ஈரான் இஸ்லாமியக் குடியரசின் வெளிநாட்டு அமைச்சர் கலாநிதி ஹொசைன் அமீர் அப்துல்லாஹியானின் அழைப்பின் பேரில், இலங்கையின் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் எம்.யு.எம். அலி சப்ரி 2023 ஆகஸ்ட் 04 முதல் 07 வரை ஈரான் இஸ்லாமியக் குடியரசிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்தார்.
இந்த விஜயத்தின் போது, அமைச்சர் அலி சப்ரி ஈரான் இஸ்லாமியக் குடியரசின் ஜனாதிபதி கலாநிதி இப்ராஹிம் ரைசியை மரியாதை நிமித்தம் சந்தித்ததுடன், வெளிநாட்டு அமைச்சர் அமீர் அப்துல்லாஹியான் மற்றும் மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி மொஹமட் ரெஸா ஃபார்சின் ஆகியோருடன் இருதரப்பு சந்திப்புக்களில் ஈடுபட்டார்.
ஜனாதிபதி ரைசி உடனான சந்திப்பில், சிறந்த இருதரப்பு உறவுகளைப் பாராட்டிய வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி, அபிவிருத்தித் திட்டங்களுக்காக இலங்கைக்கு வழங்கப்பட்ட உதவிகளுக்கு இலங்கையின் பாராட்டுகளைத் தெரிவித்ததுடன், சர்வதேச நாணய நிதியத்தின் தலைமையிலான கடன் மறுசீரமைப்பு செயன்முறையில் இலங்கை அரசாங்கம் முன்னெடுத்து வரும் நடவடிக்கைகளை சுட்டிக் காட்டினார். ஈரான் இஸ்லாமியக் குடியரசு குறிப்பாக விஞ்ஞானம் மற்றும் தொழிநுட்பம் போன்ற பல்வேறு துறைகளில் அடைந்துள்ள முன்னேற்றம் குறித்து குறிப்பிடுகையில், இலங்கை போன்ற நட்பு நாடுகளுடன் திறன்களை பகிர்ந்து கொள்வதற்கு ஜனாதிபதி ரைசி முன்வந்தார்.
இருதரப்பு ஒத்துழைப்பு மற்றும் ஏனைய பரஸ்பர முக்கியத்துவம் வாய்ந்த பிராந்திய மற்றும் உலகளாவிய சவால்கள் குறித்து விரிவான கலந்துரையாடல்களில் அமைச்சர் அலி சப்ரி மற்றும் அமைச்சர் கலாநிதி அமீர் அப்துல்லாஹியான் ஆகியோர் ஈடுபட்டனர். செயன்முறையை எளிதாக்கும் வகையில், பொருளாதாரக் கூட்டாண்மைத் திட்டங்கள் மற்றும் ஒப்பந்தங்களில் நுழைவதற்கான அவர்களின் விருப்பம் உட்பட, நெருங்கிய மற்றும் சுமூகமான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தி விரிவுபடுத்த வேண்டியதன் அவசியத்தை அமைச்சர்கள் வலியுறுத்தினர். இலங்கைக்கு இருதரப்பு மற்றும் சர்வதேச அரங்குகளில் அளித்து வரும் ஆதரவுக்கு அமைச்சர் கலாநிதி அமீர் அப்துல்லாஹியானுக்கு நன்றி தெரிவித்த அமைச்சர் அலி சப்ரி, 'அனைவருக்கும் நண்பர் மற்றும் எவருக்கும் எதிரி அல்ல' என்ற வகையில் இலங்கை தனது வெளியுறவுக் கொள்கையை பேணி வருவதாகக் குறிப்பிட்டார்.
இந்து சமுத்திர விளிம்பு சங்கத்தின் தலைமைப் பொறுப்பை இலங்கை ஏற்றுக்கொண்டதுடன், இந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் நடைபெற்ற குழுவின் அமைச்சர்கள் கூட்டம் குறித்தும் குறிப்பிடப்பட்டது.
இந்த விஜயத்தின் போது, மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி மொஹமட் ரீஸா ஃபர்சினுடனான சந்திப்பின் போது, இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்துவது குறித்தும், அதற்கான வழிமுறைகள் குறித்தும் அமைச்சர் அலி சப்ரி கலந்துரையாடினார். சர்வதேச நாணய நிதியத்தின் தலைமையிலான கடன் மறுசீரமைப்பு செயன்முறைக்கு சம்மதம் தெரிவித்ததற்காக ஈரான் இஸ்லாமியக் குடியரசின் அரசாங்கத்திற்கு இலங்கையின் பாராட்டுக்களை அமைச்சர் தெரிவித்தார்.
உமா ஓயா பல்நோக்குத் திட்டம் மற்றும் கிராமப்புற மின்மயமாக்கல் திட்டத்திற்கான உதவிகளை அவர் பாராட்டினார். இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினூடாக எண்ணெய்யைக் கொள்வனவு செய்தல் மற்றும் சிலோன் தேயிலையை விநியோகித்தல் தொடர்பான தீர்வு நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளதாக அமைச்சர் அலி சப்ரி ஆளுநரிடம் தெரிவித்தார்.
அமைச்சர் அலி சப்ரி தலைமையிலான இலங்கைக் குழுவில் ஈரானுக்கான இலங்கைத் தூதுவர் விஸ்வநாத் அப்போன்சோ, வெளிவிவகாரத் திணைக்களத்தின் பணிப்பாளர் சமந்த பண்டார மற்றும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் பிரதிப் பணிப்பாளர் மொஹமட் ரிஸ்வி ஆகியோர் உள்ளடங்குவர்.
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு,
கொழும்பு
2023 ஆகஸ்ட் 10