கனேடிய உயர்ஸ்தானிகர் மாண்புமிகு டேவிட் மெக்கினனை வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் அக்டோபர் 08ஆந் திகதி வெளிநாட்டு அமைச்சில் வைத்து சந்தித்தார். இந்த சந்திப்பின் போது இருதரப்பு ஒத்துழைப்பின் பல பகுதிகள் குறித்து கலந்துரையாடப்பட்டன. ஜெனீவா மற்றும் நியூயோர்க்கிலான இலங்கையின் அண்மைய பல்தரப்பு ஈடுபாடுகள் குறித்தும் உயர்ஸ்தானிகருக்கு அமைச்சர் விளக்கினார்.
இலங்கையின் தடுப்பூசி செயற்றிட்டம் மற்றும் படிப்படியாக நாட்டை மீளத் திறத்தல் தொடர்பான முன்னேற்றம் குறித்து உயர்ஸ்தானிகருக்கு புதுப்பிக்கப்பட்ட தகவல்களை அமைச்சர் வழங்கினார். தொற்றுநோயிலிருந்து இலங்கையை மீட்டெடுக்கும் செயன்முறையில் கனடாவின் பங்களிப்பை அமைச்சர் பாராட்டினார். சாத்தியமான அனைத்து வழிகளிலிருந்தும் தடுப்பூசிகளைப் பெற்றுக் கொள்வதற்கு இலங்கை தொடர்ந்தும் எதிர்பார்ப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.
கனடாவில் கோவிட்டுக்குப் பிந்தைய மீட்பு நடைமுறை, இலங்கை மற்றும் கனடாவிற்கு இடையேயான பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர நலன் சார்ந்த ஏனைய விடயங்கள் குறித்து உயர்ஸ்தானிகர் அமைச்சருக்கு விளக்கினார்.
இலங்கையில் கடந்த கால மோதல்கள் தொடர்பாக இனப்படுகொலை சார்ந்த குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொள்ளாத இலங்கையின் ஆட்சேபனை நிலைப்பாடு உட்பட, ஒன்ராறியோ சட்டமன்றத்தில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் நிறைவேற்றப்பட்ட தனியார் உறுப்பினர்கள் பொது மசோதா குறித்த இலங்கையின் வலுவான கவலையை அமைச்சர் மீண்டும் வலியுறுத்தினார். இந்த சட்டம் ஒன்ராறியோ மேல் நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்தப்படுவதாக அமைச்சர் குறிப்பிட்டார். ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் அவர் ஆற்றிய உரையில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, பல தசாப்த கால பயங்கரவாத மோதலைத் தொடர்ந்து சமூகங்களுக்கிடையே நல்லிணக்கத்தை அடைந்து கொள்வதற்கான முயற்சிகளை இலங்கை தொடர்வதாக அவர் மேலும் தெரிவித்தார். விடுதலைப் புலிகள் கனடாவில் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பினராவர் என்பதையும் அமைச்சர் நினைவு கூர்ந்தார்.
ஒன்ராறியோ சட்டமன்றத்தின் தீர்மானமான இந்த விடயம் அரசியலமைப்பு சார்ந்த கேள்வி என்ற வகையில் நீதித்துறையின் செயற்பாட்டில் உள்ளதாக உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டார். அதன் முன்னேற்றங்கள் குறித்து அமைச்சருக்குத் தெரிவிப்பதற்கு அவர் ஒப்புக்கொண்டார்.
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் தான் ஆற்றிய உரை, மனித உரிமைகள் தொடர்பான விடயங்கள் மற்றும் உள்நாட்டில் முன்னெடுக்கப்பட்டுள்ள அது சார்ந்த சமீபத்திய நடவடிக்கைகள் குறித்த புதுப்பிக்கப்பட்ட தகவல்களை உயர்ஸ்தானிகருக்கு அமைச்சர் வழங்கினார். குறித்த புதுப்பிக்கப்பட்ட தகவல்களுக்காக தனது நன்றிகளைத் தெரிவித்த உயர்ஸ்தானிகர், பேரவையினால் குறிப்பிடப்பட்ட விடயங்களில் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு இலங்கையை ஊக்குவித்தார்.
வெளிநாட்டு அமைச்சு,
கொழும்பு
2021 அக்டோபர் 08