இலங்கைக்கான தனது உத்தியோகபூர்வ விஜயத்தின் போது அவுஸ்திரேலிய உள்விவகார அமைச்சர் கரேன் அன்ட்ரூஸ் 2021 டிசம்பர் 20ஆந் திகதி வெளிநாட்டு அமைச்சில் வைத்து வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸைச் சந்தித்து, பரந்த அளவிலான துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான வழிகள் குறித்து கலந்துரையாடினார்.
இலங்கையிலும் பிராந்தியத்திலும் ஆட்கடத்தல் மற்றும் நாடுகடந்த குற்றங்களை தடுப்பதில் அவுஸ்திரேலியாவின் குறிப்பிடத்தக்க ஈடுபாடு குறித்து வெளிநாட்டு அமைச்சர் தனது திருப்தியை வெளியிட்டார். அவுஸ்திரேலியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான துடிப்பான பங்காளித்துவமானது, ஆட்கடத்தல் மற்றும் எல்லைப் பாதுகாப்பு விடயங்களில் இரு நாடுகளுக்கும் இடையிலான மிகவும் பயனுள்ள மற்றும் வெற்றிகரமான ஒத்துழைப்பை எடுத்துக்காட்டுவதாக அமைச்சர் மீண்டும் வலியுறுத்தினார்.
2009 இல் உள்நாட்டு ஆயுத மோதல்கள் முடிவடைந்த பின்னரும் எஞ்சியிருக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காக, பயங்கரவாதத் தடைச் சட்டம் உட்பட கொள்கைகள் மற்றும் சட்டங்களின் தொடர்ச்சியான மீளாய்வு தொடர்பிலும் அமைச்சர் பீரிஸ் விஜயம் செய்த அமைச்சருக்கு விளக்கமளித்தார். காணாமல் போனோர் அலுவலகம், இழப்பீடுகளுக்கான அலுவலகம், தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அலுவலகம், நிலையான அபிவிருத்தி இலக்கு 16 பேரவை மற்றும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு என்பன அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில் அடங்கும்.
அமைச்சர் அன்ட்ரூஸின் விஜயத்தின் போது, குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தில் அமைந்துள்ள இலங்கை எல்லை இடர் மதிப்பீட்டு நிலையமானது குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தில் அமைச்சர் சமல் ராஜபக்ஷவுடன் இணைந்து வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது. முன்னதாக, இலங்கைக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையில் உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சில் இரு அமைச்சர்களும் இலங்கைக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையில் ஆட்களைத் திருப்புதல் மற்றும் மீளப்பெறுதல் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்திலும் கைச்சாத்திட்டனர்.
தொழிற்கல்வியில் அவுஸ்திரேலியாவின் அனுபவத்தை குறிப்பிட்ட வெளிநாட்டு அமைச்சர் பீரிஸ், இலங்கையின் தொழிற்கல்வித் துறையை வலுப்படுத்துவதற்காக அவுஸ்திரேலியாவின் தொழில்நுட்ப உதவியை நாடினார்.
அவுஸ்திரேலியாவின் உற்பத்திகளை இலங்கை ஊடாக ஏனைய சந்தைகளுக்கு கொண்டு செல்வதற்காக, இலங்கையின் பொருளாதாரத்திற்கு பாரிய நன்மை பயக்கும் இலங்கையில் உத்தேச பரிமாற்றல் மையம் ஒன்றை நிறுவுவதற்கான ஆர்வத்தை அமைச்சர் வெளிப்படுத்தினார்.
மேலும், ஆட்கடத்தல் மற்றும் ஏனைய நாடுகடந்த குற்றங்கள் தொடர்பான கூட்டுச் செயற்குழுவின் அடுத்த அமர்வை எதிர்வரும் மாதங்களில் இலங்கையில் நடாத்துவதற்கும் இரு அமைச்சர்களும் ஒப்புக்கொண்டதுடன், இலங்கைக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையிலான நல்லுறவை மேலும் மேம்படுத்துவதற்கு நெருக்கமாக இணைந்து செயற்படுவதற்கும் இணக்கம் தெரிவித்தனர்.
இரு நாடுகளுக்குமிடையிலான இராஜதந்திர உறவுகள் ஸ்தாபிக்கப்பட்டதன் 75ஆவது ஆண்டு நிறைவை அடுத்த ஆண்டு, அதாவது 2022ஆம் ஆண்டு பொருத்தமான முறையில் கொண்டாட வேண்டியதன் அவசியத்தை அமைச்சர் அன்ட்ரூஸ் மற்றும் அமைச்சர் பீரிஸ் ஆகியோர் ஏற்றுக்கொண்டனர்.
வெளிநாட்டு அமைச்சு,
கொழும்பு
2021 டிசம்பர் 21