ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 43வது அமர்வுக்கான இலங்கைத் தூதுக்குழுவின் தலைவரான வெளிநாட்டு உறவுகள் அமைச்சர் தினேஷ் குணவர்தன ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் மைக்கேல் பச்சலெட்டை இன்று (பெப்ரவரி 28) சந்தித்தார்.
40/1 தீர்மானத்தின் இணை அனுசரணையிலிருந்து விலகுவதற்கான இலங்கை அரசாங்கத்தின் தீர்மானத்தையும், அவ்வாறு செய்வதற்கான அடிப்படையையும் அமைச்சர் தினேஷ் குணவர்தன மீண்டும் வலியுறுத்தினார். ஒரு வருடத்திற்கு முன்னர், அவருக்கு முன்னர் இருந்த முன்னாள் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சரும் இந்தத் தீர்மானத்தில் பல பகுதிகளை சுட்டிக்காட்டியிருந்ததை அவர் நினைவு கூர்ந்தார். இணை அனுசரணையிலிருந்து விலகியிருந்தாலும், உள்நாட்டு விசாரணை ஆணைக்குழுவை நியமிப்பதன் மூலமாகவும், நிலையான அபிவிருத்தி இலக்குகளை செயற்படுத்துவதற்கான அரசாங்கத்தின் கடமைகளில் வேரூன்றிய கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதன் மூலமாகவும், ஐ.நா. மற்றும் அதன் முகவர்களின் உதவியுடன் தொடர்ந்தும் பணியாற்றுவதன் மூலமாகவும், அரசியலமைப்பின் கட்டமைப்பிற்கு உட்பட்ட வகையில் நிலையான அமைதி மற்றும் நல்லிணக்கத்தை நோக்கிய பொறுப்புணர்வு மற்றும் மனித உரிமைகளை அடைவதற்கான அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை அவர் வலியுறுத்தினார். பாராளுமன்றச் சட்டங்களால் உருவாக்கப்பட்ட காணாமல்போனோர் அலுவலகம் மற்றும் இழப்பீடுகளுக்கான அலுவலகம் போன்றவற்றால் நிறுவப்பட்ட நல்லிணக்கப் பொறிமுறைகள் அரசாங்கக் கொள்கைக் கட்டமைப்பிற்கு ஏற்ற வகையில் தொடரப்படும் என சுட்டிக்காட்டப்பட்டது.
மனித உரிமைகள் பேரவையின் உயர்மட்ட அமர்வில் பங்கேற்றமைக்காக அமைச்சர் குணவர்தனவுக்கு உயர்ஸ்தானிகர் பச்சலெட் தனது நன்றிகளைத் தெரிவித்தார். இலங்கை தொடர்பான மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்தின் இணை அனுசரணையிலிருந்து இலங்கை விலகியமை தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில், உயர்ஸ்தானிகர் அலுவலகம் மற்றும் ஐ.நா. அமைப்புக்களுடன் தொடர்ச்சியாக ஒத்துழைப்பதற்காக மனித உரிமைகள் பேரவைக்கு அரசாங்கம் அளித்த உத்தரவாதத்தையும், காணாமல்போனோர் அலுவலகம் மற்றும் இழப்பீடுகளுக்கான அலுவலகம் பற்றிய அவதானிப்புக்களையும் உயர்ஸ்தானிகர் பாராட்டினார்.
முடிவுறுத்துவதற்கான தேவைப்பாடு, நல்லிணக்க நடவடிக்கைகளுக்குப் போதுமான நிதியினை வழங்குதல், முந்தைய பயங்கரவாத தடுப்பு மசோதாவில் உள்ள குறைபாடுகள் மற்றும் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் சட்ட ஏற்பாடுகளில் தேவையான திருத்தங்களை முன்மொழியும் வகையில், அந்த சட்டத்தை மீளாய்வு செய்வதற்கான அரசாங்கத்தின் நோக்கம் உள்ளிட்ட பல பகுதிகள் குறித்து இலங்கைத் தூதுக்குழு தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டது.
கருத்துச் சுதந்திரம் மற்றும் வெறுக்கத்தக்க பேச்சுக்கும், சமூக ஊடகங்கள், தொழில்நுட்பம் மற்றும் மனித உரிமைகளினதும், சுற்றுச்சூழல் மற்றும் மனித உரிமைகளினதும் துஷ்பிரயோகம் ஆகியவற்றுக்கும் இடையிலான இடைமுகத்தைக் கையாள்வதில் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து அமைச்சர் மற்றும் தூதுக்குழுவினருடன் உயர்ஸ்தானிகர் கலந்துரையாடினார்.
இந்த சந்திப்பின் போது, பொது நிர்வாகம் மற்றும் உள்நாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் மஹிந்த சமரசிங்க, வெளிவிவகார செயலாளர் ரவினாத ஆரியசிங்க, ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் (ஓய்வு பெற்ற) அட்மிரல் ஜயநாத் கொலம்பகே, சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரல் நெரின் புல்லே மற்றும் ஜெனீவாவிலுள்ள ஐ.நா.விற்கான பதில் நிரந்தரப் பிரதிநிதி தயானி மெண்டிஸ் ஆகியோர் அமைச்சருடன் இணைந்திருந்தனர். வெளிநாட்டு உறவுகள் அமைச்சின் ஐ.நா. மற்றும் மனித உரிமைகள் பிரிவின் பணிப்பாளர் நாயகம் எம்.ஆர்.கே. லெனகல, சிரேஷ்ட அரச சட்டத்தரணி கனிஷ்க பாலபட்டபென்டி, பாதுகாப்பு அமைச்சின் பிரிகேடியர் இ.எஸ். ஜயசிங்க மற்றும் வெளிநாட்டு உறவுகள் அமைச்சரின் ஒருங்கிணைப்பு செயலாளர் சுபாஷ் ஸ்ரீ விஜேதுங்க ஆகியோரும் மனித உரிமைகள் பேரவையின் 43வது அமர்வுக்கான இலங்கைத் தூதுக்குழுவின் ஓர் பகுதியாக இடம்பெற்றிருந்தனர்.
இலங்கையின் நிரந்தரத் தூதரகம்
ஜெனீவா
28 பெப்ரவரி 2020