைமை மற்றும் வெறுப்புப் பேச்சுக்கு தீர்வு காண எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடினர். பெண்கள் மற்றும் குழந்தைகளின்  உரிமைகளைப் பாதுகாப்பதற்காக எடுக்கப்பட்ட சட்டமியற்றுதல் மற்றும் ஏனைய நடவடிக்கைகள், சிறுவர் தொழிலாளர் ஒழிப்பு உட்பட தொழிலாளர் உரிமைகளை மேம்படுத்துவதற்கு முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் அவர்கள் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனர். ஒரே பாலின உறவுகளை குற்றமற்றதாக்குவதற்கான அழைப்பை ஐரோப்பிய ஒன்றியம் மீண்டும் வலியுறுத்தியதுடன், இது தொடர்பான தனி உறுப்பினர் மசோதா குறித்தும் குறிப்பிட்டது.
  1. ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் ஒப்பந்த அமைப்புக்கள், சிறப்பு நடைமுறைகள் மற்றும் உலகளாவிய காலாந்தர மீளாய்வு செயன்முறை உள்ளிட்ட ஒத்துழைப்பு குறித்து இரு தரப்பும் கலந்துரையாடினர். மனித உரிமைகள் பேரவையுடனும் அதன் பொறிமுறைகளுடனும் தொடர்ந்தும் ஈடுபடுமாறு இலங்கையை ஐரோப்பிய ஒன்றியம் ஊக்குவித்தது. நிலையான அபிவிரு;ததிக்கான 2030 நிகழ்ச்சி நிரலின் கட்டமைப்பில் தமது ஒத்துழைப்பைத் தொடர  இரு தரப்பும்  ஒப்புக்கொண்டன.
  1. ஜ.எஸ்.பி. +கண்காணிப்பு செயன்முறை மற்றும் அதன் தேவைகள் குறித்து செயற்குழுவுக்கு புதிய  தகவல்கள் வழங்கப்பட்டன. ஐரோப்பிய ஒன்றியம் அதன் ஜ.எஸ்.பி. + உறுதிமொழியில் இலங்கையின் உறுதியான முன்னேற்றத்தை ஊக்குவித்தது.

இலங்கையின் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் மத்திய ஆசியா, ஐரோப்பிய ஒன்றியம்  மற்றும் பொதுநலவாயப் பிரிவின் பணிப்பாளர் நாயகம் திருமதி. வருணி முத்துக்குமாரண மற்றும் ஐரோப்பிய வெளி நடவடிக்கை சேவையின் தெற்காசிய பிரிவின் பிரதிப் பணிப்பாளரும், தலைவருமான திருமதி. ரென்ஸ்ஜே டீரிங்க் ஆனகியோர் இச்செயற்குழுக்கான இணைத்தலைமையை வகித்தனர்.

Please follow and like us:

Close