ஜனநாயகப் பாரம்பரியங்கள் மற்றும் வரலாற்று உறவுகளின் மீது தாபிக்கப்பட்டு, இலங்கை மற்றும் ஐக்கிய இராச்சியம் அனுபவித்த 'தனித்துவமான, பன்முகத்தன்மையுடைய பங்காளித்துவத்தை' வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் சிறப்பித்துக் காட்டினார். பிரித்தானியாவின் தெற்காசியா, ஐக்கிய நாடுகள் மற்றும் பொதுநலவாய இராஜாங்க அமைச்சரான விம்பிள்டன் பிரபு தாரிக் அஹ்மத்துடன் வெளிநாட்டு அமைச்சில் ஜனவரி 18ஆந் திகதி, செவ்வாய்கிழமை இடம்பெற்ற சந்திப்பில் அமைச்சர் இதனைத் தெரிவித்தார். உணர்வுகளை மறுபரிசீலனை செய்த அஹ்மத் பிரபு, ஒத்துழைப்பிற்கான உத்வேகத்தை வழங்கும் கூட்டாண்மையின் நிலையான தன்மையை ஒப்புக்கொண்டார்.
'உலகளாவிய பிரிட்டன்' என்ற ஐக்கிய இராச்சியத்தின் நோக்கின் பின்னணியில் இருதரப்பு உறவுகளை ஆழப்படுத்துவதற்கான வாய்ப்பை ஒப்புக்கொண்ட இரு தரப்பினரும், அரசியல் உறவுகள், வர்த்தகம், முதலீடு மற்றும் சுற்றுலா, இந்து சமுத்திரத்திலான ஒத்துழைப்பு, பாதுகாப்பு மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு, காலநிலை மாற்றம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, கல்வி மற்றும் ஸ்டெம் மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கம் ஆகியவற்றில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதில் ஆர்வத்தை வெளிப்படுத்தினர். பரஸ்பர நலன் சார்ந்த விடயங்கள் குறித்து 2021 அக்டோபரில் லண்டனில் இடம்பெற்ற பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் எலிசபெத் ட்ரஸுடனான தனது இருதரப்புச் சந்திப்பை அமைச்சர் பீரிஸ் நினைவு கூர்ந்தார்.
இரண்டு வெளிநாட்டு அமைச்சுகளுக்குமிடையே உத்தியோகபூர்வ அளவிலான ஆலோசனைகளைத் தொடங்குவதன் முக்கியத்துவத்தை இரு தரப்பினரும் சுட்டிக் காட்டினர். மக்களுக்கு இடையிலான தொடர்புகளின் வலிமையைக் கருத்தில் கொண்டு, தற்போதைய கூட்டாண்மைக்கு ஏற்ற வகையில் இலங்கையின் 75வது சுதந்திர தினத்தை நினைவுகூரும் வகையிலான கலந்துரையாடல்களும் இதன்போது மையப்படுத்தப்பட்டன.
நல்லிணக்கம் மற்றும் மனித உரிமைகளைப் பாதுகாத்தல் மற்றும் ஊக்குவித்தல், சுயாதீன ஆணைக்குழுக்களின் செயற்பாடுகள், பயங்கரவாதத் தடைச் சட்டம் மற்றும் அதன் சீர்திருத்தச் செயற்பாடுகள் மற்றும் நிலையான அபிவிருத்தி இலக்கு சபை மற்றும் பொது நிறுவனங்கள் மற்றும் நிர்வாகத்தை வலுப்படுத்துவதில் நிலையான அபிவிருத்தி இலக்கு 16 க்கான வழிநடத்தல் குழுவின் செயற்பாடுகள் ஆகியவற்றில் முன்மொழியப்பட்ட திருத்தங்களை வெளிநாட்டு அமைச்சர் பீரிஸ் அஹ்மத் பிரபுவிடம் விளக்கினார். அனைத்தையும் உள்ளடங்கிய வகையில், உள்நாட்டில் வடிவமைக்கப்பட்டு, நிறைவேற்றப்பட்ட நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் செயன்முறை மற்றும் மனித உரிமைகள் பேரவை உட்பட ஐ.நா. அமைப்புடனான தொடர்ச்சியான ஆக்கப்பூர்வமான ஈடுபாடு ஆகியவற்றுக்கான அரசாங்கத்தின் அர்ப்பணிப்பை அமைச்சர் பீரிஸ் மீண்டும் வலியுறுத்தினார்.
ஐக்கிய இராச்சியத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளை ஒரு பயங்கரவாத அமைப்பாக தடை செய்தமை உட்பட, பயங்கரவாத எதிர்ப்புத் துறையில் வழங்கப்பட்ட ஆதரவிற்காக அரசாங்கத்தின் ஆழ்ந்த பாராட்டுக்களை வெளிநாட்டு அமைச்சர் தெரிவித்தார்.
ஐக்கிய இராச்சியத்தில் உள்ள பிரித்தானிய இலங்கை புலம்பெயர் சமூகத்தினர் ஐக்கிய இராச்சியத்தின் செழுமைக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குகின்ற தனித்துவமானதொரு சொத்தாவர் என இரு தரப்பினரும் அங்கீகரித்தனர். இது தொடர்பில், இலங்கையின் அபிவிருத்திக்கு சாதகமான பங்களிப்பை வழங்கும் ஐக்கியமானதொரு பொறிமுறையை உருவாக்குவதற்காக புலம்பெயர் உறவுகளை உள்ளடக்கிய அணுகுமுறையைப் பேண வேண்டியதன் அவசியத்தை வெளிநாட்டு அமைச்சர் எடுத்துக்காட்டினார்.
நவம்பர் 2021 இல் கிளாஸ்கோவில் ஐ.நா. காலநிலை மாற்ற மாநாட்டை (சி.ஓ.பி. 26) வெற்றிகரமாக நடாத்தியமைக்காக ஐக்கிய இராச்சியத்திற்கு வெளிநாட்டு அமைச்சர் இலங்கையின் வாழ்த்துக்களைத் தெரிவித்தார். இலங்கையின் சி.ஓ.பி. 26 சார்ந்த அர்ப்பணிப்புக்களைப் பாராட்டிய பிரித்தானிய அமைச்சர், பின்தொடர்தல் நடவடிக்கைகள் மற்றும் பசுமை ஆற்றல் முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதிலான தமது ஆர்வத்தை வெளிப்படுத்தினார். கொழும்பு மாநகரப் பகுதிக்குள் உயிரியல் பன்முகத்தன்மை கொண்ட ஈரநிலமான பெல்லன்வில-அத்திடிய சரணாலயத்தையும் பார்வையிட்ட அவர், கும்புக் (டெர்மினாலியா அர்ஜுனா) செடியை அங்கு நட்டு வைத்தார்.
உலக வர்த்தகத்தில் இந்து சமுத்திரத்தின் முக்கியத்துவத்தை ஒப்புக்கொண்டு, கூட்டாண்மையின் பொருளாதாரப் பரிமாணத்தில் குறிப்பிடத்தக்க கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தை இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டனர். இலங்கை - ஐக்கிய இராச்சிய வர்த்தக சம்மேளனம் லண்டனில் அண்மையில் ஆரம்பிக்கப்பட்டதை வரவேற்ற இரு தரப்பினரும், இன்னும் வலுவான வர்த்தக - வணிக இணைப்புக்களை ஊக்குவித்தனர்.
பொதுநலவாயத்துடனான உறவுகளை புதிதாக நோக்குவதற்காகக் கிடைத்த வாய்ப்பை ஒப்புக்கொண்ட இரு தரப்பினரும், கிகாலி, ருவாண்டாவில் இடமப்பெறவுள்ள பொதுநலவாய அரச தரைவர்கள் மாநாடு மற்றும் பர்மிங்ஹமில் 2022 இல் நடைபெறவுள்ள பொதுநலவாய விளையாட்டுப் போட்டி ஆகியவற்றில் பங்கேற்பதற்கு எதிர்பார்த்தனர்.
இருதரப்பு ஒத்துழைப்பின் ஒரு முக்கிய மைல்கல்லான இலங்கைக்கும் ஐக்கிய இராச்சியத்திற்கும் இடையிலான சுகாதாரப் பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் வெளிநாட்டு அமைச்சில் கைச்சாத்திடப்பட்டது. பிரித்தானியாவில் இலங்கைத் தாதிகள் மற்றும் ஏனைய சுகாதார சேவையாளர்களுக்கு வேலை வாய்ப்புக்களை வழங்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு மற்றும் சந்தை பல்வகைப்படுத்தல் இராஜாங்க அமைச்சர் பியங்கர ஜயரத்ன மற்றும் சுகாதார அமைச்சின் செயலாளர் வைத்தியர் எஸ்.எச். முனசிங்க ஆகியோர் இலங்கை அரசாங்கத்தின் சார்பாகவும், அஹ்மத் பிரபு ஐக்கிய இராச்சிய அரசாங்கத்தின் சார்பாகவும் கைச்சாத்திட்டனர்.
பிராந்திய ஒத்துழைப்புக்கான இராஜாங்க அமைச்சர் தாரக்க பாலசூரிய, வெளியுறவுச் செயலாளர் அட்மிரல் (பேராசிரியர்) ஜயநாத் கொலம்பகே மற்றும் வெளிநாட்டு அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர். அஹ்மத் பிரபுவுடன் இணைந்து இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சாரா ஹல்டன் மற்றும் உயர்ஸ்தானிகராலயத்தின் அதிகாரிகளும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.
மூன்று நாள் பயணம் மேற்கொண்டு பிரித்தானிய அமைச்சர் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார். இதற்கு முன்பு 2019 அக்டோபரில் அவர் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளதுடன், இது அவரது இலங்கைக்கான இரண்டாவது விஜயமாகும். இந்த விஜயத்தின் போது, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்திக்கவுள்ள அஹ்மத் பிரபு, நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோரையும் சந்திக்கவுள்ளார். வர்த்தக சமூகத்தை சந்தித்த பிரித்தானிய அமைச்சர், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கும் விஜயம் செய்யவுள்ளதுடன், அங்கு அவர் வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் ஆகியோரையும் சந்திக்கவுள்ளார்.
வெளிநாட்டு அமைச்சு
கொழும்பு
2022 ஜனவரி 19