2022ஆம் ஆண்டில் இலங்கை மற்றும் லக்சம்பர்க்குக்கு இடையே இராஜதந்திர உறவுகளை ஸ்தாபித்த 50 ஆண்டுகால நிகழ்வுகளை கொண்டவுள்ள வேளையில், இரு நாடுகளுக்குமிடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்தியும், விரிவுபடுத்தியும் புதியதொரு விஸ்தீரனத்துக்கு எடுத்துச் செல்ல வெளிநாட்டு அமைச்சர் தினேஷ் குணவர்தன மற்றும் லக்சம்பர்க் வெளிநாட்டு அமைச்சர் ஜீன் அசல்போர்ன் ஆகியோர் ஒப்புக் கொண்டனர்.
2020 ஜனவரியில் லக்சம்பர்க் வெளிநாட்டு அமைச்சர் அசெல்போர்ன் அவர்களின் இலங்கைக்கான முதலாவது உத்தியோகபூர்வ வருகையைத் தொடர்ந்து, இரு அமைச்சர்களுக்குமிடையே நேற்று (2021 ஜூலை 09, வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற வீடியோ உரையாடலின் போது இந்தப் புரிந்துணர்வு எட்டப்பட்டது. மைல்கல்லான இந்த 50 ஆண்டு நிறைவு நிகழ்வுகளை பொருத்தமான முறையில் இரு நாடுகளிலும் அடுத்த வருடம் கொண்டாடுவதற்கு இரு அமைச்சர்களும் ஒப்புக்கொண்டனர்.
தமது நல்லுறவு ரீதியான கலந்துரையாடலின் போது இரு அமைச்சர்களும் இருதரப்பு உறவுகளை மீயாய்வு செய்ததோடு, நிலையான மற்றும் பசுமைப் பிணை நிதியளிப்பு, வர்த்தகம் மற்றும் முதலீடு, விமான இணைப்பு, வேலைவாய்ப்பு மற்றும் கல்வி ஆகியவற்றில் கவனம் செலுத்துவதன் மூலம் குறிப்பாக நிதித்துறையில் மேம்பட்ட பொருளாதார ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டினர்.
பரஸ்பரம் ஆர்வமுள்ள ஏனைய விடயங்களுக்கிடையில், நல்லிணக்கத்தில் இலங்கையின் முன்னேற்றம், கோவிட்-19 தடுப்பூசிகளை கொள்வனவு செய்வதற்கான சர்வதேச உதவி மற்றும் பலதரப்பட்ட நிறுவனங்களுடனான ஒத்துழைப்பு ஆகியன குறித்து அமைச்சர் குணவர்தன தனது லக்சம்பர்க் பிரதிநிதிக்கு விளக்கினார்.
வெளிநாட்டு அமைச்சு
கொழும்பு
2021 ஜூலை 10