வெசாக் பண்டிகையை முன்னிட்டு மாலைதீவில் உள்ள இலங்கைத் தூதரகத்தால் இரத்த தானம் ஏற்பாடு

 வெசாக் பண்டிகையை முன்னிட்டு மாலைதீவில் உள்ள இலங்கைத் தூதரகத்தால் இரத்த தானம் ஏற்பாடு

மாலைதீவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் வெசாக் தினத்தை முன்னிட்டு 2022 மே 14ஆந் திகதி இரத்த தான நிகழ்வை ஏற்பாடு செய்தது.

இலங்கை சமூகத்தின் பங்கேற்புடன், ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் மற்றும் இலங்கை வங்கியின் அனுசரணையுடன் இலங்கைத் தூதரகத்தால் மேற்கொள்ளப்பட்ட இத்திட்டம், முதலாவது இரத்த தானம் வழங்கும் முன்முயற்சியாகும்.

மாலைதீவின் தலைநகர் மாலேயில் உள்ள மாலைதீவு இரத்த சேவையில் (தலசீமியா மையம்) மாலைதீவு சுகாதார இராஜாங்க அமைச்சர் கலாநிதி. ஷா அப்துல்லா மஹிர் அவர்களின் தலைமையில், தூதரக ஊழியர்கள், ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸின் நாட்டு முகாமையாளர் ஃபவ்ஸான் ஃபரீட், இலங்கை வங்கியின் நாட்டு முகாமையாளர் கோவிந்த ஆரம்பத் மற்றும் இலங்கை சமூகத்தினரின் பங்குபற்றுதலுடன் இந்த ஒரு நாள் இரத்த தான நிகழ்வு நடைபெற்றது.

நிகழ்ச்சியை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய மாலைதீவு சுகாதார அமைச்சர் கலாநிதி. மாஹிர், இரத்த தானம் வழங்கும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தமைக்காக மாலைதீவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்திற்கும் மாலைதீவில் உள்ள இலங்கை சமூகத்திற்கும் மாலைதீவு அரசாங்கத்தின் உண்மையான பாராட்டுக்களைத் தெரிவித்தார்.

மருத்துவமனைகளில் அறுவைசிகிச்சைகளுக்கு மட்டுமின்றி, கணிசமான எண்ணிக்கையிலான தலசீமியா நோயாளிகளுக்கும், தொடர்ந்து ரத்தம் ஏற்றப்பட வேண்டியவர்களுக்கு, இரத்தத்தின் தேவை உள்ளது என்ற உண்மையை அவர் எடுத்துரைத்தார்.

வரவேற்புரையை வழங்கிய மாலைதீவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் ஏ.எம்.ஜே.சாதிக், குறுகிய காலத்தில் இரத்த தான நிகழ்விற்கு வருகை தந்தமைக்காக இராஜாங்க அமைச்சர் கலாநிதி மாஹிர் அவர்களுக்கு நன்றிகளைத் தெரிவித்ததுடன், மாலைதீவு மக்கள் மீதான இலங்கை சமூகத்தின் நல்லெண்ணம் மற்றும் நட்பின் அடையாளமாக இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். புத்தபெருமானின் பிறப்பு, ஞானம் மற்றும் மறைவு ஆகியவற்றைக் குறிக்கும் வெசாக் பண்டிகையை முன்னிட்டு இரத்த தானம் செய்ய முன்வந்த இலங்கை சமூகத்தினர் மற்றும் நலன் விரும்பிகளுக்கு அவர் நன்றிகளைத் தெரிவித்தார். இந்த திட்டத்திற்கு அனுசரணை வழங்கிய ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் மற்றும் மாலேயிலுள்ள இலங்கை வங்கியின் நாட்டு முகாமையாளர்களுக்கும் அவர் நன்றி தெரிவித்தார். இரு நாட்டு முகாமையாளர்களும் தமது சுருக்கமான கருத்துக்களில், எதிர்கால சமூகம் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளிலும் இலங்கை உயர்ஸ்தானிகராலயத்திற்கு தொடர்ந்து ஆதரவளிப்பதாக உறுதியளித்தனர்.

இந்த நிகழ்ச்சி மாபெரும் வெற்றி பெற்றதுடன், திட்டத்தில் பதிவு செய்திருந்த 40 தன்னார்வலர்களுக்கு மேல் இரத்த தானம் செய்த 65 தன்னார்வலர்களுக்கு இடமளிப்பதற்காக, திட்டமிடப்பட்ட நிறைவு நேரத்தை மேலும் நீடிக்க வேண்டியிருந்தது.

இலங்கை உயர்ஸ்தானிகராலயம்,

மாலே,

மாலத்தீவு

2022 மே 17

Please follow and like us:

Close