இலங்கை வர்த்தக சம்மேளனத்தினால் கொழும்பு ஷங்ரிலா ஹோட்டலில் ஏற்பாடு செய்யப்பட்ட 'உறுப்பினர்கள் மன்றம் - 2022' இன் பிரதம அதிதியாகப் பங்கேற்ற வெளிவிவகார செயலாளர் அருணி விஜேவர்தன, முக்கிய உரையை நிகழ்த்தினார்.
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு மற்றும் வெளிநாட்டில் உள்ள இலங்கைத் தூதரகங்களின் மூலம் மேற்கொள்ளப்படும் கணிசமான பணிகளை விளக்கிய செயலாளர் விஜேவர்தன, நாட்டிற்கு அதிக பொருளாதார வாய்ப்புக்களைத் தேடும் நோக்கில் எமது வெளியுறவுகளை மறுசீரமைப்பதில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். அமைச்சு மற்றும் எமது தூதரகங்களின் இந்த இராஜதந்திரப் பணியானது, பாதுகாப்பான, சட்டப்பூர்வமான மற்றும் உயர் திறன் கொண்ட தொழிலாளர் இடம்பெயர்வு, உள்நோக்கிய சுற்றுலா, வெளிநாட்டு நேரடி முதலீடு மற்றும் வர்த்தக விரிவாக்கத்தை அதிகரிப்பதன் மூலம் நாட்டிற்கு வருமானத்தை ஈட்டும் முயற்சிகளை எதிர்பார்க்கின்றது. பொருளாதார விரிவாக்கத்தின் மூலம் ஒத்துழைப்பதானது அனைத்து அரசாங்கத்திற்கும் ஒரு வெற்றிகரமான சூழ்நிலையாக இருப்பதால், தனியார் துறையும் எமது சர்வதேசப் பங்காளிகளும் பரஸ்பரம் ஆதரவான கட்டமைப்பில் இணைந்து செயற்பட வேண்டும்.
'உறுப்பினர்கள் மன்றம் - 2022' என்பது இலங்கை வர்த்தக சம்மேளனத்தினால் அண்ணளவான அதன் 20 வர்த்தக சபைகளுடன் இணைந்து வருடாந்தம் ஏற்பாடு செய்யப்படும் நிகழ்வாகும். இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் பெருமளவிலான வர்த்தக சபைகள், தூதுவர்கள் மற்றும் தூதரகப் படையின் உறுப்பினர்கள், ஏற்றுமதி அபிவிருத்தி சபை, முதலீட்டு சபை, கொழும்பு பங்குச் சந்தை மற்றும் வரிசை அமைச்சுகள் உள்ளிட்ட அரசாங்க நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் பல தனியார் துறை கூட்டுத்தாபனங்கள் உட்பட வர்த்தக சமூக உறுப்பினர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு
கொழும்பு
2022 நவம்பர் 23