வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் பங்கேற்ற 2026 ஆம் ஆண்டிற்கான ரைசினா உரையாடல்

வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் பங்கேற்ற 2026 ஆம் ஆண்டிற்கான ரைசினா உரையாடல்

வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், இந்தியாவின் புதுடில்லியில் மார்ச் 5 முதல் 7 வரை நடைபெற்ற புவிசார் அரசியல் மற்றும் புவியியற் பொருளாதாரம் குறித்த முன்னணி உலகளாவிய மன்றங்களில் ஒன்றான ரைசினா உரையாடல் 2026 இல் பங்கேற்றார்.

இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்ஷங்கர் மற்றும் உலகம் முழுவதிலுமிருந்துமான பல வெளிநாட்டு அமைச்சர்கள் மற்றும் சிரேஷ்ட பிரதிநிதிகள் முன்னிலையில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, பின்லாந்து ஜனாதிபதி அலெக்சாண்டர் ஸ்டப் ஆகியோருடன் இணைந்து ரைசினா உரையாடலைத் தொடங்கி வைத்தார்.

உரையாடலின் ஒரு பகுதியாக, அமைச்சர் ஹேரத், மோல்டாவின் துணைப் பிரதமர் மற்றும் வெளிநாட்டு அலுவல்கள் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் இயன் போர்க்; கென்யாவின் முதன்மை அமைச்சரவைச் செயலாளர் மற்றும் வெளிநாட்டு மற்றும் புலம்பெயர் மக்கள் அலுவல்களுக்கான அமைச்சரவைச் செயலாளர் முசாலியா முடவாடி; ருவாண்டாவின் வெளிநாட்டு அலுவல்கள் மற்றும் சர்வதேச ஒத்துழைப்பிற்கான அமைச்சர் ஒலிவர் ஜே.பி. டுஹுங்கிரேஹே; மற்றும் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்ஷங்கர் ஆகியோருடன் இருதரப்பு சந்திப்புகளை நிகழ்த்தினார். இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது மற்றும் பரஸ்பர ஆர்வமுள்ள பிராந்திய மற்றும் உலகளாவிய முன்னேற்றங்கள் குறித்த கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வது குறித்து இக்கலந்துரையாடல்களில் கவனம் செலுத்தப்பட்டன.

இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் வளர்ந்து வரும் புவிசார் அரசியல் இயக்கவியல் மற்றும் ஒத்துழைப்பு குறித்த இலங்கையின் முன்னோக்குகளைப் பகிர்ந்து கொண்ட குழுக்கலந்துரையாடல்களிலும் அமைச்சர் ஹேரத் பங்கேற்றார். பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்சியை நோக்கி இலங்கையின் மாற்றம் குறித்த முன்னோக்குகளைப் பகிர்ந்து கொண்ட நேரடி காணொளி வடிவிலான கலந்துரையாடல் அமர்விலும் அவர் பங்கேற்றார்.

ரைசினா உரையாடலில் அமைச்சர் ஹேரத்தின் பங்கேற்பானது, இலங்கையின் இராஜதந்திர ஈடுபாட்டையும், முக்கிய பிராந்திய மற்றும் சர்வதேச பங்குதாரர்களுடனான கூட்டாண்மைகளையும் மேலும் வலுப்படுத்த முக்கியமான தளமொன்றை வழங்கியது.

வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு
மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு
கொழும்பு 01

 2026, மார்ச் 12

 

 

                                                                 

Please follow and like us:

Close