அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளுடனான ப்ரிக்ஸ் வெளியுறவு அமைச்சுக்களுக்கான அமர்வு- 2024 இல், பங்கேற்பதற்காக தற்போது ரஷ்யா சென்றுள்ள வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் அலிசப்ரி நேற்று (10) ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் ஸெர்கேய் லவ்ரோவ்வுடன் இருதரப்பு சந்திப்பை மேற்கொண்டார்.
இந்த சந்திப்பின் போது, சுற்றுலா, உயர்கல்வி மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு உள்ளிட்ட துறைகளில் இருதரப்பு உறவுகளை மேலும் மேம்படுத்த இரு வெளியுறவு அமைச்சர்களும் ஒப்புக்கொண்டனர்.
அமைச்சர் சப்ரி, இச்சந்திப்பின் போது,ரஷ்ய இராணுவத்தில் இணைந்துள்ள இலங்கை பிரஜைகளின் பிரச்சினை குறித்து ரஷ்ய பிரதமரின் கவனத்திற்கு கொண்டுவந்ததுடன், அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான உதவியை வழங்குமாறு வேண்டுகோள் விடுத்தார்.
இது தொடர்பில், வெளிநாட்டலுவல்களுக்கான இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய தலைமையிலான இலங்கை உயர்மட்டக் குழுவிற்கும், ரஷ்ய கூட்டமைப்பின் பாதுகாப்பு பிரதி அமைச்சருக்கும் இடையில் எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு, ஜூன் 26 - 27 ஆம் திகதிகளில் நடைபெறவிருக்கும் சந்திப்பின்போது, இப்பிரச்சினை மீளாய்வு செய்யப்பட்டு, நிலைமையைக் கட்டுப்படுத்த தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இணக்கம் தெரிவிக்கப்பட்டது.
அமைச்சர் அலிசப்ரியின் வேண்டுகோளுக்கு இணங்க, இலங்கையில் இருந்து மேலும் ஆட்சேர்ப்பு செய்யப்பட மாட்டாது என்றும் ஒப்புக்கொள்ளப்பட்டது.
இலங்கை தூதரகம்
மொஸ்கோ
2024 ஜூன் 11