
வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு, உள்ளூர் மற்றும் சர்வதேச ஊடக நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 175க்கும் மேற்பட்ட அழைப்பாளர்களின் பங்கேற்புடன், கொழும்பில் உள்ள காலி முகத்திடல் ஹோட்டலில் 2026, பெப்ரவரி 20 அன்று பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகவியல் வல்லுநர்களுக்கான சுமுக ஊடக வலையமைப்பு ஒன்றுகூடல் நிகழ்வொன்றை நடத்தியது.
இலங்கையின் முக்கியமான தேசிய முன்னுரிமைகள் மற்றும் வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா ஆகிய துறைகளில் அமைச்சின் பணிகள் தொடர்பான செய்திகளை பறிமாற்றம் செய்வதில் ஊடகங்கள் வழங்கும் தொடர்ச்சியான ஒத்துழைப்பு மற்றும் தொழில்முறை ஆதரவை அங்கீகரித்து, பாராட்டுவதற்காக இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.
ஒன்று கூடல் நிகழ்வில் உரையாற்றிய வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் தலைமையில், "வளமான தேசம் அழகான வாழ்வு" என்ற கொள்கை கட்டமைப்பில் வெளிப்படுத்தப்பட்ட தேசிய தொலைநோக்கு பார்வையை முன்னேற்றுவதற்கான அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை எடுத்துரைத்தார். வெளிப்படையான பொதுத் தொடர்பு மற்றும் பொறுப்பான ஊடகங்கள் ஆற்றும் ஆக்கபூர்வமான வகிபாகத்தின் மூலம் நாட்டின் முன்னேற்றமும், உலகளாவிய நிலைப்பாடும் வலுப்படுத்தப்படுகின்றதென அமைச்சர் குறிப்பிட்டார்.
2025 ஆம் ஆண்டில் இலங்கை குறிப்பிடத்தக்க சாதனைகளைப் பதிவு செய்துள்ளது; இதில் சுற்றுலா வருகை 2.36 மில்லியனை எட்டியது; இது 3.2 பில்லியன் அமெரிக்க டொலர்களை ஈட்டியதுடன், புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பணம் அனுப்புதலானது 7.8 பில்லியன் அமெரிக்க டொலர்களைத் தாண்டியது. சுற்றுலா மற்றும் பணம் அனுப்புதல் ஆகியவற்றின் ஒருங்கிணைந்த வருவாய் அண்ணளவாக 11 பில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்ததுடன், இது அமைச்சின் இராஜதந்திர ஈடுபாடு, கொள்கைசார் முயற்சிகள் மற்றும் நிறுவன சீர்திருத்தங்களின் பங்களிப்பை பிரதிபலிக்கிறது.
இலங்கையின் சர்வதேச பிம்பத்தை வடிவமைப்பதிலும், துல்லியமானதும், சரியானதுமான நேரத்தில் அறிக்கையிடுவதன் மூலம் பொதுமக்களின் நம்பிக்கையை வலுப்படுத்துவதிலும் ஊடகங்கள் முக்கிய பங்காளியாக உள்ளன என்றும் அமைச்சர் வலியுறுத்தினார். எதிர்காலத்தை நோக்கி, வர்த்தகம், முதலீடு, சுற்றுலா மற்றும் புதாக்கம் ஆகியவற்றில் நாட்டின் ஆற்றலை வெளிப்படுத்த முக்கிய தளமொன்றாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படும் இலங்கை எக்ஸ்போ 2026 உட்பட எதிர்வரும் தேசிய முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதில் தொடர்ச்சியான ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை அமைச்சர் அடிக்கோடிட்டுக் காட்டினார்.
பத்திரிகையாளர்களை வரவேற்ற, வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி, வெளிப்படைத்தன்மை, அணுகல் மற்றும் சேவை வழங்கலை மேம்படுத்துவதற்காக, வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தூதரகங்களை இணைக்கும் ஒருங்கிணைந்த வலைத்தளம் உட்பட, ஒருங்கிணைந்த டிஜிட்டல் மற்றும் AI-இனால் இயக்கப்பட்ட தகவல் தொடர்பு கட்டமைப்பின் மூலம் பொது இராஜதந்திரம் மற்றும் டிஜிட்டல் இராஜதந்திரத்தை வலுப்படுத்துவதற்கான அமைச்சின் தொலைநோக்கை விளக்கினார்.
ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு, பிரதமரின் ஊடகப் பிரிவு, அரசாங்க தகவல் திணைக்களம் மற்றும் வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகளும் இச்சுமுக ஒன்றுகூடல் நிகழ்வில் பங்கேற்றனர்.
வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு
மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு
கொழும்பு
2026, பெப்ரவரி 20








