வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பீரிஸ் அமெரிக்கத் தூதுவர் சுங்குடன் சந்திப்பு

 வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பீரிஸ் அமெரிக்கத் தூதுவர் சுங்குடன் சந்திப்பு

அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங்கை 2022 மே 27, வெள்ளிக்கிழமை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் வைத்து சந்தித்த வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், இருதரப்பு உறவுகள், தற்போதைய உள்நாட்டு  அபிவிருத்திகள் மற்றும் நாடு எதிர்கொள்ளும் சவால்களைத் தணிப்பதற்கான சர்வதேச சமூகத்தின் உதவி ஆகியன குறித்து பரந்த அளவிலான கலந்துரையாடல்களில் ஈடுபட்டார்.

மக்கள் எதிர்நோக்கும் சிரமங்களைப் போக்குவதற்கும், தெளிவான செயற்றிட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கும் குறுகிய மற்றும் நீண்ட கால தீர்வுகளை வழங்குவதற்கு சாத்தியமான அனைத்து வழிகளையும் ஆராய்வதில் அரசாங்கம் கவனம் செலுத்துவதாக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் குறிப்பிட்டார். இந்தநிலையில், பலதரப்பு நிறுவனங்கள் உட்பட சர்வதேச சமூகத்திடம் இருந்து இலங்கை பெறப்படும் நல்லெண்ணம் மற்றும் உதவிகளை ஆழ்ந்து பாராட்டுவதாக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் பீரிஸ் சுட்டிக்காட்டினார். இலங்கையின் பொருளாதார  சவால்களைத் தணிப்பதற்காக இருதரப்பு மற்றும் பலதரப்பு வழிகள் மூலம் அமெரிக்கா மற்றும் ஏனைய நாடுகளின் தொடர்ச்சியான ஆதரவை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் ஊக்குவித்தார்.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பீரிஸ், நாட்டில் சட்டம் மற்றும் ஒழுங்கின் ஆட்சியை மேம்படுத்துவதற்கும் பேணுவதற்கும் அரசாங்கம் எடுத்து வரும் முயற்சிகள் குறித்தும், கருத்துச் சுதந்திரம் மற்றும் ஒன்றுகூடுதல் ஆகியவற்றுக்கான அனைவரினதும் உரிமைகளையும் மதிக்கும் முயற்சிகள் குறித்தும் அமெரிக்கத் தூதுவருக்கு விளக்கினார்.  அரசியலமைப்பின் 21வது திருத்தச் சட்ட வரைவு தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சிகளுடனான கலந்துரையாடல்கள் தொடர்பிலும் அவர் தூதுவருக்கு விளக்கமளித்தார். தற்போதைய பொருளாதார சவால்களுக்கு மத்தியிலும் நல்லிணக்கம் தொடர்பான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில் அரசாங்கம் முழுமையாக அர்ப்பணிப்புடன் இருப்பதாக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் தூதுவர் சுங்கிடம் உறுதியளித்தார்.

அமெரிக்கா இலங்கையின் நண்பன் என்றும் நாட்டில் உள்ள சவால்களை நன்கு உணர்ந்து புரிந்துகொள்வதாகவும்  தூதுவர் சுங் தெரிவித்தார். இந்த இக்கட்டான நேரத்தில் இலங்கைக்கு அமெரிக்கா தொடர்ந்தும் ஆதரவளிக்கும்  என அவர் குறிப்பிட்டார்.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு

கொழும்பு

2022 மே 29

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close