கொழும்பில் உள்ள இராஜதந்திரத் தூதரகங்களின் தலைவர்கள், அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசாங்கத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் வணிகத் துறையின் பிரதிநிதிகள் கலந்துகொண்ட கிறிஸ்மஸ் விருந்துபசாரத்தை வெளிநாட்டு அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் 2021 டிசம்பர் 12ஆந் திகதி கொழும்பு ஹில்டனில் ஏற்பாடு செய்தார். இந்நிகழ்வில் பிரதம அதிதிகளாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஷிரந்தி ராஜபக்ஷ ஆகியோர் கலந்துகொண்டனர்.
கிறிஸ்மஸ் என்பது எமது உறவுகள், நட்புக்கள் மற்றும் சாதனைகளைக் கொண்டாடும் தருணமாகும். ஆகவே, கடந்த ஆண்டை திரும்பிப் பார்ப்பதற்கும், நாம் எதைச் சரியாகச் செய்தோம் என்பதை மதிப்பிடுவதற்கும், மிக முக்கியமாக எதைச் சிறப்பாகச் செய்திருக்க முடியும் என்பதை மதிப்பிடுவதற்கும் இது ஒரு சிறந்த தருணமாகும் என அமைச்சர் பீரிஸ் தனது வரவேற்பு உரையில் குறிப்பிட்டார். 'முடிவடைந்துள்ள ஆண்டு இலங்கைக்கு மிகவும் சவாலான காலமாகும். கோவிட்-19 ஆனது எமது நாட்டில் தேசிய வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்தையும் கிட்டத்தட்ட சீர்குலைத்துள்ளது, எனினும் தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதிலும் எதிர்த்துப் போராடுவதிலும் இலங்கை அடைந்துள்ள வெற்றிக்கான உலகளாவிய அங்கீகாரம் உள்ளது' என வெளிநாட்டு அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
அதிதிகளுக்கு மத்தியில் உரையாற்றிய பிராந்திய ஒத்துழைப்புக்கான இராஜாங்க அமைச்சர் தாரக்க பாலசூரிய, காலநிலை மாற்றத்துடன் தற்போது மிக முக்கியமானது பொருளாதார இராஜதந்திரமாகும் எனக் குறிப்பிட்டார். இலங்கையின் வடிவமைப்பாளர்கள் மற்றும் கலைஞர்கள் தமது கலைகள் மற்றும் கைவினைப்பொருட்களை வரவேற்பறையில் காட்சிப்படுத்துவதற்கும் இராஜாங்க அமைச்சர் பாலசூரிய ஏற்பாடு செய்திருந்தார். இந் நிகழ்வில் எரிக் சூரியசேன பட்டிக்ஸ், புத்தி பட்டிக், ஐல் ஒஃப் ரட்டா மற்றும் ஏர்பன் ஐலண்ட் ஆகியன கண்காட்சியாளர்களாகப் பங்கேற்றதுடன், கலைக் கண்காட்சியை அசரா ஜலீல் தொகுத்து வழங்கினார்.
தேயிலை சபை, தேசிய கைவினைப் பேரவை, சுவையூட்டிகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய உற்பத்திப்பொருள் சந்தைப்படுத்தல் சபை, பட்டிக் இராஜாங்க அமைச்சு, பனை அபிவிருத்தி சபை, ஐல் ஒஃப் ரட்டா, புத்தி பட்டிக் மற்றும் 1948 கடை ஆகியன இந்நிகழ்விற்கு ஆதரவளித்தன.
வெளிநாட்டு அமைச்சு,
கொழும்பு
2021 டிசம்பர் 14