வெளிவிவகார செயலாளர் அருணி விஜேவர்தன ஜேர்மன் கூட்டாட்சி வெளிவிவகார அலுவலகத்தின் இராஜாங்க செயலாளர் தோமஸ்  பாக்கருடன் சந்திப்பு

  வெளிவிவகார செயலாளர் அருணி விஜேவர்தன ஜேர்மன் கூட்டாட்சி வெளிவிவகார அலுவலகத்தின் இராஜாங்க செயலாளர் தோமஸ்  பாக்கருடன் சந்திப்பு

வெளிவிவகார செயலாளர் அருணி விஜேவர்தன 2023 செப்டம்பர் 27ஆந் திகதி பேர்லினில் உள்ள ஜேர்மன் கூட்டாட்சி வெளிவிவகார அலுவலகத்தின் இராஜாங்க செயலாளர் தோமஸ் பாக்கரை சந்தித்தார். ஜேர்மனிக்கான இலங்கைத் தூதுவர் வருணி முத்துக்குமாரன மற்றும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகளும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர். இலங்கையும், ஜேர்மனியும் 70 வருட இராஜதந்திர உறவுகளைக் கொண்டாடும் இருதரப்பு உறவுகளின் முக்கியமான தருணத்தின் போது இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

ஆரம்பத்தில், வெளிவிவகார செயலாளர் விஜேவர்தனவுடனான சந்திப்பை இராஜாங்க செயலாளர் பாக்கர் வரவேற்றதுடன், எதிர்கால ஒத்துழைப்புக்கான  புதிய வழிகளுக்கு இந்த சந்திப்பு வழி வகுக்கும் என வலியுறுத்தினார்.

இலங்கைக்கும் ஜேர்மனிக்கும் இடையில் நிலவும் சிறந்த உறவுகள் குறித்து குறிப்பிடுகையில், வெளிவிவகார செயலாளர் விஜேவர்தன, இலங்கை வர்த்தகங்கள், குறிப்பாக சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள் சர்வதேச சந்தைகளை அணுகுவதற்கு ஜேர்மன் நல்கும் உதவியைப் பாராட்டினார். ஜேர்மன் சந்தையில் சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் தகவல் மற்றும் தொடர்பாடல் சேவைகளை நிலையான அடிப்படையில் ஏற்றுமதி செய்வதற்கு இலங்கை அதிக வாய்ப்புக்களை எதிர்பார்ப்பதாக அவர் வலியுறுத்தினார். இலங்கையில் தொழிற்பயிற்சி கல்வியை மேலும் மேம்படுத்துவது குறித்தும் இரு தரப்பினரும் கலந்துரையாடினர்.

வெளிவிவகார செயலாளர் விஜேவர்தன, இலங்கையுடனான ஜேர்மனியின் நீண்டகால அபிவிருத்தி ஒத்துழைப்பு பங்காளித்துவத்திற்கு பாராட்டுக்களைத் தெரிவித்ததுடன், நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமையை கவனத்தில் கொண்டு நேரடி அபிவிருத்தி உதவிகளை தொடருமாறு கோரினார். ஃபிரடெரிக் நௌமன் பவுன்டேஷன் உட்பட ஜேர்மன் அறக்கட்டளைகள் இலங்கைக்கு பல்வேறு துறைகளில் வழங்கிய உதவிகளையும் அவர் பாராட்டினார்.

வெளிவிவகார செயலாளர் விஜேவர்தன, இலங்கையின் பொருளாதாரம் மற்றும் நல்லிணக்கத்தை ஸ்திரப்படுத்துவதில் அண்மைக்காலமாக இலங்கையின் முன்னேற்றம் குறித்து இராஜாங்க செயலாளர் பாக்கருக்கு எடுத்துரைத்தார். இலங்கையின் கடன் மறுசீரமைப்புச் செயன்முறையில் ஜேர்மனி உட்பட பரிஸ் கிளப் ஆற்றிய குறிப்பிடத்தக்க பங்கை அவர் பாராட்டினார்.

இந்தோ-பசிபிக் பிராந்தியத்தின் முக்கியத்துவம் மற்றும் எதிர்கால ஒத்துழைப்பு, குறிப்பாக 2023 அக்டோபரில் இருந்து இரண்டு ஆண்டுகளுக்கு இலங்கையின் தலைமையில் இருக்கும் இந்து சமுத்திர விளிம்பு சங்கத்தின் கட்டமைப்பின் கீழ் இரு தரப்பினரும் கலந்துரையாடினர்.

சர்வதேச காலநிலை நிதியுதவிக்கான ஜேர்மனியின் உறுதிமொழிகளைக் குறிப்பிட்ட வெளிவிவகார செயலாளர் விஜேவர்தன, காலநிலை செழிப்புத் திட்டம், சர்வதேச காலநிலை மாற்ற பல்கலைக்கழகம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியை மையமாகக் கொண்ட பசுமை வளர்ச்சிக்கான மூலோபாயம் தொடர்பான இலங்கையின் முன்முயற்சிகளுக்கான ஜேர்மனின் உதவியை ஊக்குவித்தார்.

வெளியுறவுச் செயலாளர்கள் மட்டத்தில் இருதரப்பு அரசியல் ஆலோசனைகளை வழக்கமான முறையில் கூட்டுவதன் முக்கியத்துவம் மற்றும் எதிர்கால ஒத்துழைப்புக்கான முன்னுரிமைப் பகுதிகளை அடையாளம் காணுதல் குறித்து இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டனர்.

2023 செப்டெம்பர் 27 - 30 வரை ஜேர்மனிக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேற்கொண்டிருந்த பணிப்பயண விஜயத்தின் போது, வெளிவிவகார செயலாளர் விஜேவர்தன உத்தியோகபூர்வ தூதுக்குழுவில் அங்கத்தவராக இருந்தார்.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு,

கொழும்பு

04 அக்டோபர் 2023

Please follow and like us:

Close