வெளிநாட்டு அமைச்சருடன் நோர்வே தூதுவர் மரியாதை நிமித்தம் சந்திப்பு

வெளிநாட்டு அமைச்சருடன் நோர்வே தூதுவர் மரியாதை நிமித்தம் சந்திப்பு

இலங்கைக்கான நோர்வே இராச்சியத்தின் தூதுவர் ட்ரெய்ன் ஜொரான்லி எஸ்கெடல் வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸை 2021 ஆகஸ்ட் 30, திங்கட்கிழமை வெளிநாட்டு அமைச்சில் வைத்து மரியாதை நிமித்தம் சந்தித்தார்.

இந்தக் கலந்துரையாடலின் போது, இலங்கைக்கும் நோர்வேக்கும் இடையிலான பரஸ்பரம் நன்மை பயக்கும் கூட்டாண்மையைப் பாராட்டிய வெளிநாட்டு அமைச்சர் பீரிஸ், ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர நலன் ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான நாட்டின் ஆர்வத்தை மீண்டும் வலியுறுத்தினார்.

ஒத்துழைப்பால் இலங்கை தொடர்ந்தும் பயனடையக்கூடிய நோர்வே அபிவிருத்தி ஒத்துழைப்பு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தியிலான முதலீடு, நோர்வே தொழில்நுட்ப நிபுணத்துவம் மற்றும் மீன்வளத் துறையிலான ஒத்துழைப்பு ஆகியவற்றை வலியுறுத்தி இருதரப்பு ஆர்வமுள்ள பகுதிகளை தூதுவர் எஸ்கெடல் விரிவாக விவரித்தார். புதுப்பிக்கத்தக்க ஆற்றலில் நோர்வேயுடன் முதலீட்டுக் கூட்டாண்மைக்கான சாத்தியத்தை அவர் குறிப்பிட்டார்.

இலங்கை - நோர்வே கூட்டாண்மையின் மைல்க்கல்லாக மீன்வளத்துறையில் வலுவான ஒத்துழைப்பை தூதுவர் எடுத்துரைத்தார். கடல் வளங்களில் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி ஒத்துழைப்பு மற்றும் கடல் மூலோபாயத்தின் அபிவிருத்திக்கு ஆதரவளிப்பது குறித்தும் இதன் போது குறிப்பிடப்பட்டது.

புதுப்பிக்கத்தக்க எரிசக்திக் கலவைக்கு மாற்றுவது உட்பட நிலையான அபிவிருத்திக்கான 2030 நிகழ்ச்சி நிரல் சார்ந்த இலங்கையின் அர்ப்பணிப்பை மீண்டும் வலியுறுத்திய அமைச்சர் பீரிஸ், ஆற்றல் சார்ந்த பரப்பில் நோர்வேயுடனான தொழில்நுட்ப ஒத்துழைப்பை வரவேற்றார்.

நீர்வள ஆராய்ச்சி மற்றும் நீலப் பொருளாதாரம் மற்றும் இலங்கையின் பங்குச் சந்தையில் மதிப்புமிக்க நோர்வே ஓய்வூதிய நிதியத்தின் முதலீடு ஆகியவற்றில் நோர்வேயின் விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பை அமைச்சர் வரவேற்றார். தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம், சுற்றுலா, கல்வித் தொழில்நுட்பம், இரத்தினம் மற்றும் ஆபரணத் துறையிலான பெறுமதி சேர்ப்பு ஆகியவற்றில் ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

இலங்கையின் பிராந்திய மற்றும் பலதரப்பு ஈடுபாடு குறித்து வெளிநாட்டு அமைச்சர் தூதுவருக்கு விளக்கினார். இந்த சந்திப்பில் வெளிநாட்டு அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகளும் பங்கேற்றனர்.

வெளிநாட்டு அமைச்சு

கொழும்பு

2021 ஆகஸ்ட் 31

Please follow and like us:

Close